பெரும்பாலும் நம்ம யாருக்கும் விளம்பரங்களே பிடிக்காது. டிவில வந்தா உடனே ரிமோட்டை தேடுவோம். யூ-டியூப்லயும், ஃபேஸ்புக்லயும் ஸ்கிப் பட்டனை தேடுவோம். ஆனா சமயங்கள்ல சில பிராண்டுகள் அவங்களோட விளம்பரங்களை ரொம்ப ரசனையாவும் ஒரு அழகான கதை சொல்ற மாதிரியும் எடுப்பாங்க. விளம்பரமா இருந்தாலும் அதை நாம ரசிச்சுப் பார்ப்போம். அப்படி சில ஃபீல் குட் விளம்பரங்களை பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
* Good Day
ஒரு மலைக்கிராமத்துல இரண்டு குட்டி பசங்க தினமும் ஒரு குறிப்பிட்ட டைமுக்கு ஓடிப்போய் ஒரு பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுவாங்க. அந்த நேரத்துல குட் டே பிஸ்கட்டோட லோடு வண்டி அவங்களை கிராஸ் பண்ணி போகும். அந்த பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்தில இருக்குற ஸ்பீடு பிரேக்கர்ல ஏறிப் போறப்போ அந்த வண்டியோட பேக் டோர் வழியா இரண்டு குட் டே பிஸ்கட் தவறி கீழே விழும். வண்டி போனதும் அந்த பசங்க அதை எடுத்துட்டு போவாங்க. இது தினம் தினம் நடக்கும். ஒரு நாள் இந்தப் பசங்க லேட்டா வருவாங்க. இவங்க வர்றதுக்குள்ள குட் டே வண்டி ஸ்பீடு பிரேக்கரை க்ராஸ் பண்ணிடும். பிஸ்கட் விழுந்திருக்காது. உடனே சோகமா திரும்பி போனா வண்டி ரிவர்ஸ்ல வரும். மறுபடியும் ஸ்பீடு பிரேக்கர்ல வண்டி ஏறி இறங்கும். பிஸ்கட் கீழே விழும். அவங்க சந்தோசமா எடுத்துட்டு போவாங்க. கட் பண்ணா ட்ரைவர் சிரிச்சுக்கிட்டே போவார். அதாவது அவருதான் வேணும்னே இதை தினமும் பண்றாருனு புரியும். குட் டே வோட இந்த விளம்பரம் எப்போ பார்த்தாலும் Heart Warming ஆ இருக்கும்.
* Prega News
ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பார். அவருடைய வீட்டிற்கு ஒரு திருநங்கை வந்து ‘உங்க வீட்டுக்கு ராஜா வரப்போறான்’ என்று வாழ்த்துவார். அந்தக் கர்ப்பிணியின் அம்மா ‘ராஜாவா இருந்தா என்ன ராணியா இருந்தா என்ன.. காசு தர்றேன்.. அம்மாவும் பாப்பாவும் நல்லா இருக்கணும்னு வாழ்த்து’ என்று கடிந்துகொள்வார். சில நாட்கள் கழித்து குழந்தை பிறந்துவிடும். அப்போது மீண்டும் அந்த வீட்டிற்கு வாழ்த்துவதற்கு திருநங்கைகள் வருவார்கள். அந்த அம்மா ‘ராணி பிறந்திருக்கா.. இந்தா காசு’ என்று நீட்ட, ‘இந்த முறை நான் வாங்குறதுக்கு வரல.. கொடுக்க வந்தேன்’ என்று காசை கொடுத்து ‘இதை வச்சி அந்தக் குழந்தைக்கு எதாவது வாங்கித் தாங்க.. யார் கொடுத்தானு கேட்டா அத்தை கொடுத்தாங்கனு சொல்லுங்க’ என்று சொல்வார். அந்த அம்மா ‘நீயே குழந்தை கைல கொடு’ என்று சொல்வதாக விளம்பரம் முடியும். இது கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் சாதனமான Prega News விளம்பரம்.
