தமிழ் தொலைக்காட்சிகளில் தவிர்க்க முடியாத சேனலாக தற்போது வளர்ந்து நிற்கும் விஜய் டிவி, தனது ஆரம்பகாலத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதிக்க ரொம்பவே போராடியது. உலக தமிழர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி களமிறக்கிய நிகழ்ச்சிகளில் பல இன்றுவரைக்கும் கிளாசிக்ஸாக இருக்கிறது. அப்படி விஜய் டிவியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த நிகழ்ச்சிகளைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
-
1 கலக்கப்போவது யாரு:
தமிழ்நாட்டின் பல ஊர்களில் மேடை நிகழ்ச்சிகள் மூலம் மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி, தனித்துவமான திறமைகளைக் கொண்ட பலர் கலக்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், அவர்களை தொலைக்காட்சிக்கு கொண்டுவரலாம் என முடிவு செய்தது விஜய் டிவி. ‘கலக்கப்போவது யாரு’ என ஒரு நிகச்சியை அவர்களுக்காக நடத்தி தமிழ்நாட்டில் இருந்த பல திறமைசாலிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் இன்றுவரைக்கும் சினிமாக்களிலும், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ராமர், ஆதவன், மதுரை முத்து என பலரைச் சொல்லலாம்.
-
2 ஜோடி நம்பர் ஒன்:
தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்தமான நேட்டிவிட்டி கன்ட்டென்ட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய் டிவி, அதே சமயம் இந்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளையும் தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்றவாறு அதை மாற்றி ஹிட்டும் அடித்தது. அதில் மிக முக்கியமான நிகழ்ச்சிதான் ஜோடி நம்பர் ஒன். தமிழ் மக்களுக்கு அதிகம் பரிச்சயமான சீரியல் நடிகர்களை ஜோடியாக ஆட வைத்து, அதற்கு மார்க் போட்டு, எலிமினேஷன், வைல்ட் கார்ட் என்ட்ரி என பல புது விஷயங்களையும் ஆடியன்ஸுக்கு பழக்கப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிதான் இப்போது வரைக்கும் பல, பல சீசன்களாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
-
3 நீயா நானா:
சன் டிவி-யின் மிக முக்கியமான நிகழ்ச்சிதான் அரட்டை அரங்கம். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியும் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் ஜானர்தான். ஆனால், நீயா நானாவின் ஆரம்ப நிகழ்ச்சிகளில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் இருந்த சில எலிமெண்ட்ஸ் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு டாக் ஷோவாக மட்டுமே இருந்ததால் எலைட் ஆடியன்ஸுக்கு மட்டும்தான் நீயா நானா பிடித்திருந்தது. அதை சீக்கிரமே சரி செய்ய நினைத்த விஜய் டிவி, அனைத்து தரப்பு மக்களோடும் பொருந்திப்போகிற தலைப்புகளாகத் தேர்வு செய்து ஆரம்பித்தது. கொஞ்சம் ஸ்லோவாக பிக்கப் ஆனாலும் இந்த ஐடியாவை விட்டுவிடாமல் தொடர்ந்து நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியதால் மக்களுக்கு பழக்கமானது. இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் இருந்து இன்று வரை இதனை தொகுத்து வழங்கிவரும் கோபிநாத்தும் இதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
-
4 சூப்பர் சிங்கர்:
விஜய் டிவியில் நடனத்திற்கு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி என்றால் பாடலுக்கு இன்று வரைக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான். சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்துவார்கள். தமிழ்நாடு முழுக்க ஆடிஷன் செய்து ஒவ்வொரு வருடமும் பல புதுமையான குரல்களையும் முகங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் சூப்பர் சிங்கர் டீம், அவர்களில் பலரை இசைத்துறைக்கும் பாடகர்களாக அனுப்பியிருக்கிறது. நிகில் மேத்யூ, ஆஜிஸ், ஆஜித், சத்ய பிரகாஷ், சந்தோஷ், பிரியங்கா, மாளவிகா என அந்த பாடகர்களின் பட்டியல் மிக நீளமானது.
