உலகின் 40 நாடுகளில் கடந்த 30 வருடங்களாக ஹிட் அடித்து வரும் ஒரு ஷோ தான் மாஸ்டர் செஃப். பத்து வருடங்களுக்கு முன்பே இந்தியாவிற்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி வந்தாலும் தமிழுக்கு இப்போதுதான் முதல் முறை வருகிறது. இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஷோவில் அக்ஷய்குமார் ஒரு நடுவராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை மக்களுக்கு சென்று சேர்த்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து பல சீசன்களாக இந்த நிகழ்ச்சி இந்தியில் நடந்து வருகிறது. இப்போது சன் டிவியில் முதல்முறையாக தமிழில் இந்த ஷோ நடக்கவிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமான விஜய் சேதுபதியால் இந்த நிகழ்ச்சியும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடிக்கும் என்பது நிச்சயம். இந்த நிகழ்ச்சிக்கான இறுதிகட்ட ஆடிஷன் ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை வேல்ஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுக்க தேர்வான 1,000 நபர்களை சென்னைக்கு வரவழைத்து, மூன்று சுற்றுகள் நடத்தி, அதிலிருந்து 60 நபர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை அறிவித்து, அடுத்தடுத்த எபிசோடுகளை ஆரம்பிக்க வேண்டிய வேலைதான் மிச்சம். தமிழ்நாட்டில் ஊரடங்கு போட்டிருப்பதால் இதன் படப்பிடிப்பை நடத்த சிரமமாக உள்ளது. அதனால் எதிர்பார்க்கப்பட்ட மாதத்திலிருந்து சற்று தாமதமாகவே இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. விரைவில் சன் டிவியில் வெளிவரும் இந்த நிகழ்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடம் கிளம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் சமையல் நிகழ்ச்சி என்றால் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வரும் ஷோ, சமீபத்தில் ஹிட்டான குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
Also Read – நீங்க குக் வித் கோமாளிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்… தெரிஞ்சுக்கலாமா?!
-
1 அரங்கம்
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் அடையாளமே பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த அரங்குதான். இந்த அரங்கு பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். 20 பேருக்கு மேல் நின்று சமைக்கக் கூடிய அளவில் சமையலறையும், அதனை பார்ப்பதற்கு மேலே பால்கனியும் இருக்கும். அதே போல் காய்கறிகள் வைத்திருக்கும் இடம், ரிவர்ஸில் ஓடக்கூடிய கடிகாரம் என பல வித்தியாசமான அமைப்புகள் இருக்கும். இந்த அரங்கு முழுக்க முழுக்க மரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும். தமிழில் நடக்கவிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கும் சன் தொலைக்காட்சி இப்படிப்பட்ட ஒரு பிரமாண்டமான அரங்கை அமைத்து இருக்கிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 8 பேர் நின்று சமைக்கக்கூடிய அளவிலேயே ஒரு சின்னதான அரங்கு அமைக்கப்பட்டிருக்கும். காய்கறிகள் மளிகைப் பொருட்கள் வைத்திருக்கும் இடமும் சின்னதாக இருக்கும்.
-
2 காமெடி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வடிவேலு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வடிவேலுவின் காமெடிகளில் வரும் பன்ச், கவுன்ட்டர்கள் வைத்தே பல இடங்களில் சிரிப்பை வர வைத்திருப்பார்கள். ஆனால் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் காமெடிக்கு இடமே இல்லை. எப்பொழுதும் ஒரு சீரியஸான த்ரில்லர் படம் பார்ப்பதுபோல, அனைத்து செயல்பாடுகளும் இருக்கும். பரபரவென செல்லும் எடிட்டிங், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை நன்கு கூட்டும். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கன்ட்டென்ட்தான் கதாநாயகன்.
