மாயக்குரலோன் மலேசியா வாசுதேவன் செய்த தரமான சம்பவங்கள்!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி யுவன் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ எனும் பாடலை ரீமேக் செய்திருந்தார். பலபேரோட வாட்ஸாப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் அது நிலையாகவே இருந்தது. இதற்கு முன்னர் பல பாடல்கள் ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், இந்த பாட்டில் இசையைத் தொட முடிந்ததே தவிர, அதில் ஒலித்த குரலை யுவனால் தவிர்க்க முடியவில்லை. இதற்குமேல் ஒரு குரல் தேவையா என்று கூட யுவன் நினைத்திருக்கலாம். அப்படி நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் இந்த குரலை தவிர்க்க முடியாது என்பதுதான் உண்மை. அந்த குரலுக்குச் சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன். வெறும் பாடலோடு நிற்காது மலேசியா வாசுதேவனுடைய குரல்… எந்தப் பாடலைப் பாடினாலும் நம்மைச் சொக்கவைக்கும்; சுண்டியிழுக்கும். கட்டிப்போடும்; கலாட்டா பண்ணும். குதூகலப்படுத்தும்; கொண்டாடவைக்கும். முக்கியமாக அதில் ஒரு உயிர் இருக்கும். அந்த மாயக்குரலோன் வெறும் பாடகரா மட்டும் பயணிக்கவில்லை. அவர் செஞ்ச சம்பவங்கள் இங்க ஏராளம்.. அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். 

மலேசியா வாசுதேவனின் ஐ.டி கார்டு!

ரிக்கார்டிங்கில் இளையராஜாவுடன்
ரெக்கார்டிங்கில் இளையராஜாவுடன்

இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்து, தனக்கான அடையாளத்தை அவர் பதிவு செய்து கொண்டிருந்த சமயம் அது. அவருடன் இருந்தவர்களும் வாய்ப்புகளை பெற்று வந்தனர். எஸ்.பி.பி.,-இளையராஜா-ஜானகி கூட்டணி, இசையில் வேறு சம்பவம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது 16 வயதினிலே படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. ‛செவ்வந்தி பூ எடுத்த சின்னக்கா… சேதி என்னக்கா…’ என்கிற பாடல் பதிவு செய்ய வேண்டும். எஸ்.பி.பி.,-ஜானகி பாடுவதாக இருந்த பாடல், ஸ்டூடியோவில் எல்லாம் ரெடி. எஸ்.பி.பி-க்காக வெயிட்டிங். அவர் வந்து எனக்குத் தொண்டை சரியில்லை என்று சொல்ல ஒட்டுமொத்த ஸ்டூடியோவும் அதிர்ந்து நிற்கிறது. எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது என்ன செய்வது என ஒரே குழப்பம். சரி வாசுவை வச்சு சமாளிப்போம் என ராஜா முடிவு செய்து ‘பாலு சொதப்பிட்டான், நீ பாடு’ என சொல்லிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்குள் போய்விடுகிறார். எந்த முன் தயாரிப்பும் இல்லாமல், இன்ஸ்டண்ட் வாய்ப்பு. போதாக்குறைக்கு சுசிலா வேறு பாடுகிறார் என்று சொன்னதும் பதற்றத்தை அதிகமாக்கிவிட்டது. ‘தந்தானே தானேதனே தந்தானா… ஹோய் தந்தானா…’ எனக் கோரஸ் துவங்குகிறது. இதை விடக் கூடாது என அப்போதே முடிவு செய்துவிட்டார், வாசு.செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… சேதி என்னக்கா… நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்க… முத்து பல்லக்கா…’ என பாடலை முடித்து வெளியே வந்தவர் பெருமூச்சு விட்டு நிற்க, ரிக்கார்டிங் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளியிருக்கிறது. தொடர்ந்து அதே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலும் அவர் பாடினார். அதுவரையில் கேட்டிருந்த எந்தவகையிலும் சேராத புதுவகையான குரலை ரசிகர்கள் ஆமோதிக்கவே, மலேசியா வாசுதேவனுக்கான ஐ.டி கார்டாக அந்தப் பாடல்கள் மாறியிருந்தது. இளையராஜாவுக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதற்கு முன்பாகவே ஜி.வெங்கடேஷ் இசையமைப்பில் வெளியான பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் பாடல்களை அவர் பாடியிருந்தாலும் 16 வயதினிலே படம் புது அடையாளத்தைக் கொடுத்தது.

தனித்துவமான நடிப்பு!

