இயல்பான வாழ்க்கையில பலபடிகள் ஏறினா, சில படிகள் சறுக்குறது வழக்கமான ஒண்ணுதான். ஆனா, சினிமா துறையில மட்டும்தான் ஒருபடி ஏறுறவரை, இழுத்து அதள பாதாளத்துல தள்ளுறதை பல பேர் வேலையாவே வச்சிருக்காங்க. அப்போதான் டி.வி மூலமா பிரபலமாகி நல்ல நிலைக்கு வந்துகிட்டிருந்தார், ஒரு காமெடி நடிகர். ஒருபடத்துல காமெடி ரொம்ப நல்லா பேசப்படுட்டுகிட்டிருந்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும்னு நினைச்சுக்கிட்டிருந்தார், அவர். ஆனா, நிலைமை தலைகீழ். படங்கள் ஏதும் வரல. அப்படியே ரெண்டு வருஷம் ஓடுது. அப்போ எதார்த்தமா பார்க்குற ஒரு ப்ரொடியூசர் ‘ஏங்க நீங்க ஒரு நாளைக்கு 6 லட்சம் கேட்குறீங்களாமே’னு கேட்க, அப்போதான் விஷயத்தை தெரிஞ்சுக்குறார், அந்த காமெடி நடிகர். அதுக்குள்ள 18 படங்கள் கையை விட்டு போயிடுச்சு. அதுக்கப்பறமா, சுதாரிச்சு படவாய்ப்புக்குள்ள தக்க வைச்சிருக்கார். அந்த காமெடி நடிகர் பெயர், இமான் அண்ணாச்சி. அவரோட சினிமா பயணத்தைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

ஆரம்பக் காலகட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல்ல பிறந்தவர். இமான் அண்ணாச்சியின் அப்பா சி.பா ஆதித்தனார்க்கு வலதுகரமாக இருந்தவர். சிறந்த மேடைப்பேச்சாளராகவும் இருந்தவர். அப்பாவின் மறைவுக்குப் பின்னர் குடும்ப சூழலால் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்கிட்ட கவுண்டர் போட்டு கலாய்க்கிறதுனு வேலையை கலகலப்பா பார்த்துக்கிட்டிருந்தார். அப்போ இவர் வேலை செய்யுற கடைக்கு வர்ற கஸ்டமர் ஒருத்தர், ‘நீ இங்க இருக்க வேண்டிய ஆள் கிடையாது. ஒழுங்கா சினிமாவுக்கு போ’னு சொல்ல, அம்மாவிடம் சென்னை மளிகைக் கடைல வேலை கிடைச்சிருக்குனு சொல்லிட்டு கிளம்பி சென்னை வந்தார்.
சென்னை வந்து இறங்கியவுடன் சினிமா கனவுகள் சிதைய ஆரம்பமாகின. ரியாலிட்டியை புரிந்து கொள்கிறார். வாய்ப்புகளுக்காக அலைந்து திரிகிறார். முதல் இரண்டு நாள் பனகல் பார்க்கிலேயே படுத்து உறங்குகிறார். வேறு வழி இல்லாமல் ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்கிறார். அங்கு ஒரு மாதம் வேலை செய்கிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை பல இடங்களுக்கு போய் வருவதை கண்டுபிடித்து, சினிமாவில் நடிக்கத்தான் வந்திருக்கிறார் என்கிற உண்மை ஓனருக்கு தெரிந்துவிட வேலையில் இருந்து அனுப்பிவிட்டார். அதன் பின் ஒரு கேமரா கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கேயும் சில நாட்கள் ஓட, வேலையை விட்டார், இமான். அதன் பிறகுதான் அவரது முக்கியமான நண்பர் ராஜாவைச் சந்தித்தார்.
Also Read -எல்லாருமே இப்படி பாடுனா எப்படி… சூப்பர் சிங்கரில் நடந்த தரமான சம்பவங்கள்!
18 வருடங்கள் காய்கறி விற்பனை!
