விருமாண்டி ஏன் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் – 3 காரணங்கள்!

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து 2004 பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் விருமாண்டி. சண்டியராக அறிவிக்கப்பட்டு, பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் விருமாண்டியாக வெளியான இந்தப் படம் கமலின் கரியரில் மட்டுமல்ல; தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக்காகவும் வரலாற்றில் நிலைத்துவிட்டது. விருமாண்டியை ஏன் கல்ட் கிளாசிக்குனு சொல்றோம்… அதுக்கான 3 காரணங்களைத்தான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.

Rashomon

திரைக்கதை

ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசேவா இயக்கத்தில் 1950-ல் வெளியான ராஷாமோன் படம் நான் லீனியர் பாணியில் கதை சொல்லல் முறையில் புதுமையைப் புகுத்தியது. ஒரே சம்பவம் வெவ்வேறு கதாபாத்திரங்கள் பார்வையில் விரியும் திரைக்கதை மொழி அன்றைய சினிமா ரசிகர்களை அதிரவைத்தது என்றே சொல்லலாம். அப்படியான, திரைக்கதை மொழியை ராஷாமோன் எஃபெக்ட் என்பார்கள். அந்த ராஷாமோன் எஃபெக்டை (Rashomon effect) இந்திய அளவில் முதன்முதலில் பயன்படுத்தியது தமிழ் சினிமாதான். 1954-ல் சிவாஜி நடித்து இயக்குநர் எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அந்த நாள் படம்தான் அந்தப் பெருமைக்குரியது. அப்படியான ராஷாமோன் எஃபெக்ட் திரைக்கதை பாணியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம்தான் விருமாண்டி.

Virumandi Kamal
Virumandi Kamal

சிறையில் மரண தண்டனைக் கைதியாக அடைபட்டிருக்கும் விருமாண்டி மற்றும் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் கொத்தாளத் தேவர் ஆகியோரை மரண தண்டனையை இல்லாமல் ஆக்கப் போராடும் ஏஞ்சலா காத்தமுத்து சந்தித்து பேட்டியெடுப்பதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அன்னலட்சுமி கொலை தொடர்பாக இருவரும் தங்கள் பார்வையில் கதை சொல்வார்கள். இதன்மூலம், எந்தவொரு குற்றமும் இழைக்காத விருமாண்டி மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது காட்சிகளாக விரியும். சிறையில் விருமாண்டி கொடுக்கும் பேட்டியும் இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த கேரக்டர் பேசுவதும் முக்கியமான காட்சிகள். திரைக்கதையாகப் பார்த்தால் தமிழ் சினிமாவில் அதிகம் கையாளப்படாத டெக்னிக். அதை மிக அழகாக எளிமையாக ரசிகர்களுக்குப் புரியும் வகையில் கடத்தியிருப்பார் கமல்ஹாசன். அவருக்கே உரிய டச்சுடன் அமைந்திருந்த திரைக்கதை ரசிகர்களிடம் நன்றாகவே எடுபட்டது. வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் படம் கமலுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது.

கமல் இந்தப் படத்தின் திரைக்கதையை முதலில் மூன்று பேரின் கோணங்களில் விரியும்படிதான் எழுதியிருந்தாராம். அப்படி எழுதியபிறகு தனது மனதுக்கு நெருக்கமான இரண்டு இயக்குநர்களோடு இணைந்து மூன்று பேராக இயக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவர்களை அணுகியபோது, அவர்களில் ஒருவர் சொன்ன காரணத்தால் அந்த முடிவைக் கைவிட்டு, இரண்டு பேர் கோணங்களில் திரைக்கதையை மாற்றி எழுதி, தானே இயக்கியிருக்கிறார். அந்த இயக்குநர்கள் யாருன்னு பின்னாடி சொல்றேன்.

