சந்தோஷ், நவ்ஸ் மற்றும் ஷான்

நீயே ஒளி… சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து கலக்கிய Navz-47, Shan Vincent de Paul – யார் இவங்க?

இயக்குநர் பா.ரஞ்சத்தின் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் வரும் ஜூலை 22-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் `சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இருந்து `நீயே ஒளி’ என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலானது ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப் பாடலை ஷான் வின்சென்ட் டி பால், நவ்ஸ் 47 மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். யூ டியூப் டிரெண்டிங்கிலும் இந்தப் பாடல் இடம்பிடித்துள்ளது. இதனையடுத்து, எஸ்.வி.டி.பி மற்றும் நவ்ஸ் 47 ஆகியோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சரி.. யார் இவங்க? இவங்களைப் பத்திதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.

யார் இந்த நவ்ஸ் 47?

நவீனி அதனாசியஸ் பிலிப் என்பவர் கர்நாடக இசையை கற்க ஆரம்பித்த காலத்தில் ஒருநாள் தலை முடியை லூசாக விட்டு சென்றுள்ளார். அன்றைக்கு அவருடைய ஆசிரியர் நவீனியை கடுமையாக திட்டியுள்ளார். அதற்கு அடுத்தநாள் நவீனி தன்னுடைய தலை முடியை ஆஃப்ரிகன் ஸ்டைலில் பின்னி சென்றுள்ளார். அதற்கும் அவரது ஆசிரியர் கடுமையாக திட்டியுள்ளார். இதனை நவீனி எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆசிரியரை எதிர்த்து பேசியுள்ளார். அதற்காக வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டாள். கடைசியாக இசையை கற்பதற்காக நவீனி வகுப்புக்கு சென்ற சம்பவம் அதுதான். அதன்பிறகு, தானாக இசையை கற்க ஆரம்பித்தார். இன்றைக்க இன்டிபென்டன்ட் மியூசிக்கில் முக்கியமான முகமாக நவீனி உள்ளார். அந்த துறையில் நம்பிக்கையளிக்கும் நட்சத்திரமாகவும் உள்ளார். அந்த நவீனி வேறு யாருமல்ல. நவ்ஸ் 47 தான் அவர். 

நவ்ஸ் 47
நவ்ஸ் 47

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர், நவ்ஸ் 47. அந்நாட்டில் நடந்த இனப்படுகொலையின் போது அங்கிருந்து தப்பித்து அகதிகளாக அவரது பெற்றோர்களுடன் சேர்ந்து கனடாக்கு சென்றார். இன்றும்கூட அவரது குடும்பத்தினர் உலகின் பல பகுதிகளிலும் சிதறி கிடக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாவ்ஸ்க்கு அதிகம் நினைவில் இல்லை. துரதிஷ்டவசமாக, கனடாவிலும் அவருக்கு நாள்கள் நல்லதாக அமையவில்லை. அவருடைய பள்ளி நாள்கள் குறித்து நாவ்ஸ் பேசும்போது, “நான் அவர்களைப் போல இல்லை என்பதால் பள்ளியில் மிகவும் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டேன். நிறைய இனவெறிகளை எதிர்கொண்டேன். இதனை எதிர்த்துப் போராடுவதற்கு இசை என்பது மிகப்பெரிய ஆயுதமாக உதவியது” என்று தெரிவித்தார். தனது தாய்நிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வாழ்ந்தபோதும் தனது தாய்மொழியுடனான தொடர்பை ஒருபோதும் இழக்கவில்லை.

நாவ்ஸ், தன்னுடைய பாடல்களை தமிழ் மொழியில் மட்டுமே இசையமைக்க முயற்சி செய்கிறார். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பான்மையான காலங்கள் தாய்நாட்டில் இருந்து விலகி வாழ்ந்த ஒருவருக்கு இது மிகவும் அசாதாரணமான விஷயம் ஆகும். தமிழ் மொழியுடனான பிணைப்புப் பற்றி நாவ்ஸ், “என்னுடைய அம்மா ஆர்.ஜேவாக பணியாற்றினார். தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்துக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். எனவே, நான் தமிழ் மற்றும் அதன் கலாசாரம் உடனான தொடர்பை ஒருபோதும் இழக்கவில்லை. எங்களுடைய வீட்டில் தமிழ் மொழி பேச மட்டுமே அனுமதி. ஆங்கிலம் பேசவோ அல்லது பிரெஞ்ச் பேசவோ அனுமதி இல்லை. தமிழ் செய்தித்தாள்களைப் படித்து பயிற்சிகளை எடுப்பேன். இதனையடுத்து, தமிழில் சிந்திக்கவும் எழுதவும் தொடங்கினேன். இயற்கையாகவே என்னுள் அது இருந்தது” என்று கூறுகிறார். 

பாடல்களை எழுதுவதை தனது தாய் நந்தினியிடம் இருந்து நவ்ஸ் கற்றார் என்றே கூறலாம். “எனது அப்பா தொலைவில் இருந்தபோது அம்மா டைரியில் கவிதைகளை எழுதுவார். இதனைத் தொடர்ந்துதான் நான் பாடல்களை எழுதத் தொடங்கினேன்” என்று நாவ்ஸ் தெரிவித்தார். அவரது வீட்டில் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் யாரும் இல்லை என்றாலும் நாவ்ஸ் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றே கூறலாம். நவ்ஸின் அம்மா பாடலைப் பாடுவார். அவரது அப்பா கிட்டார் வாசிக்கும் திறமையுடைவர். அவருடைய வீட்டில் தமிழ் திரைப்பட பாடல்கள் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். நவ்ஸின் தாய், கண்ணதாசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் எம்.ஐ.ஏ ஆகிய மூன்று பேர் இசைத்துறையில் நவ்ஸ்க்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். “கண்ணதாசன் எழுத்து எப்போதுமே அர்த்தமுள்ளதாகவும் எளிமையான வார்த்தைகள் உள்ளதாகவும் இருக்கும். நானும் அதையே பின்பற்றுகிறேன். எனது பாடல்களில் எளிமையான சொற்களையே பயன்படுத்துகிறேன்” என்கிறார்.

