“ஒரு இளம் இயக்குநரோட கனவுல ஒரு தேவதை வந்து, உனக்கு எந்த மாதிரி ஹீரோயின் வேணும்னு கேட்டா, அவர் என்ன சொல்வாரு… என்னோட ஹீரோயின் கண் – ஸ்ரீவித்யா, முகம் – சரோஜா தேவி, உடல்வாகு – ஸ்ரீதேவி, நடிப்பு – சாவித்ரி, நளினம் – ஜெயப்ரதா, கூந்தல் – கே.ஆர்.விஜயா, டான்ஸ் – பத்மினி, வைஜெயந்தி மாலா, ஷோபனா, புடவைகட்டி நின்னா டிக்னிஃபைடா சுஜாதா மாதிரி இருக்கணும்னு அவர் சொல்வாருன்னா… அவர் கையில ஒரு ஹீரோயின் கொடுத்தா எப்படி இருக்கும்.. இந்தத் தகுதிகள் எல்லாம் சேர்ந்து ஒருத்தருக்கு அமையுறது கஷ்டம். அப்படிப்பட்ட நடிகை, நடனமணி மட்டுமல்ல. கடினமான உழைப்பாளி’’ – என்னடா பீடிகை ரொம்ப ஓவராப் போகுதேனு நினைக்காதீங்க.. இது டிவி நிகழ்ச்சி ஒன்றில் 80ஸ்ல தனது சக நடிகையாக இருந்த பானுப்ரியாவுக்கு நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்த சுஹாசினி மணிரத்னம் அவர்கள் கொடுத்த இன்ட்ரோங்க…
டான்ஸ், நடிப்பு தொடங்கி டப்பிங் வரைக்கும் சினிமாவோட பல டிபார்ட்மெண்ட்களில் முத்திரை பதித்த 80ஸின் டார்லிங் நாயகியாக வலம்வந்த `ஆல்ரவுண்டர்’ பானுப்ரியா பத்திதான் நாம இன்னிக்குப் பார்க்கப்போறோம்.
காந்தக் கண்ணழகி
தமிழ் சினிமா நடிகைகளில் காந்தக் கண்ணழகினு மிகச்சிலரைத் தான் சொல்வாங்க. அந்த வரிசையில நிச்சயம் நம்ம பானுப்ரியாவுக்கு முக்கியமான இடம் இருக்கும். அவங்க கண்களே ஆயிரம் அபிநயங்களைக் காட்டிடும். எதிர்ல இருக்கவங்ககிட்ட வாயைத் திறந்து எதுவும் பேசாமலேயே தன்னோட எண்ணத்தைக் கடத்துற வல்லமை இருந்துச்சு பானுப்ரியாவுக்கு. இதனாலேயே, அந்த காலகட்டத்துல பிரபலமா இருந்த ஐ டெக்ஸ் கண் மை கம்பெனி விளம்பரங்கள்ல பானுப்ரியாவை நடிக்க வைச்சாங்க.
Also Read: Jeans: ஜீன்ஸ் படத்தின் பாடல்களில் இருந்த 6 அதிசயங்கள்!
கொஞ்சும் குரல்
பிறந்தது ஆந்திராவா இருந்தாலும், அவரோட இரண்டு வயசுலயே சென்னைக்கு ஃபேமிலியோட வந்து செட்டில் ஆகிடாங்க நம்ம பானுப்ரியா. ஸ்கூலிங் எல்லாமே சென்னைலதான். இதனால, தெலுங்கு பேக்ரவுண்டா இருந்தாலும் இவங்க தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சுத்தமா இருக்கும். கொஞ்சும் தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பிரபலம். சத்யராஜ் நடித்த பங்காளி படத்தில் மேடைப் பேச்சாளர் சைதை தமிழரசி கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார். அப்படி ஒரு ஹீரோயின் கேரக்டர் தமிழ் சினிமாவில் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்த நடிகையும் டிரை பண்ணவில்லை. அதில் யார் நீ என்று மனோரமா கேட்கும் கேள்விக்கு, என்னையா யாரென்று கேட்கிறாய்... வங்கக் கடலோரம் சிங்கமென சங்கத் தமிழ் முழங்கும் தங்கத் தமிழ் மகள் இந்த சை...தை தமிழரசி’னு அவங்க பதிலாச் சொல்ற டயலாக்குக்குத் தியேட்டர்கள்ல விசில் பறந்திருக்கும்ன்றதுக்கு பின்னணில விசிலடித்து ஆமோதிச்சிருப்பார் சத்யராஜ். தளபதியில் தனது கணவரை இழந்து நிற்கும் அபலைப் பெண் பத்மா, இயக்குநர் வி.சேகரின் பொறந்தவீடா புகுந்த வீடா
அமுதா’, தெற்குத் தெரு மச்சான் பரிமளா’, அமரன்
சிவகாமி’ இப்படி அவங்களோட எவர்கிரீன் கேரக்டளைச் சொல்லிக்கிட்டே போகலாம்.