* நெஸ்கஃபே
ரேடியோவில் ஆர்.ஜேவாக இருக்கும் ஒருவனுக்கு அதிகாலை 5 மணி ஷோவில் நேயர்களுடன் பேசும் ஷோ கொடுக்கப்படும். ஆனால் அந்த நேரத்தில் யாருமே இவருக்கு கால் செய்ய மாட்டார்கள். 8 மணி ஷோவுக்கு ஏகப்பட்ட ஆட்கள் கால் பண்ணி பேசுவார்கள். இவரும் மனம் தளராமல் தினம் தினம் எதேதோ சொல்லி ஷோவை ஓட்டுவார். ஒருநாள் சோகமாக உட்கார்ந்திருக்க ஆபிஸ் செக்யூரிட்டி வந்து, ‘யாருமே கேட்காத ஷோவுல யார் சார் கால் பண்ணி பேசுவாங்க’ என்று ஆறுதல் சொல்வார். உடனே அவருக்கு ஒரு ஐடியா வரும். மைக்கை எடுத்து ‘எனக்கு கால் பண்ணி உங்க மனசுல பட்டதை பேசுங்க, உங்களுக்கு யாரையாச்சும் திட்டணும்னு திட்டலாம். ஏன்னா இந்த ஷோவை யாருமே கேட்கமாட்டாங்க. ‘ என்று பிட்டை போட, போன்கால் குவியும். ஆளாளுக்கு போன் பண்ணி பிடிக்காத நபர்களைத் திட்டுவார்கள். நெஸ்கஃபேயின் இந்த விளம்பரம் நல்ல கிரியேட்டிவிட்டி.
* Sabhyata – Mother in Law ad
மாமியார் டீ போட சொல்வார். மருமகள் கோபித்துக்கொண்டு ரூமுக்குள் போய் பாத்திரங்களைத் தட்டிவிடுவார். உடனே மாமியார் வந்து தன் மகனிடம் புகார் சொல்வார். ‘காலைல இருந்து இப்படித்தான் பண்றா.. அவ வீட்டுக்கு போனைப் போடு’ என்று அதட்டுவார். சமாதானம் செய்ய நினைக்கும் கணவரோ நேராக மனைவியிடம் சென்று டீ போடு என்று கேட்க, அவர் கோபமாக நடந்துகொள்வார். வெறுத்துப்போன மாமியார் போனை எடுக்க, மகன் மீண்டும் சமாதானம் செய்வார். ஆனால் மருமகள் விரைப்பாக சுற்றிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்திற்குப் பிறகு ‘டீ தானே இரு நானே போடுறேன்’ என்று கிச்சனுக்குள் போவார். மருமகள் ஷோபாவில் அமர்ந்திருக்க, அருகில் வந்து மாமியார் உட்காருவார். மாமியாரும் மருமகள் ரகசியமாக, ‘லஞ்ச்சும் அவரே பண்ணச் சொல்லலாமா?’ என்று பேசிக்கொள்வார்கள். மகனைக் கிச்சனுக்கு அனுப்ப இவர்கள் போட்ட பிளானாம். சப்யதா என்ற Clothing Brand விளம்பரம் இது.
கொரோனா காலத்தில் எல்லாரும் வேலை இழந்து நிற்க, மார்க்கெட்டில் சிறிய மிட்டாய் கடை நடத்தி வரும் பூஜா ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடுவார். யாருக்காவது வேலை வேணும்னா என் கடைக்கு வாங்க என்ற அந்த அறிவிப்பைக் கேட்டு நிறைய பேர் அவருடைய கடைக்கு வேலைக்கு வருவார்கள். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைல இது தேவையா என்று அவருடைய தம்பி கடிந்துகொள்வார். புதிதாக வந்தவர்கள் சொதப்பி சொதப்பி வேலை கற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க தன் காரை விற்றுவிடுவார். தீபாவளிக்கு அப்பறம் இவங்களை வேலையை விட்டு அனுப்பிடலாமா என்று தம்பி கேட்க, இவங்களுக்கும் தீபாவளிதான என்று நம்பிக்கை கொடுப்பார் பூஜா. மறுநாள் வழக்கம்போல பூஜா கடைக்கு கிளம்ப வழியெங்கும் அவருக்கு வாழ்த்துமழை பொழிவார்கள் மக்கள். பூஜாவின் கடைக்கு முன்னால் கூட்டம் கூடிநிற்கும். அந்த கடையில் வேலை பார்க்கும் ஒருவர் பூஜாவின் இந்தப் பெருந்தன்மை பற்றி ஃபேஸ்புக்கில் வீடியோ போட்டிருப்பார். அதனால்தான் கடையில் கூட்டம். தீபாவளி நேரத்தில் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டு ஹார்ட்ஸ் அள்ளியது ஃபேஸ்புக் நிறுவனம்.
Also Read – விக்ரம்ல பட்ட பாடு போதும்… ஸ்பாய்லர்ஸ்ல இருந்து எப்படி தப்பிக்கலாம்?!