‘சூது கவ்வும்’ தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் .. ஏன் – 4 காரணங்கள்!

நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளியான படம் சூது கவ்வும். பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் வெளியான இந்தப் படம் தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தோடு முத்திரை பதித்தது.

திரைக்கதை, இசை தொடங்கி ஹீரோ விஜய் சேதுபதியில் கேரக்டரைஷேசன் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தப் படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. சூது கவ்வும் படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்பட காரணமான 5 விஷயங்களைப் பத்தித்தான் இந்த வீடியோவுல நாம பார்க்கப் போறோம்.

சூது கவ்வும்

வேற லெவல் கேரக்டரைஷேசன்

சூது கவ்வும் படத்தை தமிழ் சினிமா கல்ட் கிளாசிக்கா நிலைநிறுத்துறதுல முக்கியமான காரணமா முன்னாடி நிக்கிறது படத்தில் வரும் கேரக்டர்கள் வடிவமைப்பு என்றே சொல்லலாம். பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ என்பவரின் பிம்பம் பாஸிட்டாவாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இதுதவிர, இன்ட்ரோ சாங், பஞ்ச் டயலாக், மாஸ் சீன்ஸ் இதெல்லாம் இலவச இணைப்புகள்தான். ஆனால், இந்தப் படத்தில் கதைதான் ஹீரோ. விஜய் சேதுபதியை நடுத்தர வயதுடைய கேரக்டராக நரைமுடி, தாடியுடன் காட்டியிருப்பதும் சரி, அவரின் பிளான்கள் சொதப்புவதும் அதை ஜஸ்ட் லைக் தட்னு லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றதுமா அந்த கேரக்டரில் அசால்ட் காட்டியிருப்பார் மனுஷன். படத்தோட பலமே அந்த லைன்தான். அதேமாதிரி ஐடி பையன் கேசவன், நயன்தாராவுக்கு ஒன்றரை லட்சம் செலவில் கோயில் கட்டி ஊர் மக்களிடம் கும்மு வாங்கும் வெத்துவேட்டு பகலவன், காலையில் அலாரம் வைத்து குளித்து முடித்து குடியை ஸ்டார்ட் பண்ணும் சேகர், வன்முறையை மட்டுமே நம்பும் சைக்கோ இன்ஸ்பெக்டர் பிரம்மா, `இந்தியாவின் கடைசி நேர்மையான அரசியல்வாதி என்று கருதப்படும் அமைச்சர்’ பீடிகையுடன் அறிமுகமாகும் நிதியமைச்சர் ஞானோதயம், அந்த கேரக்டருக்கு நேரெதிரான அவரது மகன் அருமைப்பிரகாசம், சினிமா எடுக்கும் ரவுடி டாக்டர், கனவுக் கன்னி ஷாலு என சூது கவ்வும் காட்டிய வேற லெவல் கேரக்டர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சூது கவ்வும் ஸ்கிரின்பிளே – டயலாக்

நலன் குமரசாமியின் ஸ்கிரீன்பிளேவும் புருவத்தை உயர்த்தவைக்கும் வசனங்களும் படத்தைத் தாங்கிப்பிடிக்கும் முக்கியமான தூண்கள். இதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும்; ஒரு முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேணும்’,இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது’, என்ன பண்ணனும்னு தெரியாம சென்னைக்கு வந்தவன்தான் எதாவது பண்ணிருக்கான். பிளானோட வந்தவன்லாம் திரும்பிப் போயிட்டான். சோ பிரைட் பியூச்சர்டா’,பப்ளிசிட்டி இல்லாதவங்கதான் அந்த ஸ்டன்ட்லாம் அடிக்கணும். எனக்குப் போதுமான அளவு பப்ளிசிட்டி இருக்குனு நான் நம்புறேன். அதனால, எனக்கு அந்த பப்ளிசிட்டிலாம் தேவையில்லை தம்பி’, என்ன அழகா தலையாட்டுறான்… அமைச்சர்னா இப்படி இருக்கணும்யா…’,ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டேங்குது’ போன்ற வசனங்களுக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட நிகழ்வுகளையும் தமிழக தியேட்டர்கள் சந்தித்தன. அதேபோல், படத்தின் செகண்ட் ஹாஃபில் வரப்போகும் சைக்கோ இன்ஸ்பெக்டர் பிரம்மாவுக்கும் ரவுடி டாக்டருக்கும் முதல் சில நிமிடங்களிலேயே நியூஸ் பேப்பர் செய்திகள் மூலம் ஒரு இன்ட்ரோ கொடுக்கப்பட்டிருக்கும். ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிஸர் பிரம்மாவிடம் விஜய் சேதுபதி அண்ட் கோ சிக்குவதற்குக் காரணமாக அமையும் சிகரெட், கடைசியில் அவர்களாகவே தப்பும் வகையிலான முடிவு இரண்டுமே எதிர்பாராத திருப்பங்கள்.