-
5 கனா காணும் காலங்கள்:
தொலைக்காட்சி சீரியல்களை இல்லத்தரசிகள்தான் பார்ப்பார்கள் என்பதை மாற்றி இளைஞர்களையும் சீரியல் பக்கம் இழுத்து வந்ததில் விஜய் டிவி மிக முக்கிய பங்கு இருக்கு. காதலிக்க நேரமில்லை, கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், காவ்யாஞ்சலி, ஆபிஸ், பிரிவோம் சந்திப்போம், மதுரை, சரவணன் மீனாட்சி என இளைஞர்களுக்கு பிடித்தவாறு பல சீரியல்களை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக, கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தன் பக்கம் இழுத்தது விஜய் டிவி. அந்த மாணவப்படையினால் விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளும், விஜய் டிவியும் பிரபலமானது.
-
6 லொள்ளு சபா:
90’ஸ் கிட்ஸ் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இன்று வரைக்கும் இருக்கும் ஒரு நிகழ்ச்சிதான் லொள்ளு சபா. தமிழ் சினிமாவின் பல கிளாசிக்கான படங்களை நையாண்டி செய்வதுதான் இந்த ஷோவின் டெம்ப்ளேட். ஒளிப்பரப்பான முதல் சில எபிசோடுகளிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற, அடுத்தடுத்த எபிசோடுகளும் கிளாசிக்காக மாறியது. இன்றுவரைக்கும் லொள்ளு சபா வீடியோக்களுக்கு யூடியூபில் பார்வையாளர்கள் அதிகரிப்பதுதான் அதற்கு சான்று. இந்த நிகழ்ச்சி மூலமும் சந்தானம், யோகி பாபு, ஜீவா, சுவாமிநாதன், மனோகர் என பல நடிகர்களும் ராம் பாலா (தில்லுக்கு துட்டு), முருகானந்த் (இனிமே இப்படித்தான்) என இயக்குநர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
-
7 காஃபி வித் அனு:
கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் நடிகர், நடிகைகளை வைத்து நிகழ்ச்சி நடத்திய விஜய் டிவி, முழுக்க முழுக்க நடிகர், நடிகைகளை வைத்து நடத்திய நிகழ்ச்சிதான் காஃபி வித் அனு. நடிகை அனுஹாசன் தமிழ் சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதுதான் இந்த நிகழ்ச்சி. ஆனால், இது வழக்கமான பேட்டியாக இல்லாமல் கேள்விகளில் வித்தியாசமும், ராபிட் ஃபயர், போட்டோ கேலரி போன்ற புதுமையான விஷயங்களும் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியது. இந்த நிகழ்ச்சியை நடிகை அனுவிற்கு பிறகு டிடி நடத்தினார்.
-
8 நம்ம வீட்டு கல்யாணம்:
சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களின் புது ரிலீஸ் படத்தைப் பார்ப்பதைவிட அவர்களைப் பற்றிய பர்ஷனல் தகவல்களையும், குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்கு பெரிய ஆர்வத்துடன் இருப்பார்கள். அதற்காகவே நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் செலிபிரிட்டிகளின் திருமணம், நிச்சயதார்த்தம் என அவர்களின் பர்ஷனல் பக்கங்ளை மக்களுக்கு காட்டியதால் இந்த நிகழ்ச்சி பயங்கர ஹிட்.
வாரம் ஒரு முறை, இரு முறை அல்லது தினமும் என தொடராக ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சிகள் தவிர ஒரு எபிசோடுகாக மட்டும் என பல சிறப்பு நிகழ்ச்சிகளும் விஜய் டிவி ஒளிப்பரப்பு செய்திருக்கிறது. அவைகளும் விஜய் டிவியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருந்தது.
0 Comments