தமிழ் சினிமாவில் டான்ஸுக்கு அத்தாரிட்டி விஜய்தான் என்றாகிவிட்டது. இப்போதெல்லாம் அவருக்கு டான்ஸ் கொரியோகிராஃபி செய்ய, ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் முன்பும் நடன இயக்குநரும் இயக்குநரும் பிரத்யேக டிஸ்கஷன் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு விஜய்யின் டான்ஸ் என்பது அவரது படங்களில் தற்போது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில், தற்போதுள்ள இளம் நடன இயக்குனர்களில் விஜய்யின் மனதுக்கு மிக நெருக்கமான நடன இயக்குநர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா..?
ஷோபி
விஜய்யின் ஆரம்பகாலகட்டத்தில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்தின் குரூப்பில், குரூப் டான்ஸராக ஆடியவர் ஷோபி. அப்போதே விஜய்யின் குட்புக்கிலும் இடம்பிடித்தவர். ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் வரும் ‘ஆழ்வார்பேட்ட ஆண்டவா’ பாடல் மூலம் மாஸ்டராக ஆன ஷோபிக்கு, இரண்டாவது பட வாய்ப்பாக விஜய் ‘திருப்பாச்சி’ பட வாய்ப்பை வழங்கினார். அப்போதிருந்து விஜய்யின் பெரும்பாலான படங்களில் நடனம் அமைத்துவரும் ஷோபி, தற்போதெல்லாம் தொடர்ந்து விஜய்யின் அனைத்து படங்களிலும் பணியாற்றிவருகிறார். தன்னுடைய மாஸ் இமேஜூக்கு ஏற்றவாறு இவர் அமைக்கும் நடன அமைப்புகள் விஜய்க்கு ரொம்பவே இஷ்டம்.
சில ஹிட்ஸ் : ‘பக்கம் வந்து முத்தங்கள் தா’ (கத்தி), ‘ஆளப்போறான் தமிழன் (மெர்சல்), ‘சிம்டாங்காரன்’ (சர்கார்), ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் (பிகில்)
தினேஷ்
ஷோபியை போலவே இவரும் ராஜு சுந்தரத்தின் குரூப்பில் குரூப் டான்ஸராக இருந்தபோதே விஜய்யிடம் நட்பானவர். விஜய்தான் இவரை தனது ‘ஷாஜகான்’ படத்தில் வரும் ‘மின்னலை பிடித்து’ பாடல் மூலம் மாஸ்டர் ஆக்கினார். அப்போதிருந்து ‘யூத்’, ‘போக்கிரி’, ‘வில்லு’ என ‘மாஸ்டர்’ வரை விஜய்யின் பெரும்பாலான படங்களில் பணியாற்றியிருக்கிறார் தினேஷ். அலட்டிக்காமல் ஆடுவதுபோலிருக்கும் இவரது ஸ்பெஷல் மூவ்மென்ட்ஸ் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.
சில ஹிட்ஸ் :’ஆல் தோட்ட பூபதி’ (யூத்), ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா (தலைவா), ‘வாத்தி கம்மிங்’ & ‘குட்டி ஸ்டோரி’ (மாஸ்டர்)
ஸ்ரீதர்
இவரும் ராஜூ சுந்தரத்தின் டீமில் இருந்தபோது விஜய்யிடம் நட்பானவர்தான். ‘மதுர’ படத்தில் வரும் ‘மச்சான் பேரு மதுர’ பாடல் மூலம் விஜய்யுடன் பயணிக்கத் தொடங்கியவர் தற்போதுவரை அவரது பெரும்பாலான பாடல்களில் பணியாற்றிவிடுகிறார். விஜய்யே தன் இயக்குநர்களிடம் சிபாரிசு செய்யும் ஒரு சில நடன இயக்குநர்களில் இவரும் ஒருவர். ஸ்ரீதர் தன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்தும் சிக்னேச்சர் ஸ்டெப்ஸ் எல்லாமே விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். இவர் நடனம் அமைத்த விஜய்யின் பாடல்கள் எல்லாவற்றிலும் செம்ம போஷர் ஒன்று ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும்.
சில ஹிட்ஸ் : ‘தமிழ் பசங்க’ (தலைவா), ‘அலைக்கா லைக்கா’ (துப்பாக்கி), ‘மாமா மாமா ட்ரீட்டு’ (ஜில்லா), ‘ஜித்து ஜில்லாடி’ (தெறி), ‘ஓம்.எம்.ஜி பொண்ணு’ (சர்கார்)
அசோக் ராஜா
விஜய்யின் கரியரில் அமைந்த பெஸ்ட் மாஸ் இண்ட்ரோ பாடல்களில் பெரும்பாலானவை அசோக் ராஜா நடனம் அமைத்ததாகத்தான் இருக்கும். ‘’திருப்பாச்சி’ படத்தில் இடம்பெற்ற ‘நீ எந்த ஊரு’ பாடலில் தொடங்கிய இந்தக் கூட்டணி தொடர்ந்து அவரது அடுத்த பல படங்களின் இண்ட்ரோ பாடல்களுக்கு பணியாற்றிவந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த கூட்டணி ஏனோ இணையாமல் இருந்துவருகிறது.
சில ஹிட்ஸ் : ‘வாடா வாடா தோழா’ (சிவகாசி), ‘போக்கிரி பொங்கல்’ (போக்கிரி), ‘ராமா ராமா’ (வில்லு), ‘மதுரைக்கு போகாதடி’ (அழகிய தமிழ்மகன்), ‘சொன்னா புரியாது’ (வேலாயுதம்).
ஜானி
தெலுங்கு பூமியைச் சேர்ந்த ஜானியின் நடன அசைவுகள் அங்கு மிக பிரபலம். இவர் நடனம் அமைத்த ‘புட்ட பொம்மா’ பாடல் ஒன்று போதும் இவர் யாரென்று சொல்ல. தமிழில் `குலேபா’ (குலேபகாவலி), ‘காந்த கண்ணழகி’ (நம்ம வீட்டு பிள்ளை), ‘சில் ப்ரோ’ (பட்டாஸ்) போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த இவர் தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் வரும் ஒரு செம்ம குத்து பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். இவர் வடிவமைக்கக்கூடிய, பார்க்க எளிதானதுபோலவே தோன்றும் மிக கஷ்டமான மூவ்மெண்ட்கள் விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். இனிவரும் விஜய்யின் படங்களில் ஜானியின் நடனம் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் ‘பீஸ்ட்’ படக்குழுவினர்.
Also Read : `ஏ.ஆர்.ரஹ்மான் யாருன்னே தெரியாது’ – தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பேச்சுக்குக் குவியும் கண்டனங்கள்!