ஸ்ரீகாந்த் தேவா, தமிழ் சினிமாவில் கொண்டாடப்படாத ஒரு இசையமைப்பாளர் என சொல்லலாம். குத்துப்பாடல்களின் குரு, தொடர்ச்சியாக பல ஹிட் ஆல்பம் என கொடுத்து கொண்டிருந்தவருக்கு சரியான அங்கீகாரம் கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறிதான். ஸ்ரீகாந்த் தேவா அவரது கரியரில் என்னென்ன சம்பவங்கள் செய்திருக்கிறார் என்பதைப் பற்றிதாம் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
-
1 பிதாவும் குருவும் தேவாவே!
ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, தேவா அப்பா மட்டுமில்லை; குருவும்தான். தேவாவின் பல படங்களில் உதவி இசையமைப்பாளராக வேலை பார்த்திருக்கிறார், ஸ்ரீகாந்த். பல படங்களின் பின்னணி இசையில் தேவாவுக்கு உதவியாக இருந்தவர், சில படங்களில் பாடல்களும் கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, விஜய் நடித்த பகவதி படத்தில் ஜூலை மலர்களே, கொக்கக் கோலா, ஷாயோ ஷாயோ என மூன்று பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. இந்த பழக்கத்தில்தான் ஸ்ரீகாந்த் இசையமைப்பாளரானதும் சிவகாசி படத்தில் இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார், விஜய்.
-
2 குத்துப்பாட்டாக மாறிய மெலடி
சமீபத்தில் நடந்த ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் ’நிலா அது வானத்து மேல’ பாடல் முதலில் தாலாட்டு பாடலாக இருந்ததாகவும் அது எப்படி டான்ஸ் நம்பராக மாறியது எனவும் இளையராஜா பேசியிருந்தார். தனுஷ், அந்தப் பாடலை தாலாட்டுப் பாடலாக மாற்றி பாடவும் செய்தார். அதுபோலவே ஸ்ரீகாந்த் தேவா கரியரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ’வச்சுக்க வச்சுக்கவா இடுப்புல’ என்கிற பாடல் முதலில் மெலடியாக இருந்திருக்கு. ஆல்பம் முழுவதையும் முடித்த ஸ்ரீகாந்த் தேவா, இதில், ’குத்துப்பாட்டு இல்லையே’ என இயக்குநரிடம் கேட்டு, மெலடி பாடலை குத்துப்பாடலாக மாற்றியிருக்கிறார்.
-
3 தீபாவளினா தீபாவளி பாட்டுத்தான்
புத்தாண்டு என்றால் இளமை இதோ இதோ, பொங்கல் என்றால் பொங்கலோ பொங்கல், மே தினம் என்றால் உழைப்பாளி இல்லாத நாடுதான், சுதந்திர - குடியரசு தினம் என்றால் தாயின் மணிக்கொடி என ஒவ்வொரு பண்டிகைக்கும் தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்கும். அப்படி தீபாவளி என்றால், சிவகாசி படத்தின் ’தீபாவளி, தீபாவளி’ பாடல்தான். சூப்பர்ஸ்டார் நடித்த சிவாஜி படத்திலேயே தீபாவளியைக் கொண்டாடும் காட்சியில் இந்தப் பாடலைத்தான் பயன்படுத்தி இருப்பார்கள். அந்த அளவுக்கு டிரெண்ட் செட் செய்த பாடல் இது.
-
4 மெலடி கிங்
தேவாவை எப்படி கானா ஸ்பெஷலிஸ்ட் என முத்திரை குத்தினார்களோ, அதேபோல் இவரையும் குத்து சாங் ஸ்பெஷலிஸ்ட் என் முத்திரை குத்திவிட்டார்கள். தேவாவின் இசையில் எப்படி பல சூப்பர் ஹிட் மெலடி பாடல்கள் வந்திருக்கிறதோ, அதேபோல் ஸ்ரீகாந்த்தும் பல மெலடி பாடல்களைக் கொடுத்திருக்கிறார். எம்.குமரன் படத்தில் ’நீயே நீயே’, ஜித்தன் படத்தில் ’காதலியே காதலியே’, சிவகாசி படத்தில் ’என் தெய்வத்துக்கே’, சரவணா படத்தில் ’காதல் வந்தும் சொல்லாமல்’ இப்படி படத்துக்கு ஒரு ஹிட் மெலடி என பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.
0 Comments