இப்படி ஆரம்பித்த இவரின் வாழ்க்கை, இன்றைக்கு விடிந்துவிடும், நாளைக்கு விடிந்துவிடும் என எதிர்பார்ப்போடு நகர்ந்தது. குடும்பத்தில் அம்மாவுக்கு பணம் அனுப்ப18 வருடங்கள் காய்கறி வியாபாரம் பார்க்கிறார். இடையில் திருமணம் நடக்கிறது. 18 வருடங்களுக்குப் பின்னர், ஒரு டிவியில் வாய்ப்பு கிடைக்கிறது. சுத்தமான தமிழில் பேசி அசத்தினார், இமான் அண்ணாச்சி. அடுத்ததாக இயக்குநர் கெளதமன் இயக்கிய சந்தனக்காடு தொடரில் வாய்ப்பு கிடைக்க, ஜார்ஜ் மரியானுடன் கைகோர்த்து காமெடியில் கலக்கினார். அடுத்ததாக விஜய் டிவி கலக்கப்போவது யாரு, சன் டிவியின் அசத்தப்போவது யாரு உள்ளிட்ட சீசன்களில் கலந்து கொண்டு
கலக்கினார். அதன் பிறகு சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி, பிக்பாஸிலும் அசத்தினார், இமான் அண்ணாச்சி.

ஹோண்டா ஆக்டீவால சான்ஸ் தேடிட்டிருந்த இவரை கார் வாங்கி வாழ்க்கைல உயர வச்சார் ஒரு தேசிய இயக்குநர். யார் அவர்னு யோசிங்க. அதை வீடியோவோட கடைசில சொல்றேன்.
இமான் சந்தித்த துரோகங்கள்!
தலைநகரம் படம் முடிந்திருந்த நேரம் அது. அசத்தப்போவது யாரு செட்டுக்கு வருகை தந்திருந்தார், இயக்குநர் விக்ரமன். அங்கிருந்த திறமையான போட்டியாளர்களைப் பார்த்து உங்களில் சிலரை என் படத்தில் பயன்படுத்துவேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்றார். சொன்னபடியே எல்லோரையும் அலுவலகத்துக்கு வரச் சொன்னார். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து காலைல11 மணிக்கு கிளம்பலாம் என முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் வழக்கம்போல காலை 11 மணிக்கு நண்பர்கள் சொன்ன ஸ்பாட்டுக்கு வர்றார். அங்கே யாருமே இல்லை. பக்கத்திலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவங்க 9 மணிக்கே கிளம்பிட்டாங்களே என்ற பதில் கிடைக்க, ஏமாத்திட்டாங்களேனு மனசுல வச்சுக்கிட்டு, சைக்கிளை வேக வேகமாக மிதித்து, விக்ரமன் அலுவலகத்துக்கு வந்துவிட்டார். இவரைப் பார்த்த மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி. எல்லோரையும் பார்த்துவிட்டு, அலுவலகத்துக்குள் நுழைகிறார். விக்ரமன் ஒரு காட்சி ஒன்றை நடித்துக் காட்டச் சொல்லி கேட்க, அதை வித்தியாசமாக நடித்துக் காட்டி, அவரிடம் வாய்ப்பும் பெற்றார். அதன் பின்னர் அவர் இயக்கிய சென்னைக் காதல் படத்திலும் நடித்தார். அதேபோல கெரியரின் உச்சத்துக்கு போகும் பயணத்திலும் சம்பளம் அதிகமாக கேட்கிறார் எனச் சொல்லியும் அவரது கெரியருக்கு முட்டுக்கட்டைபோட நினைத்தனர், சிலர். இப்படி பல சம்பவங்களை அடுக்கிட்டே போகலாம்.
கண்கள்தான் பலம்!
