முதன்முதலில் திராவிடம் பேசிய படம் – பராசக்தி படம் ஏன் ஒரு மைல்கல்?!

திராவிடத்தால் வாழ்ந்தோமா, வீழ்ந்தோமா என்கிற வாதங்கள் சமீபகாலமாக வலுப்பெற்று வருகின்றன. ஆனால், திராவிடம் என்கிற கருத்தியலை மக்களிடையே பரவலாகக் கொண்டு சென்ற ஊடகம் சினிமா. பக்திப் படங்கள், ராஜாக்களின் வாழ்க்கை, புராணகால வரலாறு என்று பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போக்கையே மொத்தமாகப் புரட்டிப்போட்ட முதல் படம் சிவாஜி கணேசன் அறிமுகமாகியிருந்த `பராசக்தி’ படம். இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் 1952 தீபாவளிக்கு வெளியான பராசக்தி படம் பற்றிய சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றிதான் இந்த வீடியோவில் தெரிஞ்சுக்கப் போறோம்.

பராசக்தி
பராசக்தி

சினிமா விநியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள் முதலியார் பாவலர் பாலசுந்தரத்தின் பராசக்தி நாடகத்தைத் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். இதை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து அவர் படத்தைத் தயாரிக்க முடிவானது. நாடகத்தில் நடித்திருந்த சிவாஜி கணேசனையே படத்தின் ஹீரோவாக்க பி.ஏ.பெருமாள் முடிவு செய்தார். ஆனால், ஒல்லியாக இருந்த சிவாஜி கணேசனுக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமி அல்லது தியாகராஜ பாகவதரை ஹீரோவாகப் போட்டு படமெடுக்கலாம் என்று ஏ.வி.எம் ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால், சிவாஜியின் நடிப்பைப் பார்த்துப் பிடித்துபோன பெருமாள், அவர்தான் ஹீரோ என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அரைமனதாக சம்மதித்த ஏ.வி.எம். கொஞ்சம் ஷூட் பண்ணிட்டு முடிவு பண்ணலாம் என்றிருக்கிறார். இரண்டாயிரம் அடி ஷூட் செய்த பின்னர் ரஷ்ஷைப் பார்த்த பிறகு சிவாஜியை மாற்ற வேண்டும் என்ற குரல் வலுவடைந்திருக்கிறது. அப்போதும் பெருமாள் உறுதியாக நின்றிருக்கிறார். இதையடுத்து, சிவாஜிக்கு நல்ல ஓய்வும், சாப்பாடும் கொடுத்து கொஞ்சம் உடல் தேறியதும் மீண்டும் ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள்.

14,000 அடி ஷூட் செய்த பிறகு ரஷ்ஷைப் பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு சிவாஜி நடிப்பின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. `இந்தப் பையன் நல்லா நடிக்கிறாரே… ஆரம்பத்தில் கொஞ்சம் சரியாக நடிக்கவில்லையோ’ என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. இதையடுத்து, ஆரம்பத்தில் ஷூட் செய்த 7,000 அடி காட்சிகளை மீண்டும் செட் போட்டு ரீ-ஷூட் செய்திருக்கிறார்கள். தனது கணிப்பு தவறியது பற்றி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது நூலிலும் விரிவாகவே குறிப்பிட்டிருப்பார். படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதுடன் சிவாஜி கணேசன் என்கிற மிகப்பெரிய நடிகரையும் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தது.

சினிமாவில் அறிமுகப்படுத்தி தனக்கு வாழ்க்கை கொடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாரின் குடும்பத்தினருக்கு சிவாஜி, தனது நன்றிக்கடனை செலுத்துவதில் உறுதியாக இருந்தார். சிவாஜி மறைவுக்குப் பிறகும் அந்த நன்றிக்கடனை அவரின் வாரிசுகளான ராம்குமாரும் பிரபுவும் செலுத்தி வருகிறார்கள். அதுபற்றி தெரிஞ்சுக்க வீடியோவோட கடைசி வரைக்கும் வெயிட் பண்ணுங்க.