சூது கவ்வும்

ஆள் கடத்தல் தொழிலுக்கு வருபவர்களுக்கு பிளாக் போர்டில் 5 பாயிண்டுகளோடு விஜய் சேதுபதி கிளாஸ் எடுக்கும் சீன் அப்ளாஸ் அள்ளியது. அதிகாரத்தில் கை வைக்கக் கூடாது, கொல்வேன் என்று மிரட்டக் கூடாது, இயன்றதைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும், ஆயுதம் எடுக்கவே கூடாது, சொதப்பினா ஒத்துக்கணும்னு அவர் விளக்கம் சொல்வதெல்லாம் வேற லெவல்ங்க.

Also Read : வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 `நச்’ காரணங்கள்!

மேஜிக்கல் மியூசிக்

சூது கவ்வும் படம் என்றவுடனே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது….டாண்டடடங்…டாண்டடங் என ஹைபிட்சில் ஒலிக்கும் sudden delight தீம் மியூசிக்தான். படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றும் பலரின் மொபைல் ரிங்டோனாக ஒலிப்பதைக் கேட்க முடியும். அந்த அளவுக்கு ஹிட்டடித்தது சூது கவ்வும் தீம் மியூஸிக். அதோடு, ஆண்ட்ரியாவின் குரலில் ஒலிக்கும் மாமா டவுசர் கிழிஞ்சுச்சே’, ஆண்டனிதாசன், கானாபாலா ஆகியோர் பாடியிருந்த,’காசு பணம் துட்டு’, ‘கம்னா கம்’ இதெல்லாம் ஒரு ரகம்னா, பழைய பாடல் பார்மேட்டில் ஒலிக்கும் எல்லாம் கடந்து போகுமடா’ பாடல் வேற எக்ஸ்பிரீனியன்ஸ் கொடுக்கும்.

பேக்ரவுண்ட் ஸ்கோரிலும் சந்தோஷ் நாராயணன் பயங்கரமா ஸ்கோர் பண்ணியிருப்பார். இன்ஸ்பெக்டர் பிரம்மா, ரவுடி டாக்டர் தன்னோட ஹனிமூன் படத்தோட கதை சொல்ற சீன், கிட்னாப்பிங் மாண்டேஜ்கள், விஜய் சேதுபதி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்களை விளக்கிச் சொல்லும் காட்சி, கனவுக் கன்னி ஷாலுவின் பின்னணியாக ஒலிக்கும் மெல்லிசை, பாப் மார்லியின் இரண்டு சீன்கள், பிரம்மா நெற்றியில் சேகர் துப்பாக்கி வைக்கும் சீன் என இப்படியாக படம் நெடுகிலும் பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டி அதகளம் பண்ணியிருப்பார் சந்தோஷ் நாராயணன்.

சூது கவ்வும் கேரக்டர் பெயர்கள்

சூது கவ்வும் படத்தில் இடம்பெற்றிருக்கும் கேரக்டர்களின் பெயர்கள் கேட்டவுடனே அடடே போட வைக்கும் ரகம் என்று சொல்லலாம். நயன்தாராவுக்குக் கோயில் கட்டும் பகலவன், நேர்மையான அமைச்சர் ஞானோதயம், குறுக்கு வழியை மட்டுமே நம்பும் அமைச்சரின் மகன் அருமைப் பிரகாசம், கொஞ்சம் கூட நம்பிக்கைக்குரியவராக இருக்க முடியாத நம்பிக்கைக் கண்ணன், விஜய் சேதுபதியிடம் வம்பிழுக்கும் பாப் மார்லி, கடைசி வரை வாய் திறந்து பேசாத சைக்கோ இன்ஸ்பெக்டர் பிரம்மா, படம் எடுப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் டாக்டர் ரவுடி, அவரின் கையாள வரும் வேவு பார்க்கும் கேரக்டர் கில்மா (யோகி பாபு) இப்படி வித்தியாசமாகத் தனது படத்தின் கேரக்டர்களுக்குப் பெயர் வைத்து தனித்துவ கேம் ஆடியிருப்பார் இயக்குநர் நலன் குமரசாமி.

இன்டர்வெல் பிளாக்கோடு விடைபெறும் ஷாலு கேரக்டர் கிளைமேக்ஸில் வேறு வகையில் என்ட்ரி கொடுக்கும். அதிகாரத்தில் கைவைக்கக் கூடாது என்பதைக் கொள்கையாக வைத்திருக்கும் தாஸ், அமைச்சர் ஞானோதயத்தின் மகனைக் கடத்துவதும், அதன்பின்னர் ஏற்படும் களேபரங்களும்தான் சூதுகவ்வும் படத்தோட கதை. கிளைமேக்ஸில் ஷாலு போலவே இருக்கும் உள்துறை அமைச்சர் மகள் ஷாலினி குப்தாவைக் தாஸ் கடத்துவதோடு இரண்டாவது பாகத்துக்கான லீட் கொடுத்து படத்தை முடித்திருப்பார் நலன் குமரசாமி.

இந்த காரணங்களாலதான் சூது கவ்வும் படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக்கா கொண்டாடப்படுது… சூது கவ்வும் படத்தோட செகண்ட் பார்ட்டுக்கு யாரெல்லாம் மரண வெயிட்டிங்ல இருக்கீங்க பாஸ்… கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top