திருடா திருடா படத்தில் எஸ்.பி.பியுடன்
திருடா திருடா படத்தில் எஸ்.பி.பியுடன்

தமிழ் சினிமாவில் அவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. அதிலும் அவரது குரல் தனிக்கவனம் பெற்றது. டயலாக் உச்சரிப்பில் உயிர்ப்பு இருந்தது. பாரதிராஜாவின் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மூலமாக நடிக்க வந்தார். அதுவும் மிரட்டலான வில்லன். மணிவண்ணனின் ‘முதல்வசந்தம்’ படத்தில், சத்யராஜுடன் இணைந்து அவர் பண்ணிய ரவுசும், வில்லத்தனமும் இன்னொரு உயரத்துக்கு அழைத்துச் சென்றது. இதுபோக குணச்சித்திரம், காமெடி என கலந்துகட்டி வெரைட்டி காட்டியிருப்பார், மலேசியா வாசுதேவன். மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் காமெடியான போலீஸ் கேரெக்டரும், கடுமையான அப்பாவாக பூவே உனக்காக படத்தில் குணச்சித்திர கேரெக்டர்களிலும் மிகச் சிறந்த நடிகராக மிளிர்ந்திருப்பார்.
இடையில் சாமந்திப்பூ, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் போன்ற படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார். 

ரஜினி – சிவாஜி குரல் மேஜிக்!

இளையராஜாவுடன் மலேசியா வாசுதேவன்
இளையராஜாவுடன்

 முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்றிருந்த பொதுவாக எம் மனசு தங்கம்’, ஆசை நூறு வகை…’, `சிங்கம் ஒன்று புறப்பட்டதே’,  பாடல் இன்று வரை ரஜினியின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்று. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி எந்தவொரு விளையாட்டுப் போட்டிகளிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் அது. ரஜினியின் மாஸை பட்டிதொட்டியெங்கும் தனது குரல் வழியே கடத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். எஸ்.பி.பி., மாதிரியே பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்டோருக்கு ஓப்பனிங் பாடல்கள் பாடிய பெருமை வாசுவுக்கு உண்டு. அவரது ஹிட்டில் ரஜினி பாடல்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘படிக்காதவன்’ படத்தில், ‘சிவாஜிக்காக ‘ஒருகூட்டுக்கிளியாக, ஒருதோப்புக் குயிலாக’ என்று பாடினார். பிறகு ‘முதல் மரியாதை’யில் எல்லாப் பாடல்களையும் பாடினார். டி.எம்.எஸ்.க்கு அடுத்தபடியாக சிவாஜிகணேசனுக்கு மலேசியாவின் குரல் மிகப்பிரமாதமாக பொருந்திவிட்டதே என்று எல்லோரும் வியந்து போனார்கள்.

கம்பீரமான குரலே அடையாளம்!

மலேசியா வாசுதேவனின் குரல் தனி ரகம். சோகப்பாட்டுக்கு அழவைப்பார். காதல் பாட்டில் குதூகலப்படச் செய்வார். வீரமான கோபமான பாடலைப் பாடினால், அதைக் கேட்டு நம்மைப் பொங்கியெழச் செய்வார். ’ஓ… ஒரு தென்றல் புயலாகி வருதே’ பாடலை எப்போது கேட்டாலும் அனல் தெறிக்கும். ஓப்பனிங் சாங்கா, தத்துவ பாட்டா, சோக கீதமா… கூப்பிடுங்க வாசுவ… என்று தான் இருந்தது. 

எஸ்.பி.பி-யுடன் மலேசியா வாசுதேவன்
எஸ்.பி.பி-யுடன்

நக்கல் தொனி!

‘என்னுயிர்த்தோழன்’ படத்தில் ‘குயிலுக்குப்பம்’ பாடலும் ‘ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி’ பாடலும் என ரெண்டே பாடல்கள். ரெண்டுமே மலேசியாவின் ராஜாங்கம்தான். விஜயகாந்துக்கு ‘அம்மன்கோவில் கிழக்காலே’ படத்தில் ‘ஒருமூணு முடிச்சால முட்டாளா ஆனேன்’ பாட்டு புலம்பலும் நக்கலும் கலந்துகட்டிய பாட்டு. அதேபோல், கிண்டல் பாடல்களில் இன்னும் விளையாடுவார். சகலகலாவல்லவனின் ‘கட்டவண்டி கட்டவண்டி’ சின்ன உதாரணம். இப்படி தன்னோட திரைப் பயணத்தில் கம்பீரமும், நக்கலும் கலந்துகட்டி வெளுத்து வாங்கியிருப்பார், மலேசியா வாசுதேவன்.

தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் பல உயரங்களைத் தொட்டிருப்பார், மலேசியா வாசுதேவன். 

Also Read : சித்தார்த் அபிமன்யு.. தமிழ் சினிமாவின் செம ஸ்பெஷல் வில்லன். ஏன்!?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top