பராசக்தி படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்குவதாக முடிவு செய்யப்பட்டபோது, நாடகத்தை எழுதிய பாவலர் பாலசுந்தரத்தையே திரைக்கதை, வசனம் எழுத முடிவு செய்யப்பட்டது. ஆனால், இயக்குநர்கள் தரப்பில் சொன்ன சில ஆலோசனைகளை அவர் ஏற்க மறுக்கவே, அவரை மாற்ற முடிவு செய்தார்கள். இதையடுத்து, திருவாரூர் தங்கராஜ் வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அவரும் மாற்றப்பட்டு கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்குக் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு கட்டத்தில் மாநில அரசாங்கமே படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், படம் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தமிழ் சினிமாவை புதிய பாதையை நோக்கி திருப்பியது.

பராசக்தி
பராசக்தி

திராவிட நாடு என்கிற கருத்தியலை முதன்முதலில் பெரிய திரையில் பேசிய படம் பராசக்தி. படத்தின் வசனங்கள் எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், அது தனியே இசைத்தட்டாகப் போடப்பட்டு விற்பனையில் ஹிட்டடித்தது. இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது...’ எனத் தொடங்கி சிவாஜி பேசும் கோர்ட் ரூம் டயலாக் ரெஃபரென்ஸை இன்று வரையில் பல படங்களில் நம்மால் பார்க்க முடியும். அதேபோல், சாலையில் படுத்துறங்கும் சிவாஜியை பிக்பாக்கெட்தானே என போலீஸ்காரர் கேக்கும்போது, மெட்ராஸ்ல மனுஷன்தானே மிருகம். மாடு செய்த புண்ணியம் மனுஷன் செய்யலையா என்று கைவண்டி இழுக்கும் தொழிலாளர்கள் பற்றி ஒரு வசனம் வரும்.சென்னைக்கு நீ மேயரா வந்து மிருகத்தையெல்லாம் நீ மனுஷனா மாத்து…’ என அந்த சீன் முடியும். அதன்படி பின்னாட்களில் தமிழக முதல்வராக வந்த கருணாநிதி, கை வண்டி இழுக்கும் முறையை ஒழித்தார். படத்தில் இடம்பெற்றிருந்த கோயில் காட்சி ஒன்றும் பிரசித்தி பெற்றது. அந்தக் காட்சி பற்றி குணசேகரன் கேரக்டரில் வரும் சிவாஜி பேசுவதாக இப்படி ஒரு வசனம் படத்தில் இடம்பெற்றிருக்கும். `கோயிலில் குழப்பம் விளைவித்தேன். கோயில் வேண்டாம் என்பதற்காக அல்ல… கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக..’. திராவிட இயக்கங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை நாசூக்காகச் சொல்லியிருப்பார் கருணாநிதி. அதேபோல், படத்தின் இறுதிக் காட்சியில் அறிஞர் அண்ணாவும் மூதறிஞர் ராஜாஜியும் தோன்றியிருப்பார்கள்.

Also Read – சத்யம் தியேட்டர் ஏன் சென்னைவாசிகளின் ஃபேவரைட்?!

பல்வேறு தடைகளைத் தாண்டி நடிகராகத் தன் மீது நம்பிக்கை வைத்து, சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் குடும்பத்துக்கு, ஆண்டு தோறும் பொங்கல் சீர் கொடுத்து வருவதை சிவாஜி வழக்கமாக வைத்திருந்தாரம். பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் சென்று பெருமாள் முதலியாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விட்டு பொங்கல் சீரைக் கொடுத்துவிட்டு வருவாராம். தனது 60 வயதில்கூட பெருமாள் முதலியாரின் தாயாரின் காலில் விழுந்து ஆசி வாங்கியிருக்கிறார். தனது மறைவுக்குப் பிறகும் இது நிற்கக்கூடாது என ராம்குமாருக்கும் பிரபுவுக்கும் அன்புக் கட்டளை இட்டிருந்தாராம். அதனால், அந்த வழக்கம் இப்போதும் தொடர்கிறது.

பராசக்தி படம் பார்த்திருக்கீங்களா… அந்தப் படத்துல உங்களோட ஃபேவரைட் வசனம் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..

1 thought on “முதன்முதலில் திராவிடம் பேசிய படம் – பராசக்தி படம் ஏன் ஒரு மைல்கல்?!”

  1. திரைப்படம் அருமை. ஆனால் இறுதியில் பண்டரிபாயை மணக்கும் சிவாஜி தாலி எதற்கு இரண்டு மாலை போதுமே என்பது மன்னிக்கமுடியாத குற்றம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top