இதோட பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியிருக்காங்க. `நடிகையர் திலகம்’ கீர்த்தி சுரேஷின் கேரக்டருக்குக் குரல் கொடுத்தது பானுப்ரியாதான்.
தேர்ந்த நடனக் கலைஞர்
முறைப்படி பரதம் கத்துக்கிட்டவங்க நம்ம பானுப்ரியா. நடிக்க வர்றதுக்கு முன்னாடியே அவங்களோட பரத நாட்டிய அரங்கேற்றமும் நடந்திருச்சு. இதனாலேயே, அவங்களோட படங்கள்ல டான்ஸ் ஸ்டெப்ஸ்லாம் ரொம்பவே மெனக்கெட்டு ஆடியிருப்பாங்க. தெலுங்குல வெளியான சித்தாரா படத்தை சிறந்த உதாரணமா சொல்லலாம். ஆற்றங்கரையோரம் அவங்க ஆடுன பரத நாட்டியம் விருதுகளை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்துச்சு. இதையெல்லாம் விட அந்த நடனத்தைப் பார்த்த இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அவரோட மனைவி ஜெயா பச்சனும் பானுப்ரியா உள்ளிட்ட படக்குழுவினரைத் தங்களோட வீட்டுக்கே வரவைச்சு விருந்து கொடுத்தார். இதை தன்னோட மனதுக்கு நெருக்கமான மொமண்ட்னு பானுப்ரியா இப்போதும் நினைப்பதுண்டு.
எல்லா ஏரியாலயும் கில்லி
ஒரு சில நடிகைகள் பயங்கரமான தியேட்டர் ஆர்டிஸ்டா இருப்பாங்க.. அவங்கள மாதிரியான ஆட்கள் எந்த மாதிரியான சிச்சுவேஷன் சொன்னாலும், பெர்ஃபாமென்ஸ்ல வெளுத்து வாங்கிடுவாங்க. இன்னும் ஒரு சில நடிகைகளோட கவர்ச்சி ரசிகர்கள்கிட்ட வரவேற்பைப் பெரும். இந்த இரண்டு திறமைகளும் இருக்க நடிகைகள் தமிழ் சினிமாவில் அபூர்வம். அப்படியான அபூர்வ நடிகைதான் நம்ம பானுப்ரியா. ஆதரவற்று நிற்கும் தம்பி, தங்கைகளுக்காகத் தனது திருமணத்தைத் தள்ளிப்போட்டு மாடாக உழைக்கும் மூத்த பெண் கேரக்டராகட்டும், மாடர்ன் டிரெஸ்ஸில் பக்கா அர்பன் கேர்ள் கேரக்டரானலும் சரி பானுப்ரியா எல்லா ஏரியாவிலும் கில்லி. மாலையில் மனதோடு பேச..’,
ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு..’னு எரோட்டிக்கான சாங்ஸும் அவங்க பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. ஆராரோ ஆரிராரோ படத்தில் மனநலம் குன்றியவராக நடிக்கும் மீனு கேரக்டர் இவங்களுக்குப் பேர் வாங்கிக் கொடுத்த கேரக்டர். வெகுளிப் பெண்ணாக தமிழ் ரசிகர்கள் மனதில் பானுப்ரியாவுக்குத் தனி இடம் பிடித்துக் கொடுத்தது கே.பாக்யராஜின் அந்தப் படம். அதேபோல், மீண்டும் அம்மன் போன்ற படங்களில் அம்மன் வேடமும் இவங்களுக்கு பக்காவா செட் ஆகும்.
பஞ்சாயத்து போர்டு டிவிக்கள்ல படம் பார்த்த 90ஸ் கிட்ஸின் டார்லிங் ஹீரோயினா இருந்தவங்க பானுப்ரியா… தமிழில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட படங்கள், 10-க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நடிச்சிருக்காங்க பானுப்ரியா… பானுப்ரியா நடிச்ச கேரக்டர்கள்ல உங்களுக்கு எது ஃபேவரைட்.. கமெண்ட்ல சொல்லுங்க..!
Also Read: Saroja Devi: சரோஜா தேவி 60ஸ், 70ஸ் கிட்ஸ்களால் ஏன் கொண்டாடப்பட்டார் – 4 காரணங்கள்!