-
3 போட்டியாளர்கள்
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அனைவரும் சின்னத்திரையிலும் சினிமாவிலும் இருந்த பிரபலங்களாக இருப்பார்கள். ஆனால் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் அப்படி கிடையாது. இந்த நிகழ்ச்சி எந்த நாட்டில் நடந்தாலும் அந்த நாட்டு மக்களிடம் ஆடிஷன் வைத்து பலகட்ட தேர்வுகளுக்குப் பிறகு போட்டியாளர்களை இறுதி செய்வார்கள். அதேபோல்தான் தமிழிலும், தமிழ்நாடு முழுக்க இருக்கும் அனைத்து மாவட்ட மக்களிடமும் ஆடிஷன் நடத்தி, அவர்களை தேர்வு செய்து, இறுதி கட்ட ஆடிஷனை சென்னையில் நடத்தி போட்டியாளர்களை இறுதி செய்திருக்கிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஊர் மக்களை பற்றியும், அவர்களின் பாரம்பரியம், சமையல் முறை என அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.
-
4 டாஸ்க்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அதில் கொடுக்கப்படும் டாஸ்குகள் அனைத்துமே காமெடியாக இருக்கும். அதேபோல் பெரிய பெரிய டாஸ்குகளாக இருக்கும். 45 நிமிடங்களில் சமைக்கவேண்டும்; 20 நிமிடங்களில் சமைக்கவேண்டும் என இருக்கும். ஆனால், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பொறுத்தவரை இதன் சுவாரஸ்யமே டாஸ்க் தான். ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய உணவில் ஆரம்பித்து ஐந்து நிமிடம், 8 நிமிடம், 10 நிமிடம் என குறைந்த நேரங்களிலேயே சமைக்கும் டாஸ்க் தான் அதிகம் இருக்கும். இதனால் ஒரு டாஸ்க் சீக்கிரமாகவே முடியும்; சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.
-
5 நடுவர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலும் நடுவர்களாக 2 அல்லது 3 பிரபலமான செஃப்கள் இருப்பார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போல நடுவர்கள் இங்கு ஜாலியாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இதுவரைக்கும் நடந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வந்த நடுவர்கள் அனைவருமே மிகவும் கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள். அதே போல்தான் மாஸ்டர் செஃப் தமிழிலும் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. எப்படி கடுமையாக இருப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணம், ஒரே சமயத்தில் 20 பேர் சமைத்தாலும் அவர்களில் 5 போட்டியாளர்களின் உணவை மட்டும் தான் ருசி பார்ப்பார்கள். அதை எப்படி தேர்வு செய்வார்கள் என்றால், 20 நபர்களும் சமைத்து முடித்த பிறகு நடுவர்கள் அனைவரும் ஒரு ரவுண்ட் சென்று அந்த உணவுகளை பார்வையிடுவார்கள். அவர்களின் கண்களுக்கு எந்தெந்த உணவுகள் நன்றாக இருக்கும் என தோன்றுகிறதோ அந்த உணவுகளில் இருந்து, ஐந்து நபர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து டெஸ்டிங் பார்ப்பதற்கு அழைப்பார்கள். அனைத்து உணவுகளையும் டேஸ்ட் பார்ப்பது கிடையாது. இதுவே அவர்களின் கடுமைக்கு சான்று.
இவைகளை வைத்து பார்க்கும் போது உங்களுக்கே இந்த நிகழ்ச்சி எப்படி வரும் என்கிற ஐடியா கிடைத்திருக்கும். அதேபோல் மற்ற நாடுகளில் இருந்த சுவாரஸ்யங்களைத் தாண்டி, தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருக்கும் மற்றொரு கூடுதலான சுவாரஸ்யம், விஜய்சேதுபதி. விஜய் சேதுபதி பல பேட்டிகளில், பல இடங்களில் அவருக்கு உணவுகள் எந்த அளவிற்கு பிடிக்கும் என கூறியிருக்கிறார். சன் தொலைக்காட்சியும் இந்த நிகழ்ச்சிக்கு சரியான ஒரு தொகுப்பாளரை தேர்ந்தெடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். தமிழ் மக்களுக்கும் விஜய்சேதுபதியை ரொம்பவே பிடிக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சி ஹிட்டடிக்க பல வாய்ப்புகள் இருக்கிறது.
0 Comments