இமான் அண்ணாச்சியைப் பொறுத்தவரைக்கும் சின்ன குழந்தைகள்ல இருந்து பெரிய ஆட்கள் வரைக்கும் பிடிக்கும். அவ்வளவு ஏன் காக்கிச்சட்டை படத்துல கூட சிவகார்த்திகேயனே இவரோட வாய்ஸை மிமிக்ரி செய்திருப்பார். அந்த அளவுக்கு நகைச்சுவையைத் தரக் கூடிய குரல் அது. இந்த குரலில் கண்டிப்பும் இருக்கும். அதே மாதிரி கண்களை உருட்டி அவர் தரக்கூடிய எக்ஸ்பிரசன் அவரோட நடிப்புக்கு இன்னும் பலம் சேர்க்குற மாதிரி இருக்கும். அதேபோல கோலிசோடாவில் குடிகாரராக இவர் கொடுக்கும் கவுண்டர்களும், எமோஷன்களும் இமான் அண்ணாச்சியின் நல்ல நடிப்பை வெளியே கொண்டு வந்தது.
விளம்பரம் கொடுத்த கோடி ரூபாய்!
இவர் செஞ்ச டேபிள்மேட் விளம்பரம் தெறி ஹிட். அந்த டேபிள்மேட் நிறுவன ஓனர் யார் யாரையோ வச்சு விளம்பரம் எடுத்துப் பார்த்தார், சரியா வொர்க் ஆகலை. அப்போ இமான் அண்ணாச்சி நியாபகம் வர, இவரை வைத்து ஒரு விளம்பரம் எடுத்துப் பார்த்தார். மொத்தமே 4 வரிதான் டைலாக், விளம்பரம் பேய் ஹிட்டடித்தது. கிராமங்கள் வரை செம ரீச். அந்த ஓனருக்கு மாசம் 40,000 டேபிள்மேட்கள் விற்பனை செய்யும் அளவுக்கு விளம்பரம் சென்று சேர்ந்தது. இதன் மூலம் கோடிக்கணக்கில் அவருக்கு வருமானம் கொட்ட ஆரம்பித்தது. இதற்குப் பின்னர் பல விளம்பரங்கள் இமான் அண்ணாச்சியைத் தேடி வந்தன. எல்லாமே ஹிட்டுதான்.

இயக்குநர்களின் ஃபேவரிட்!
ஒருமுறை கமிட்டாகும் இயக்குநர்களின் படங்களில் மறுபடியும் நிச்சயம் இடம்பிடிப்பார், இமான். அதுவும் இமான் என்றால் இயக்குநர் ஹரிக்கு அவ்வளவு இஷ்டம். ஹரி படம் ஆரம்பிக்கிறாரோ, அதில் நிச்சயம் இமான் அண்ணாச்சி இருப்பார்னு சொல்ற அளவுக்கு நெருக்கமாக இருப்பார். அதேபோல நய்யாண்டியில் இவரது நடிப்பைப் பார்த்து மரியான், தொடரி ஆகிய படங்கள்ல தனுஷ் கூப்பிட்டு நடிக்க வைச்சார். அதேபோல இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய நீர்ப்பறவை மூலம் வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்தார். வேட்டைக்காரன், கோலிசோடா, பூஜை, பட்டையக் கிளப்பணும் பாண்டியா, காக்கிசட்டை, நிமிர்னு பல படங்கள் வெரைட்டியா கொடுத்திருக்கார், இமான் அண்ணாச்சி.
வீடியோவோட இடையில ஒரு தேசிய விருது இயக்குநர் ஒருத்தர் இமான் அண்ணாச்சியை கார் வாங்க வச்சார்னு சொன்னேன்ல, அது நம்ம சீனு ராமசாமிதான். இவர்தான் கார் வாங்கிக்கோ, அப்போதான் வாய்ப்பு நல்லா வரும். இல்லைனா, கடைசி வரைக்கும் ஆக்டிவாலதான் போகணும்னு சொல்ல, உடனே கார் புக் பண்ணி வாங்கியிருக்கார், இமான் அண்ணாச்சி. சொல்லப்போனா, அதுக்கு அப்புறம்தான் அடுத்தடுத்து வாய்ப்புகளும் வந்துச்சு.
எனக்கு இவர் நடிப்புல பிடிச்சது கோலிசோட மந்திரவாதி கேரெக்டர்தான், உங்களுக்கு எந்த கேரெக்டர் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.
0 Comments