தமிழ் மக்களின் வாழ்க்கையில் சினிமா எந்தளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு சீரியல்களும் முக்கியமானது. காலகட்டத்திற்கு ஏற்ப சினிமாக்களின் தன்மைகள் மாறுவது போல, சீரியல்களிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கி்றது. தற்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகிவரும் சீரியல்களில் டாப் 10 சீரியல்கள் என்ன; அவற்றின் கதை என்ன என்பதையும் பார்க்கலாம்.
-
1 பாரதி கண்ணம்மா - விஜய் டிவி
தனது கணவன் பாரதி தன் மீது சந்தேகப்பட்டதால் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வாழ்ந்துவரும் கண்ணம்மா, எப்படி மீண்டும் அவரது கணவரோடு சேரப்போகிறார் என்பதே பாரதி கண்ணம்மாவின் கதை. பாரதி மேலிருக்கும் ஒரு தலை காதலுக்காக கண்ணம்மாவைப் பற்றிய தவறான எண்ணங்களை பாரதியின் மேல் திணித்துவரும் வெண்பாவின் இந்த விஷ வேலை எப்போது பாரதிக்கு தெரியவருகிறதோ அப்போதுதான் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்ட் கார்ட் என்றே சொல்லலாம். இந்த சீரியலின் ஆரம்பத்தில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே இருந்த காதல் எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்ததோ, அந்தளவுக்கு இவர்களின் பிரிவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் வெண்பாவின் வில்லத்தனத்தினால் பாரதி கண்ணம்மா சீரியலின் விறுவிறுப்பும் ரேட்டிங்கும் குறையாமல் இருக்கிறது.
-
2 ராஜா ராணி 2 - விஜய் டிவி
ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்த சந்தியா, தனது பெற்றோர்களை இழந்தததற்குப் பின் தன் அண்ணனின் கட்டாயத்தால் சரவணனை மணக்கிறார். தனது கணவரின் குடும்பத்திற்கு பிடிக்காத ஐபிஎஸ் வேலைக்கு எப்படி சந்தியா போகப்போகிறார் என்பதே ராஜா ராணி இரண்டாம் பாகத்தின் கதை. இந்த சீரியலின் ஆரம்பத்தில் இருந்தே சரவணனுக்கும் சந்தியாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால், சீரியலும் ஆரம்பத்தில் இருந்தே டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது.
-
3 பாண்டியன் ஸ்டோர்ஸ் - விஜய் டிவி
‘ஆனந்தம்’ படத்தின் அப்பட்டமான காப்பிதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றாலும், சீரியல் ஆரம்பித்ததில் இருந்து ரேட்டிங்கில் எந்த குறையும் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. அண்ணன் - தம்பி பாசம், காதல், சென்டிமென்ட் என அனைத்து விதமான ஆடியன்ஸையும் தொடர்ந்து திருப்திபடுத்திட்டு வரும் இந்த சீரியல், விஜய் டிவியின் மிக முக்கியமான சீரியலாகப் பார்க்கப்படுகிறது.
-
4 ரோஜா - சன் டிவி
செண்பகத்தின் மகள் நான்தான் என்று தனது அப்பாவிடமும் பாட்டியிடமும் நிரூபிக்கப் போராடும் ரோஜாவின் கதைதான், ரோஜா. ரோஜாவுக்கு முழு ஆதரவாக அவரது கணவர் அர்ஜுனும் இருக்கிறார். அர்ஜுனுக்கும் ரோஜாவுக்குமான காதல், வில்லிக்கும் ஹீரோயினுக்குமான மோதல் என பரப்பான எபிசோடுகளால் நிறைந்திருக்கிறது ரோஜா.