மக்களிசை

விருமாண்டி படத்தின் இசை மக்களால் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. அதற்குக் காரணம் இசைராஜா இளையராஜா. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை, அவர்களின் வாழ்வியலோடு ஒட்டிய இசைக்கருவிகள் மூலமாகப் பாடல்களிலும் சரி; பின்னணி இசையிலும் மேஜிக் செய்திருப்பார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மாட விளக்கே பாட்டில் கோயிலில் பயன்படுத்தப்பட்ட மணியோசை முக்கியமானதாக இடம்பெற்றிருக்கும். உன்னைவிட பாட்டில் மாடுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியோசையும் புது அனுபவத்தைக் கொடுக்கும். படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களின் வரிகளுமே ரெஃப்ரெஷ்ஷிங்காக இருக்கும். மாடவிளக்கே, கருமாத்தூர் காட்டுக்குள்ளே உள்ளிட்ட 5 பாடல்களை கவிஞர் அ.முத்துலிங்கம் எழுதியிருப்பார். உன்னைவிட பாட்டு கமல்ஹாசனே எழுதி பாடிய பாடல்.

Virumandi
Virumandi

அழுத்தமான நடிப்பு

கமலின் திரைக்கதையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோனது வலுவான ஸ்டார் காஸ்டிங். விருமாண்டியாக டைட்டில் ரோலில் கமல் மிரட்டியிருப்பார். பாட்டி இறந்தபிறகு தலையை நடுவில் மழித்துவிட்டு அவர் அழுதபடியே பேசுவது, ஃபாரின் ரிட்டர்னாக ஊரில் அலப்பறையைக் கூட்டுவது என அப்பாவியாகவும் மைனராகவும் கோபக்கார இளைஞராக மனதில் நிற்பார். அதேபோல், அன்னலட்சுமி அபிராமி, கொத்தாளத்தேவராக வரும் பசுபதி, ஏஞ்சலா காத்தமுத்துவாக வரும் ரோஹினி, நல்லமநாயக்கர் நெப்போலியன், பேய்க்காமனாக வரும் சண்முகராஜன், ஜெயிலர் ஜெயந்தாக வரும் நாசர் என கேரக்டர்கள் எல்லாமே அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இன்ஸ்டா ரீல்ஸ் யுகத்தில் இன்றைக்கும் கூட எந்தவொரு இரண்டு நிமிடக் காட்சியை நீங்கள் தனியாகப் பார்த்தீர்கள் என்றால்கூட அதில் இருக்கும் மெசேஜ் ஆடியன்ஸுக்கு எளிதாகக் கடத்தப்பட்டுவிடும் என்பதுதான் படத்தின் முக்கியமான வெற்றி.

படத்தை இயக்க கமல்ஹாசன் மணிரத்னம் மற்றும் சிங்கிதம் சீனிவாசன் ஆகியோரை அணுகியிருக்கிறார். இதேபாணியில் மூன்றுபேரின் பார்வையில் வெளியான ஆயுத எழுத்து படத்தை சுட்டிக்காட்டி மணிரத்னம் மறுத்துவிட்டாராம். அதன்பிறகுதான் திரைக்கதையை மாற்றி கமலே இயக்கினார். சண்டியர் என்கிற பெயருக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தபோது, பாதுகாப்பு கருதி ஷூட்டிங் லொகேஷனையே மாற்ற வேண்டி வந்தது. அப்போது பேசிய கமல், `சினிமா எடுக்கறதை நிறுத்திட்டு, பேசாம நானும் இந்த கலாசாரத்தைக் காப்பாத்த போய்டலாமானு தோணுது. அவங்க கொடுத்த பிரச்னைகளால என்னால டைரக்‌ஷன்ல ஒழுங்கா கவனம் செலுத்த முடியலை’ என்று பேசியது பரபரப்பைக் கிளப்பியது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. அப்போது, BTS காட்சிகளோடு வெளியான டிரெய்லர் சோசியல் மீடியாக்களில் டிரெண்டடித்தது.

சரி, நீங்க சொல்லுங்க விருமாண்டி படத்தோட எந்த கேரக்டர் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது… மறக்காம அதை கமெண்ட்ல பதிவு பண்ணுங்க.

Also Read – படம்லா சும்மா தீயா இருக்கும்… தமிழ் சினிமா பெஸ்ட் ஒன்லைன் கதைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top