நவ்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட `பட்டாசு’ பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை சென்னையின் ஹவுஸிங் போர்ட் பகுதிகளில் படமாக்கினார். இந்தியாவை தனது இரண்டாவது வீடு என்று கூறும் நவ்ஸ், “யாழ்ப்பாணத்தைப் பார்வையிடுவது எனக்கு மிகவும் பாதுகாப்பானது அல்ல. தமிழகம் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்தியாவுக்கு வருவதை விரும்புகிறேன். அவரது பாடல்களில் காதல், நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை கருப்பொருளாக வைத்து பாடியிருப்பார். இலங்கையில் நடந்த இனப்படுகொலைப் பற்றி அவர் பேசுவாரா என்ற கேள்விக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிலளித்த அவர், “நிச்சயமாக. என்னுடைய பெற்றோர்கள் இதைப் பற்றி என்னிடம் பேசியுள்ளனர். என்னுடைய பாடல்களில் இதைப் பற்றி பேச இன்னும் முதிர்ச்சியடைய வேண்டியது உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு வீடியோவைப் படமாக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஐரா திரைப்படத்தில் சித் ஸ்ரீராமுடன் இணைந்து காரிகா என்ற பாடலையும் நவ்ஸ் பாடியுள்ளார். 

நவ்ஸ் 47
நவ்ஸ் 47

நவீனி என்பதன் குறுகிய வடிவம்தான் நவ்ஸ் என்பது தெரியும். ஆனால், அவரது பெயரின் பின்னால் இருக்கும் 47 என்பது என்ன தெரியுமா? கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல் இது என்றே கூறலாம். 47 என்பதற்கான விளக்கத்தை நவ்ஸ் 47, “எனக்கு நியூமராலஜியின் மேல் நம்பிக்கையுள்ளது. 4 என்பது நான் பிறந்த தேதி. நான் பிறந்த வருடத்தில் உள்ள அனைத்து எண்களையும் கூட்டினால் 7 என்ற எண் கிடைக்கும். இரண்டும் சேர்ந்ததுதான் 47. அதுமட்டுமல்ல 47 என்பது ஏ.கே 47 துப்பாக்கியில் உள்ள எண்ணையும் குறிக்கிறது. எனது இசையும் பாடல் வரிகளும் துப்பாக்கியைப் போல இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஷான் வின்சென்ட் டி பால்?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது தனது பெற்றோர்களுடன் இளம் வயதில் கனடாவுக்குச் சென்றவர் எஸ்.வி.டி.பி எனு, ஷான் வின்சென்ட் டி பால். அடையாளப் போராட்டங்களையும் தனது உள் எண்ணங்களையும் இசை மற்றும் பிற கலைகளின் வழியாக வெளிப்படுத்தினார். 2016-ம் ஆண்டு இவரின் முதல் ஆல்பமான சேவியர்ஸ் வெளியானது. இதனைத் தொடர்ந்து ட்ரிக்கர் ஹேப்பி ஹார்ட்பிரேக்,  கொத்து பாய்ஸ் மற்றும் மேட் இன் ஜாஃப்னா ஆகிய பாடல்கள் வெளியாகின. “நான் சிறுவயதில் இருந்தே கிரியேட்டிவாக இருந்தேன். என் உடன்பிறந்த ஐந்து பேரில் சிறியவன் நான். நான் பெரும்பாலும் தனிமையான சூழலில் இருந்தேன். வரைந்துகொண்டிருப்பேன் அல்லது வேறு எதாவது செய்துகொண்டிருப்பேன். உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது இசையில் ஆர்வம் வந்தது. குறிப்பாக ராப் இசை என்னை ஈர்த்தது.

ஷான் வின்சென்ட் டி பால்
ஷான் வின்சென்ட் டி பால்

எஸ்.வி.டி.பி சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட `மேட் இன் ஜாஃப்னா’ ஆல்பம் குறித்து பேசும்போது, “நிச்சயமாக இது தனிப்பட்ட ஆல்பமாக இருக்கும். புதிய ஆல்பத்தை வெளியிடும்போது இப்படி சொல்வது கிளீஷே என்று தெரியும். ஆனால், இந்த ஆல்பம் எனது முழு வாழ்க்கையையும் சொல்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து டொராண்டோவுக்கு வரும் என்னுடைய சமூகம் மற்றும் குடும்பத்தின் அனுபவங்களைச் சொல்லும் பாடல் இது. இசைதான் என்னுடைய வாழ்க்கை. இசை மற்றும் கலைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியாது. நான் திரைப்படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற கலைஞர்களுக்காக வீடியோக்களை இயக்கவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : ரூ.10,000 முதல் கோடி ரூபாய் வரை… அதிரவைக்கும் ஆன்லைன் சூதாட்ட லக்கி ஸ்டார் – ஜெனிசிஸ் மோசடி!

3 thoughts on “நீயே ஒளி… சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து கலக்கிய Navz-47, Shan Vincent de Paul – யார் இவங்க?”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top