-
5 சித்தி 2 - சன் டிவி
சித்தியை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட சித்தி - 2 சீரியல், தொடக்கத்தில் நல்ல ரேட்டிங்கில் இருந்தது. ஆனால், இடையில் ராதிகா இந்த சீரியலை விட்டு வெளியேறியதும் வெண்பா - கவினை மையமாக வைத்து சீரியல் நகர்வதால் ரேட்டிங்கில் கொஞ்சம் சரிவு ஏற்பட்டது. அதனை சரி செய்ய தற்போது கவினின் கதாபாத்திரத்தை இரட்டை வேடங்களாக மாற்றி சற்றே சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறார்கள். இந்த ஐடியா நன்றாக வொர்க் அவுட்டானதால் ரேட்டிங்கில் முன்னேற்றமும் வந்துள்ளது.
-
6 செம்பருத்தி - ஜீ தமிழ்
ஆதி, பார்வதி, அகிலாண்டேஸ்வரி என மூன்று கதாபாத்திரங்களை முதன்மையான வைத்து ஆரம்பிக்கப்பட்ட சீரியல் 1,000 எபிசோடுகளை தாண்டியும் ரேட்டிங்கில் எந்த குறைவும் இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணித்து வருகிறது. ஆதியாக நடித்த நடிகர் கார்த்திக் இந்த சீரியலை விட்டு விலகியப்பின்னர் ரேட்டிங் சற்றே குறைந்தாலும், மீண்டும் பழைய பார்முக்கு வந்துவிட்டது செம்பருத்தி.
-
7 அன்பே வா - சன் டிவி
பணக்காரரான வருணை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், அவரது சொத்தில் எந்த பங்கும் எடுத்துக்கொள்ளாமல் தனது சொந்தக்காலில் நிற்க போராடும் பூமிகாவின் கதையே இந்த அன்பே வா. வழக்கமான மாமியார் - மருமகள் சண்டைதான் இந்த சீரியலின் மையம் என்றாலும் பல வில்லன்கள் இருப்பதும், அவர்களை வருணும் பூமிகாவும் எதிர்கொள்ளும் விதமும் ஹிட்டடித்திருக்கிறது.
-
8 செந்தூரப்பூவே - விஜய் டிவி
90ஸ் கிட்ஸுக்கு ரொம்பவே பரிட்சயமான நடிகர் ரஞ்சித்தின் முதல் சீரியல் என்ட்ரி இதுதான் என்பதினால், ஆரம்பத்திலேயே இந்த சீரியலின் மேல் ஒரு வெளிச்சம் விழுந்தது. ரஞ்சித்திற்கும் துரை என்கிற கேரக்டர் பக்காவாக செட்டானதால் சீரியலும் ஆரம்பத்திலேயே நன்றாக பிக்கப்பானது. பல திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் என்று நகர்வதால் சீரியலின் ரேட்டிங்கிலும் எந்த சரிவும் இல்லை.
-
9 சத்யா - ஜீ தமிழ்
ரெளடி பேபியான சத்யாவுக்கும் அமுல் பேபியான பிரபுக்கும் இடையேயான காதல், சென்டிமென்ட் என கலவையான எமோஷன்களை கொண்டதுதான் சத்யா. சத்யா கேரக்டரின் லுக்கில் இருந்து காதல் காட்சிகள் வரை இளைஞர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட சீரியல் ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் முக்கியமான சீரியல்களில் ஒன்று.
-
10 புதுப்புது அர்த்தங்கள் - ஜீ தமிழ்
சன், கலைஞர், ராஜ் டிவிகளைத் தொடர்ந்து நடிகை தேவயானி ஜீ தமிழ் சேனலில் நடிக்கும் சீரியல்தான் புதுப்புது அர்த்தங்கள். இந்த சீரியல் ஆரம்பித்து சில வாரங்கள்தான் ஆகியிருக்கிறது என்றாலும், யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறது. துவக்கத்தில் இருந்தே நல்ல ரேட்டிங்கில் இருக்கும் இந்த சீரியல் அதனை நிச்சயமாக தக்கவைக்கும் என்கிறார்கள்.
0 Comments