தன்னுடைய கரியர் வளர்ச்சிக்கு ஏற்ப, படிப்படியாக தன் திறமைகளையும் வளர்த்து தன்னை தகுதிப்படுத்திக்கொண்டவர் ஜோதிகா. அவ்வாறு அவர் சிறப்பாக ஜொலித்த சிறந்த பத்து கதாப்பாத்திரங்களின் பட்டியலின் பகுதி இரண்டு (குறிப்பு : இது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல)
அர்ச்சனா – ‘மொழி’

எந்தவொரு ஹீரோயினும் நடிக்கத் தயங்கும் ஒரு கதாப்பாத்திரம் இந்த ‘அர்ச்சனா’ கதாபாத்திரம். காரணம் அத்தனை சவால்கள் நிரம்பிய ஒரு வெயிட்டான கதாபாத்திரம் இது. படம் முழுக்க வாய் பேசாமலேயே சைகை மொழியினாலேயே தன்னுடைய காதல், கோபம், மகிழ்ச்சி என அனைத்துவிதமான உணர்வுகளையும் அனாயசமாக வெளிப்படுத்தி நடித்திருப்பார் ஜோதிகா.
செண்பகம் – ‘பேரழகன்’

சூர்யா –ஜோதிகா காதல் உச்சத்தில் இருந்தபோது உருவான படங்களில் இருவரும் சேர்ந்து வரும்போதெல்லாம் திரையில் கெமிஸ்ட்ரி கொப்பளித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் இருவருமே தங்களது வழக்கமானத் தோற்றங்களை மாற்றிக்கொண்டு நடித்த இந்தப் படத்தில் கூனனாக வரும் சூர்யாவுக்கு இணையாக ஜோதிகாவும் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருப்பார். பார்வையற்ற பெண்னாக வரும் ‘செண்பகம்’ பாத்திரத்திற்கான ஜோதிகாவின் மெனக்கெடல்கள் மிகப்பெரியது.
வசந்தி – ‘36 வயதினிலே’

சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் என்பது நடிகர்களுக்குப் புதிதல்ல. குறிப்பாக ஹீரோயின்களுக்கு. ஆனால் ஜோதிகாவோ இதிலும் சிறப்பு செய்திருந்தார். தனது செகண்ட் இன்னிங்க்ஸிலும் தனக்கு முக்கியத்துவம் நிரம்பிய கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதென ரூட் பிடித்தது இந்த ‘வசந்தி’ கதாப்பாத்திரம் மூலம்தான். திருமணத்திற்குப் பிறகு தனது தனித்துவத்தை இழந்துத் தவிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் என்ன ஒட்டங்களை மிக நுட்பமாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ஜோதிகா.
அக்சயா – ‘ஜாக்பாட்’

செகண்ட் இன்னிங்க்ஸ் நடிகை என்றாலோ இளம் வயதைக் கடந்துவிட்ட நடிகை என்றாலோ காட்டன் புடவை கட்டுக்கொண்டு அழுது வடியும் சினிமாக்களில் மட்டும்தான் நடிக்க வேண்டுமா ஜீன்ஸ் போட்டு குத்தாட்டமும் போடலாம், பைக் ஓட்டி செம்ம ஃபைட்டும் போடலாம் என இந்தப் படத்தில் வரும் ‘அக்சயா’ கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ஜோதிகா.
ஜோதிகா – ‘மாயாவி’

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே நிச்சயம் ஜோதிகாவை பாராட்டியேத் தீரவேண்டும். தன்னுடைய ஒரிஜினல் கதாபாத்திரமான நடிகை பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் தன்னைப் பற்றிய கிண்டல்களையும் படத்தில் இடம்பெறச் செய்து திரையுலகையே ஆச்சர்யப்படுத்தினார் ஜோதிகா. ‘நீங்க எப்பவுமே கொடுத்த காசைவிட அதிகமாத்தான் நடிப்பீங்களாமே’, ‘என் தலைவி சிம்ரன் மாதிரிலாம் உனக்கு ஆட வருமா..?’, ‘ உன் படத்துக்குலாம் போனா குவாட்டர் அடிச்சுட்டு தூங்கிடுவேன்’ என தன்னை பகடி செய்யும் விதமான பல வசனங்களை அனுமதித்து நடித்திருப்பார் ஜோ.
Also Read – Jyothika: `மாயா முதல் ஸ்மிதா வரை’ – ஜோதிகாவின் டாப் 10 ரோல்கள் (பகுதி -1)
0 Comments