கரகாட்டக்காரன் படம் வந்தப்ப நம்மள்ல பாதிபேரு பொறந்துருக்கவே மாட்டோம். இருந்தாலும் அந்தப் படத்தையோ அல்லது எதாவது ஒரு காமெடி சீனையோ ஏதாவது ஒரு சூழல்ல கண்டிப்பா பார்த்திருப்போம். அதனால, கரகாட்டக்காரன்னு சொன்னதும் சில விஷயங்கள் நமக்கு ஆட்டோமெட்டிக்கா நியாபகம் வரும். குறிப்பா சொல்லணும்னா மாங்குயிலே பூங்குயிலே பாட்டு, சொப்பன சுந்தரி கார், வாழைப்பழ காமெடி இப்படி பட்டியல் போட்டுட்டே போகலாம். சரி, படத்தோட டைட்டில் கார்டுல இந்த விஷயங்களையெல்லாம் கவனிச்சீங்களா? சொப்பன சுந்தரி வைச்சிருந்த காரை இப்போ யாரு வைச்சிருக்கா தெரியுமா? வாழைப்பழ காமெடி எந்த படத்தோட இன்ஸ்பிரேஷன் தெரியுமா? கதையே கேட்காமல் இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்த கதை தெரியுமா? தில்லானா மோகனாம்பாள் படத்துக்கும் கரகாட்டக்காரன் படத்துக்கும் ஒற்றுமை இருக்கு… அது என்ன? இதெல்லாம் தெரிஞ்சுக்க வீடியோவை முழுசா பாருங்க!

இன்ட்ரஸ்டிங் டைட்டில் கார்டு!
தமிழ் சினிமாவைப் புரட்டிப்போட்ட திரைப்படங்களில் ஒன்று, ‘கரகாட்டக்காரன்’. அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஓடிச்சு. அப்படிப்பட்ட, படத்தோட டைட்டில் கார்டே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இன்னைக்கு டைட்டில்கார்டு ரசிகர்களுக்கு போர் அடிக்கக்கூடாதுனு பலரும் பல விஷயங்களை டைட்டில்கார்டுல சேர்த்துப் போடுறாங்க. ஆனால், 1980-கள்லயே கங்கை அமரனுக்கு அந்த ஐடியா வந்திடுச்சு. முன்னணி நடிகர்கள் ஷூட்டிங்க்கு வர்றது, நடிப்பு சொல்லிக்கொடுக்குறது, முக்கிய பிரபலங்கள் பட விழாவில் கலந்துகொண்டதுனு எல்லாத்தையும் வீடியோ எடுத்து டைட்டில் கார்டுல சேர்த்து ஜாலியா கொடுத்துருப்பாரு. யூ டியூப்லா அப்போ இருந்துருந்தா இதெல்லாம் டிரெண்டிங்ல வந்துருக்கும். இளையராஜா பீக்ல இருக்கும்போது, அவர் டைட்டில் கார்டு பாடுனா அந்தப் படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு ஒரு சென்டிமென்ட் இருந்துச்சு. அதை அப்படியே இளையராஜாக்கிட்ட சொல்லி வீடியோவா எடுத்து படத்தோட டைட்டில் கார்டுல கங்கை அமரன் சேர்த்துருப்பாரு. உடனே, ‘பாடிருவோம்’னு இளையராஜா சொன்னதும் பாட்டு ஆரம்பிக்கும். ‘படத்தில் முதல் பாடலை பாட வைத்து, அது நல்ல ராசி என்றார்கள்’னு கங்கை அமரனை ஓட்டுற மாதிரி வரிகள்லாம்கூட அந்தப் பாட்டுல வரும். ‘மக்கள் நாயகன்’ ராமராஜன், ‘நண்பர்’ சந்திரசேகர், ‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ கவுண்டமணி, ‘நகைச்சுவை இளவரசன்’ செந்தில் – இப்படி எல்லா முக்கிய நடிகர்களுக்கும் டைட்டில் கார்டுல ஒரு பட்டம் வரும், அந்தப் படத்துல அறிமுகமான கனகாக்கும் ‘இளம் மயில்’னு பட்டம் கொடுத்துருப்பாரு. இந்தப் படத்துல கனகாவை நடிக்க வைக்கலாம்னு கங்கை அமரனுக்கு ஐடியா கொடுத்தது கங்கை அமரனின் மனைவிதான். அதேபோல, இந்தக் கதை எழுதினதும் இதுல ஹீரோ ராமராஜன்தான்னு முடிவு பண்ணிட்டாராம், கங்கை அமரன். குட்டி குட்டி விஷயங்கள்தான் அதை ரசிச்சு இண்டர்ஸ்டிங்கா படம் முழுக்க பண்ணியிருப்பாரு.

