ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலின் புரோமோவில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
பேரன்பு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகிவரும் தொடர் பேரன்பு. பாண்டவர் பூமி படம் மூலம் புகழ்பெற்ற நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் ஹீரோவின் அம்மாவாகா ராஜராஜேஸ்வரி கேரக்டரில் நடிக்கிறார். ஹீரோவாக விமர் வெங்கடேசன் நடிக்கிறார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோவின் தங்கையாக நடித்து புகழ்பெற்ற வைஷ்ணவி, ஹீரோயினாக வானதி என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான சீரியலின் புரோமோவில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சி சர்ச்சையாகியிருக்கிறது.

கதைப்படி ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஹீரோயின் வானதியை, ஹீரோவின் தாய் வலுக்கட்டாயமாக தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும், தனது அம்மாவின் சொல்லைத் தட்டாமல் திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ. அதன்பிறகு நடக்கும் விஷயங்கள்தான் சீரியலின் ஃப்ளாட். ஹீரோயின் வானதிக்கு என்ன ஆனது என்பதைச் சொல்கிறது திரைக்கதை.
இந்த சீரியலில் வானதியும் அந்த குடும்பத்துக்கு புது மருமகளாக வரப்போகிறவரும் டூவிலரில் செல்கிறார்கள். அப்போது, இன்னொரு டூவிலரில் வரும் ஆண்கள் சிலர் இவர்களைச் சீண்டுகிறார்கள். வண்டியை நிறுத்திவிட்டு அந்த புது மருமகள், அவர்களைத் திட்டிவிட்டு, ’உடனே அப்பாகிட்ட சொல்லி கமிஷ்னர் அங்கிள்கிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணும்’ என போன் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அதைத் தடுக்கும் வானதி, பேசும் டயலாக்குதான் இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். ‘ரோட்டுல எத்தனையோ பேர் போறாங்க. ஆனால், அவங்க உங்ககிட்ட வந்து வம்பு பண்றாங்கனா என்ன அர்த்தம். நீங்க போட்டிருக்க டிரெஸ்னாலதான்’ என்று வானதி சொல்லும் வசனங்கள் சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

அவர்கள் இருவருமே சேலை உடுத்தியிருக்கும் நிலையில், அதில் ஒருவர் மட்டும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கிறார். அணிந்திருக்கும் ஆடையால்தான் ஈவ்டீசிங் செய்கிறார்கள் என்று கூறும்படி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிக்கு நெட்டிசன்கள் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இதுபோன்ற பிற்போக்குத் தனமான காட்சிகளை எழுதுவது எப்போதுதான் சீரியல் டைரக்டர்கள் நிறுத்தப்போகிறார்களோ? என்கிற ரீதியில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
Also Read – ‘பிரேக் அப் – க்கு பிறகும் நட்பு..!’ – இந்த 5 விஷயங்களையெல்லாம் மறக்காதீங்க!
0 Comments