கேப்டன் விஜயகாந்த் என்றாலே அவரது ஆக்சன் காட்சிகள்தான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஒரு காலை தரையில் ஊன்றிக்கொண்டு தன் இன்னொரு காலால் கேப்டன் அவரது எதிரிகளை சுழட்டி அடிக்கும் காட்சிகளை விசிலடித்து ரசித்திடாத 90-ஸ் கிட்ஸுகளே இருக்கமுடியாது. அப்படி அவர் தன் ஆக்சன் காட்சிகளில் மிளிர்ந்திட எந்த அளவுக்கு மெனக்கெடுவார் தெரியுமா..?
ஒரு நடிகனுக்கு தன்னுடைய ரசிகர்கள் எதனால் தன்னை ரசிக்கிறார்கள் என்கிற சூட்சுமம் முதலில் தெரிந்திருக்கவேண்டும். பொதுவாக விஜயகாந்த்துக்கு பி & சி செண்டர் எனப்படும் சிறு நகர மற்றும் கிராமத்துப் பகுதியில்தான் அதிக ரசிகர்கள். அவர்களின் ஜாக்கி சான் விஜயகாந்த்தான். மற்ற எந்த ஹீரோக்களுக்கும் இல்லாத அளவு, அடித்தால் பத்து பேர் சுருண்டு விழுந்துவிடுவார்கள் என நம்பக்கூடிய உடல் அமைப்பும் ஆகிருதியும் விஜயகாந்துக்கு இருந்ததை அவர்கள் மிகவும் ரசித்தார்கள். இதை நன்குப் புரிந்துகொண்ட விஜயகாந்த் அதற்கேற்பதான் தன்னுடைய படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.
முதலில் கதைக் கேட்கும்போதே எத்தனை இடத்தில் சண்டைக்காட்சிகள் வருகிறது எனக் கணக்கு பண்ணிவிடும் விஜயகாந்த், தான் எதிர்பார்ப்பதைவிட குறைவான எண்ணிக்கையில் இருந்தால் அப்போதே அதற்கேற்ப திரைக்கதையை அமைக்கும்படி கூறிடுவார். அதேபோல, ‘சின்னக் கவுண்டர்’, ‘வானத்தைப் போல’ மாதிரியான சாந்தமான குடும்பப் படங்களாக இருந்தாலும் அதிலும் தன் ரசிகர்களுக்கு திருப்தி தரக்கூடியவகையில் போதுமான சண்டைக்காட்சிகள் வரும்படி பார்த்துக்கொள்வார்.
பொதுவாக மற்ற ஹீரோக்களுக்கு சண்டைக்காட்சிகளுக்கான ஷூட்டிங் என்றால் கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்யும். ஆனால் விஜயகாந்த் ஒருவர் மட்டுமே சண்டைக்காட்சிகளுக்கான ஷூட் என்றால் மிக உற்சாகமாக ஸ்பாட்டுக்கு வருவார். அதேபோல அப்போதெல்லாம் மற்ற படங்களில் ஒரு ஃபைட் சீக்குவென்ஸானது 3 நாட்களில் எடுக்கிறார்கள் என்றால் விஜயகாந்த் படத்தில் வரும் ஒவ்வொரு ஃபைட் சீக்குவென்ஸ்களும் 5 நாட்களுக்கு குறையாமல் இருக்கும். குறைந்த நாட்களில் சண்டைக்காட்சிகளை ஷூட் செய்து முடித்தால் அவருக்கு கோபம் வந்துவிடும். ஒரு சில படங்களில் பட்ஜெட் காரணமாக சில சண்டைக்காட்சிகளை ஷூட் செய்யமுடியாமல் போனபோதுகூட தனது சொந்த செலவில் அந்த சண்டைக்காட்சிகளை படமாக்கி படத்தில் இணைக்க வைத்திருக்கிறார் விஜயகாந்த்.
அதேபோல, விஜயகாந்த் பட சண்டைக்காட்சி என்றால் ஷூட்டிங்குக்கு வரும் ஃபைட்டர்கள் படு குஷியாகிவிடுவார்கள். அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்து தங்களது அதிக வருவாய் கிடைக்கும் என்பது ஒரு காரணம் என்றாலும் இன்னொருபுறம் சண்டைக்காட்சி படமாக்கலின் நுட்பங்களை முறையாகக் கற்றவர் விஜயகாந்த் என்பதால் அவரால் என்றைக்குமே எதிராளிகளுக்கு ஆபத்து இல்லாமல் அடிப்பதுபோல் நடிப்பார் என்பதும் முக்கிய காரணம். மேலும் சண்டைக்காட்சிகளின் ஷுட்டிங் முடியும் அன்று விஜயகாந்த்தின் தரப்பிலிருந்து தனிப்பட்ட அளவில் ஃபைட்டர்களுக்கு சிறப்பான கவனிப்பும் நிச்சயம் இருக்கும்.
அதேபோல முடிந்த அளவுக்கு டூப் இல்லாமல் படமாக்குவதைத்தான் விஜயகாந்த் விரும்புவார். ரிஸ்க் வேண்டுமான என இயக்குநர்கள் தயங்கினாலும் ‘ஆடியன்ஸுக்கு டூப்புக்கும் ஒரிஜினலுக்கும் வித்தியாசம் தெரியும். நானே பண்ணியிருக்கேன்னா அவங்களுக்கு இன்னும் பிடிக்கும்ல’ என்பாராம். பொதுவாகவே ஷூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன் இல்லாதபோதும் செட்டிலேயே ஒரு மூலையில் ஒரு உயரமான ஸ்டூலில் கால் முட்டிகளில் கைகளை ஊன்றி உட்கார்ந்து அங்கு நடப்பதை உன்னிப்பாக கவனிக்கும் விஜயகாந்த் ஆக்சன் காட்சிகள் எடுக்கும் நாட்களென்றால் கேட்கவே வேண்டாம். ஒரு உதவி இயக்குநர்போல களத்தில் நின்று தன்னுடைய ஆலோசனைகளையும் தவறாமல் எடுத்துவைப்பார். பம்பரமாக சுற்றி வருவார்.
அப்படி விஜயகாந்த் பங்கேற்ற ஆக்சன் காட்சிகள் அனைத்திலுமே அவருடைய நுட்பமான பங்கேற்பு இருந்ததால்தான் அவரது சண்டைக்காட்சிகள் அனைத்தும் இன்றைக்கும் மாஸ் குறையாமல் கெத்து காட்டி அனைவரையும் ஈர்த்துவருகிறது.