தில்லான தில்லானாகாரனின் மேஜிக்!
கரகாட்டக்காரன் படம் வந்தப்போவும் சரி, இப்பவும் சரி இந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் மாதிரி இருக்கேனு பல கமெண்டுகள் சொல்லுவாங்க. இதை கங்கை அமரனே ‘ஆமாங்க அந்தப் படத்தோட சாயல்லதான் இதை உருவாக்கினோம். தில்லானா மோகனாம்பாள் படத்துல நாதஸ்வரக் கலைஞருக்கும் நடனக் கலைஞருக்கும் போட்டி வரும். காதல் வரும். கரகாட்டக்காரன்ல இரண்டு நடன கலைஞர்களுக்கு போட்டி வரும். காதல் வரும். அதுக்கு கரகாட்டம்தான் சரியா இருக்கும்னு அந்தக் களத்தை சூஸ் பண்ணேன். அதுல நமக்கு தெரிஞ்ச சில உணர்வுகள், ஆக்ஷன், வேற ஊருக்குப் போகும்போது அவங்க படுற சின்ன சின்ன கஷ்டம் இது எல்லாம் சேர்த்து எடுத்துருக்கோம்’னு சொல்லுவாரு. கங்கை அமரன் சின்ன வயசுல இருந்தே பார்த்த கரகாட்டக்காரர்களோட வாழ்க்கை இந்தப் படத்துக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அதுமட்டுமில்ல, தில்லானா மோகனாம்பாள் படத்துல தன்னோட குரூப்புக்கு தெரியாமல் பத்மினியைப் பார்க்க சிவாஜி போவாரு. அந்த சீனை கொஞ்சம் உருட்டி திரட்டி எடுத்ததுதான் ‘ஊருவிட்டு ஊருவந்து’ பாட்டு. எப்படியெல்லாம் மனுஷன் தில்லாலங்கடி வேலை பார்த்துருக்காரு பாருங்க. ஆனால், இதெல்லாம் கங்கை அமரன் சொல்லிதான் தெரியுது. கரகாட்டக்காரன் குரூப்னாலே ஜாலியான குரூப்தான். அதுல கங்கை அமரன் காமெடியும் சேர்ந்தா? அதுதான், கரகாட்டக்காரன் மேஜிக். அந்த மேஜிக்கை பண்ண மெஜிசியன்தான், கங்கை அமரன்.

சொப்பன சுந்தரி காரை யாரு வைச்சிருக்கா?
chevrolet impala 1958 மாடல் கார் தெரியுமா? – இப்படி கேட்டா ஒருத்தருக்குக்கூட தெரியாது. ஆனால், சொப்பன சுந்தரி கார் தெரியுமானு கேட்டா? மொத்த தமிழ்நாடும் கைதூக்கும். இதுக்கு விதை போட்டது கரகாட்டக்காரன்தான். எம்.ஜி.ஆர்-ல இருந்து மைக்செட் ஸ்ரீராம் வரைக்கும் பயன்படுத்துன ஒரு கார்னா அது சொப்பன சுந்தரி கார்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தினு பல மொழிகள்ல இருக்குற முன்னணி நடிகர்கள் பலரும் பயன்படுத்துன இந்தக் காரை உண்மையிலேயே வைச்சிருக்குறது ‘ராஜூ’ன்றவருதான். இந்தக் கார் ஷூட்டிங்க்கு வேணும்னு சொன்னா ‘ராஜூ’ கார் எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு பறந்துருவார். கரகாட்டக்காரன் படம் பத்தின டிஸ்கஷன் அப்போ பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் சொப்பன சுந்தரி கார் சிச்சுவேஷனும் வந்துச்சுனு சாதாரணமா கங்கை அமரன் தன்னோட இண்டர்வியூலலாம் சொல்லிட்டு போய்டுவாரு. ஆனால், அந்த சீனோட தாக்கம் இன்னைக்கும் இருக்கு. ‘என்னைப் பார்த்து ஏன்டா அந்தக் கேள்வியைக் கேட்ட?, பழைய ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம்’ இந்த டயலாக்லாம் கேட்டா உடன நம்ம மைண்ட்ல வர்றது சிவப்பு கலர் சொப்பன சுந்தரி கார்தான். ஃபஸ்ட் ஈயம் பித்தாளை சீன் இருக்குல அதைதான் எடுத்துருக்காங்க. அப்புறம் இன்னொரு இடத்துலயும் அந்தக் காரை பயன்படுத்தலாம்னு, யாருலாம் அந்தக் காரை வைச்சிருக்காங்கனு தேடியிருக்காங்க. அதுல சொப்பன சுந்தரி பேரும் இருந்துருக்கு. அந்த ஒரு சின்ன ஹூக்கு பயன்படுத்தி அந்த காமெடி சீனை கிரியேட் பண்ணியிருக்காங்க. ஆனால், இன்னும் பலரோட மண்டைக்குள்ள ஓடுற ஒரு கேள்வி, ‘இந்த காரை வைச்சிருந்த சொப்பன சுந்தரியை யாரு வைச்சிருக்கா?’ அப்டின்றதுதான்.

