பொதுவாக விஜய்யின் சினிமா கரியரை ‘திருமலை’க்கு முன், ‘திருமலை’க்குப் பின் என்றுதான் வரையறை செய்வார்கள். அவரது ஆக்ஷன் இமேஜ் மாற்றத்திற்கு வேண்டுமானால் அந்த வரையறை சரியாக இருக்கலாம். ஆனால், தற்போது நாம் பார்க்கும் சூப்பர் ஸ்டார் விஜய்யை அடையாளப்படுத்தியது என்னவோ அவரது துப்பாக்கி’ படம்தான். அதுவரை ஒரு இளம் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துவந்த விஜய்க்கு
துப்பாக்கி’ படத்துக்குப் பிறகுதான் சூப்பர் ஸ்டார் அம்சங்கள் கொண்ட கதைகள் எழுதப்பட்டதன. அதிலிருந்து மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தொடர்ந்து இளம் இயக்குநர்களுடன் மட்டுமே கைகோர்த்து தன்னுடைய கரியரையும் மார்க்கெட் எல்லையும் படு விஸ்தாரமாக்கியிருக்கிறார் விஜய்.
2012 தீபாவளிக்கு வெளியானது `துப்பாக்கி’. ஏ.ஆர்,முருகதாஸூடன் விஜய் முதன்முறையாக இணைகிறார் என்றதுமே ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்பார்ப்புக்கு சிறிதும் குறைவைக்காமல் மாபெரும் ஹிட்டடித்து தென்னிந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது அந்தப் படம். இப்படியொரு வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக இவருடன் இணைவார் அவருடன் இணைவார் என மீடியாவில் கிசுகிசுக்கப்பட, யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தேர்ந்தெடுத்தது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை. இத்தனைக்கும் அவரது முந்தைய படமான `தாண்டவம்’ அட்டர் ஃப்ளாப். பெரிய இயக்குநர்கள் இயக்கத்தில் உருவான `துப்பாக்கி’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் விஜய் சில அசௌகரியங்களை உணர்ந்ததாலேயே அவர் இனி பெரிய இயக்குநர்களுடன் இணைந்து வேலைசெய்யப்போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக அப்போது திரையுலகில் பேசப்பட்டது. மேலும் ‘துப்பாக்கி’ படத்தின் ஓப்பன் ஹிட், அவரை ஓவர்நைட்டில் கரியர் டாப்புக்கு கொண்டுசெல்லவே இனி, ‘என் நாடு என் மக்கள்’ என விஜய்யை சிந்திக்கவைத்தது.
`தலைவா’ படம் ஷூட்டிங்கில் இருக்கிறது. சரி, இதன்பிறகு எந்த இளம் இயக்குநருடன் விஜய் இணையப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, ‘முருகா’ என்னும் படத்தின் தோல்விக்குப் பிறகு `வேலாயுதம்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிவந்த நேசனை பிக் செய்து ஜெர்க் கொடுத்தார் விஜய். இது விஜய்யின் ஓவர் கான்ஃபிடன்ஸைக் காட்டுக்கிறது என விமர்சித்தனர் அப்போதைய திரையுலக நக்கீரன்கள். அவர்களின் கணிப்புபோலவே ‘தலைவா’ , ‘ஜில்லா’ இந்த இரண்டுப் படங்களும் வெற்றிப் படங்களாகவும் இல்லாமல் தோல்விப் படங்களாகவும் இல்லாமல் வசூல் அளவில் மட்டுமே தப்பித்தது விஜய்யை கொஞ்சம் யோசிக்கத்தான் வைத்தது. (இதில் ‘தலைவா’ சந்தித்த அரசியல் பிரச்னைகள் தனிக்கதை).
அரசியலில் மட்டுமா பிரிந்தவர்கள் கூடுவார்களா என்ன? விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் இடையே இருந்த ஒருசில கருத்துவேறுபாடுகளை ‘துப்பாக்கி’ படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு சற்று நிவர்த்தி செய்திருந்தது. அதன் அடிப்படையில் இருவரும் சில சமரசங்கள் செய்துகொண்டு ‘கத்தி’ படத்தில் மீண்டும் இணைந்து அடுத்த மெகா ஹிட்டைக் கொடுத்தனர். அந்தப் படத்துக்குப் பிறகு விஜய், ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு வரிசையாகத் தோல்விகளை மட்டுமே கொடுத்துவந்த சிம்புதேவனைத் தேர்ந்தெடுத்து சர்ப்பரைஸ் கொடுத்தார். இந்தக் கூட்டணியின் ‘புலி’ படமானது ரசிகர்களைக் கவர மறுத்து விஜய்யின் கரியரில் மிகப்பெரிய தோல்விப் படங்களின் லிஸ்டில் ஒன்றாக சேர்ந்தது.
