விஜய் டிவியில் ஒளிபரப்பான `குக் வித் கோமாளி’ மாபெரும் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து `இந்த உடல் அந்த தலையுடன் இணையப் போகிறது’ என்பது போல் `குக் வித் கிறுக்கு’ என கன்னடத்தில் ஒரு ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தொகுப்பாளர் ரக்ஷனின் காஸ்ட்யூமை பட்டி டிக்கரிங் பார்த்து பாதியாய் உடுத்தி வந்தார் அந்த ஊர் ஆட்டக்காரர்.
பொதுவாக கன்னட சினிமாக்காரர்கள் நம்மை எப்போதும் பிரமிக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். உதராணத்திற்கு தமிழில் வெளியான சில ப்ளாக்பஸ்டர் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்வார்கள். அது ஓகேதான். அப்படி இவர்கள் படத்திற்கு வைக்கும் டைட்டில் நம்மை அசரடிக்கும். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கிய `பொல்லாதவன்’ படம் தமிழில் மாஸ் ஹிட் அடித்தது. அதற்கு கன்னடத்தில் என்ன டைட்டில் வைத்தார்கள் தெரியுமா? `கோடி ரூபா கொடுத்தாலும் சில விஷயங்கள் சொல்லக்கூடாது அதுல மொத விஷயம் இது!’. ஸோ, நீங்களே கூகுள் கூகுள் பண்ணிப்பாருங்க.
Also Read – நீங்க குக் வித் கோமாளிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்… தெரிஞ்சுக்கலாமா?!

ஒரிஜினல் குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் `குக் வித் கிறுக்கி'லும் நடுவராக வருகிறார். முதல் எபிசோடில் ஒவ்வொரு குக்கும், கிறுக்கும் அறிமுகமானார்கள். மொழிப் பிரச்னை ஒரு பக்கம் இருந்தால்கூட எபிசோடு நகர நகர யார் குக், யார் கிறுக்கு என்பதே தெரியவில்லை. ஒரிஜினல் CWC-ல் ஒவ்வொரும் தனித்துவம் பெற்றவர்கள். அதில் உச்சபட்ச ரீச்சை அடைந்தது அனைவருமே என்றாலும் சிவாங்கியும் புகழும் புகழின் உச்சிக்கே சென்றனர். அதற்குப் பிறகு இவர்களது கிராஃபே மாறிப்போனது. அந்த வகையில் சிவாங்கி, பவித்ராவைப் போல் நான்கு பெண்களை குக் வித் கிறுக்கில் இறக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் லோ பட்ஜெட் மதுரை முத்துவில் ஆரம்பித்து, லோ பட்ஜெட் தீனா, லோ பட்ஜெட் பாலா, லோ பட்ஜெட் புகழ், சிவாங்கி, பவித்ரா என அனைவரின் லோ பட்ஜெட் வெர்ஷன்களையும் இதில் இறக்கினார்கள். இவர்களுக்கு மத்தியில் நடுவராக லோ பட்ஜெட் பரத்வாஜ் ரங்கனைப் பார்த்ததும் சர்ப்ரைஸின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.

இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்க்கும் நமக்கே அவ்வளவு கடுப்பாக இருக்கிறது. `குக் வித் கோமாளி'யில் இருந்த வெங்கடேஷ் பட்டை அழைத்து வந்து அங்கே நிப்பாட்டியிருக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவியாய் தவித்தார் மனிதர். `எப்படி இருந்த மனுசனை எப்படி ஆக்கிட்டீங்க'.
படத்தைதான் அப்படியே ரீமேக் செய்கிறர்கள் என்றால் ஷோவைக்கூட அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். பிரமாண்ட செட், ஆர்டிஸ்ட்களுக்கு சம்பளம், டெக்னீஷியன்களுக்கு சம்பளம் போன்றவைகளை எல்லாம் மிச்சப்படுத்தி ஒரிஜினல் குக் வித் கோமாளியை டப்பாவது செய்திருக்கலாம். ஓரளவு சிரிப்பும் வந்துருக்கும், ஸ்டுடியோ செலவும் மிச்சப்பட்டிருக்கும்.

`குக் வித் கோமாளி'யில் ஆர்டிஸ்கள் ஒரு பக்கம் ரகளையாக காமெடி செய்தாலும் அதற்கு கூடுதல் பலமாக அமைந்தது அவ்வப்போது போடப்பட்ட DJ-வின் காமெடி கவுன்டர்கள்தான். அதற்கெல்லாம் விதை போட்டவர் யார். ஒன் அண்ட் ஒன்லி நம்முடைய வடிவேலுதான். வடிவேலு இல்லாமல் ஒரு நாள்கூட முற்றுபெறாது. `குக் வித் கோமாளி' மட்டும் விதிவிலக்கா என்ன? அவருடைய எவர்க்ரீன் பன்ச்கள் அனைத்தையும் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் ஸ்க்ரீனில் பார்க்கும்போது வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அப்படி ஒருவர் தேடினாலும் கிடைக்க மாட்டார். எனவே `குக் வித் கிறுக்கு' நிகழ்ச்சியில் இது மேஜர் மிஸ்ஸிங். வேற என்ன நல்லா இருந்துச்சுனு கேட்க வேண்டாம்!
வாழ்க்கையே வெறுக்கும் சூழல் என்றாவது ஏற்பட்டால் அப்போது இதைப் பாருங்கள். இவங்களே ஜாலியா இருக்காங்க நமக்கென்னனு நெனச்சு நீங்களும் ஜாலியா இருப்பீங்க!
0 Comments