அதாண்ணே இது!
மலையாளத்துல ஞான் பிரகாஷன்னு ஒரு படம் வந்துச்சு. அதுல ஒரு டயலாக் வரும், ஒரு காமெடியை திரும்ப திரும்ப சொன்னா யாராவது சிரிப்பாங்களா? அப்டினு. யோசிச்சுப்பார்த்த ஃபஸ்ட் டைம் நாம பார்த்த காமெடியை திரும்பப்பார்த்தாக்கூட இப்போலாம் சிரிப்பு வர்றது இல்லை. ஆனால், ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி மக்களை சிரிக்க வைச்ச, சிரிக்க வைக்கிற ஒரு காமெடினா அது வாழைப்பழ காமெடிதான். மலையாளத்துல நெடுமுடி வேணு நடிச்ச ஒரு படத்துல, ஒருத்தரைக் கூப்பிட்டு 2 வாழைப்பழம் வாங்கிட்டு வர சொல்லுவாரு. ஒண்ணை தின்னுட்டு இன்னொன்ன கொண்டுவந்து அவர் கொடுப்பாரு. இன்னொரு வாழைப்பழம் எங்கனு வேணு கேட்டா… அதுதான் இதுனு சொல்லிட்டு போய்டுவாரு. இதை 4 தடவை பண்ணா எப்படி இருக்கும்னு நினைச்சு எடுத்ததுதான் வாழைப்பழ காமெடினு கங்கை அமரன் சொல்லியிருக்காரு. அந்த காமெடியை ஏ.வி.எம்-ல ஷூட் பண்ணியிருக்காங்க. செட்ல இருந்த எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்ருந்துருக்காங்க. ஆனால், செந்திலும், கவுண்டமணியும் சீரியஸ்ஸா பெர்ஃபாமன்ஸ் பண்ணியிருக்காங்க. அந்த காமெடிக்கு நிகரா இன்னொரு காமெடி இன்னும் வரலைனுதான் சொல்லணும். இன்னொரு ஸ்பெஷல் என்னனா…கவுண்டமணி – செந்திலுக்கு இந்தப் படம் 100-வது படம்.

கதை தெரியாத கதை!
கரகாட்டக்காரன் படம் எடுக்கும்போது இளையராஜாவுக்கு கதையே சொல்லலயாம். ஏன்னு கேட்டா… கதை இருந்தாதான சொல்றதுன்றாரு, கங்கை அமரன். இருந்தாலும் இவ்ளோ தன்னடக்கம் ஆகாதுங்க. அந்தப் படத்துல வர்ற சிச்சுவேஷன்ஸ மட்டும் சொல்லிதான் இளையராஜாக்கிட்ட எல்லாப் பாட்டையும் வாங்கியிருக்காரு. மாங்குயிலே பூங்குயிலே, இந்தமான் பாட்டுலாம் வேறமாரி, வேறமாரி ஹிட்டு. இன்னைக்கும் இந்தப் பாட்டு பலரோட ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்குனு நான் சொல்லிதான் தெரியணுமா? எப்பவுமே இளையராஜா ஒரு படத்தைப் பார்த்துட்டு 2 நாள் கழிச்சு ரீ ரெக்கார்டிங் பண்ணுவாரு. அப்படி ஒருநாள் ரீரெக்கார்டிங் பண்ண வேண்டிய படத்துக்கு மியூசிக் பண்ண முடியாத சூழல். அப்போ, கங்கை அமரன கூப்பிட்டு உன் படம் ரெடியா இருக்கானு கேட்ருக்காரு. ரெடினு சொன்னதும் படத்தைப் பார்த்துட்டு சிரிச்சிக்கிட்டே ரீ ரெக்கார்டிங் போட்டுக்கொடுத்துருக்காரு, இளையராஜா. அதுவும் அந்த காமெடி தீம்லாம் ஐயோ வேற லெவல். இளையராஜாவோட ஃபேவரைட் லிஸ்ட்ல இப்பவும் இந்தப்படம் இருக்குதாம்.

0 Comments