‘புலி’ படக் காயத்துக்கு ஒத்தடமாக வந்தது அட்லியுடன் விஜய் இணைகிறார் என்ற அறிவிப்பு. ‘ராஜா ராணி’ என்ற ரொமாண்டிக் படம் தந்த இயக்குநருடன் விஜய் இணைகிறார் என்றதும், நிச்சயம் இதுவொரு வித்தியாசமான படமாக இருக்குமென்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இப்போது எப்படி ‘மாஸ்டர்’ படத்துக்கும் ‘தளபதி 65’ படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு கூடியதோ அப்போது அப்படி ‘தெறி’ படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. அந்தவகையில் அட்லி விஜய்யையும் அவரது ரசிகர்களையும் ஏமாற்றிவிடாமல் விஜய்யின் ஃபேவரைட் டைரக்டர்களின் லிஸ்டில் சேர்ந்தார்.
அடுத்தாக விஜய் செய்த அறிவிப்புதான் ‘சுறா’ பட அறிவிப்புக்குப் பிறகு அவரது ரசிகர்களுக்கே சற்று கசப்பான ஒரு அப்டேட்டாக இருந்தது. `அழகிய தமிழ்மகன்’ படம் தந்த பரதனுடன் விஜய் மீண்டும் இணைகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமுதலே படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு எகிறாமல் போகவே படமும் அதுபோலவே பெரிய வெற்றிபெறாமல் வசூலிலும் ரொம்பவும் போராடியது.
இதைத்தொடர்ந்து, தன்னுடைய கரியர் இனி ரிஸ்க் எடுக்கும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட விஜய், ‘மெர்சல்’, ‘சர்கார்’, ‘பிகில்’ என தனது ஹிட் காம்போக்களுடன் இணைந்து சேஃப் கேம் ஆடினார் விஜய். இதில் ‘மெர்சல்’ படம் அவரது இமேஜை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றதுடன் அவரது பிஸினஸையும் எகிறச் செய்தது. தொடர்ந்து வந்த ‘சர்கார்’, ‘பிகில்’ இரண்டும் கதையளவில் பெரிதாக இல்லையென்றாலும் தமிழ் திரையுலகமே அதுவரை காணாத மிகப்பெரிய ஓப்பனிங்கையும் பிஸினஸையும் செய்தன.
இந்த காம்போக்களும் தனது ரசிகர்களுக்கு சலித்துவிட்டது என்பதைக் கணித்த விஜய், இனி மீண்டும் இளம் இயக்குநர்களுடன் இணைவதுதான் சரி, அதேசமயம் தனது முந்தைய படங்கள்போல அவை கசப்பான அனுபவமாகிவிடக் கூடாது எனத் தீர்மானித்தார். மேலும் தான் அப்படி இணையப்போகும் இயக்குநர்கள் நவீன 2k ரசிகர்களுக்கும் தன்னைக் கொண்டு சேர்க்கக்கூடியவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கரியர் போக்கை வடிவமைக்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டுமென முடிவெடுத்தார். அதன்படி ‘பிகில்’ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும்போதே ‘அருவி’ பட இயக்குநர் தொடங்கி அப்போது சென்சேஷனாலாக இருந்த ஓரிரு படங்கள் இயக்கிய பலரிடம் கதைக் கேட்டார். அவர்களில் ‘மாநகரம்’ என்ற சிறு பட்ஜெட் படம் தந்த லோகேஷ் கனகராஜூக்கு லக் அடித்தது.
லோகேஷ் கனகராஜ் தந்த ‘மாஸ்டர்’ சூப்பர் ஹிட்டானது என்பதைக் கடந்து அதில் வேறொரு பரிணாமத்தில் விஜய்யை பார்க்க முடிந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே அவரது புது ரசிகர்களுக்கும் செம்ம எனர்ஜியைத் தந்தது. அடுத்து தற்போது ‘கோலமாவு கோகிலா’ எனும் டார்க் காமெடி படம் தந்த நெல்சனுடன் இணைந்து தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்கும் தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இனிவரும் காலங்களிலும் விஜய் இதுபோலவே, தன்னுடைய ரூட்டை சரியாக வடிவமைத்து கொண்டு செல்லும் திறன்மிக்க போன்ற இளம் இயக்குநர்களுடன் மட்டுமே பயணிக்கவிருப்பதுதான் விஜய்யின் திட்டமாம். அவருடைய வெயிட்டிங் லிஸ்டிங்கில் இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், மகிழ் திருமேனி, சுதா கொங்கரா போன்ற இயக்குநர்களின் பட்டியலும் அதைத்தான் உறுதி செய்கிறது. அடிச்சு ஆடுங்க தளபதி.
Also Read : ஓவியர் கோபுலு: போகோ சேனல் முதல் 1950-களின் மீம் கிரியேட்டர் வரை… 7 சுவாரஸ்யங்கள்!