ரியல் பிக்பாஸ் ஜான் டி மோல்… ரியாலிட்டி ஷோக்களின் பிதாமகன்!

பிக்பாஸ் கான்சப்டை கண்டுபிடித்தது யார்? பிக்பாஸ் மட்டுமல்ல சூப்பர் சிங்கர், மாஸ்டர் செஃப், சர்வைவர், நம்ம வீட்டு மாப்பிள்ளை இப்படி நமக்கு பிடித்த எல்லா ரியாலிட்டி ஷோவும் உருவாக மூலகாரணமே இவர்தான். ரியாலிட்டி ஷோக்களின் பிதாமகன் ஜான் டி மோல் என்பவர் யார்? பிக்பாஸ் ஐடியா எப்படி ஆரம்பித்தது? இவர் எடுக்கும் எல்லா ரியாலிட்டி ஷோவும் ஹிட் ஆக என்ன காரணம்?

John De Mol

1955 வது ஆண்டு நெதர்லாந்தில் பிறந்தவர் ஜான் டி மோல் (John De Mol). இவருடைய அப்பா பிரபலமான பாடகர். மீடியாத் துறையில் தன்னுடைய வேலையைத் தொடங்கிய ஜான் டி மோல் அவருடைய பெயரிலேயே ஒரு புரொடக்சன் நிறுவனத்தைத் தொடங்கி அதில் தொலைக்காட்சிகளைத் தயாரித்து வந்தார். அப்போது நெதர்லாந்தில் இன்னொரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் புரொடக்சன் நிறுவனம் இருந்தது. அதன் பெயர் Joop van den Ende. 1994 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு தொடங்கிய புதிய நிறுவனம்தான் Endemol. இந்த புதிய நிறுவனத்தில் நெதர்லாந்து மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும்படி புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க வேண்டும் என்று விரும்பி ஐடியாக்கள் தேடிக்கொண்டிருந்தார் ஜான் டி மோல். ஒருநாள் அவருடைய அலுவலகத்தில் பணிபுரிபவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஐடியா எதேச்சையாக வந்தது.

Endemol Shine: Big Brother returns to Netherlands - English

அவருடைய டீம் மேட் ஒரு சயின்ஸ் எக்ஸ்பெரிமெண்டில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருப்பதாக ஜான் டி மோலிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த எக்ஸ்பெரிமெண்டில் ஒரு பெரிய கண்ணாடி கூண்டுக்குள் நான்கைந்து பேரை ஒருநாள் முழுக்க அடைத்து வைத்து அவர்களுடைய நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பார்கள் என்று அந்த டீம் மேட் சொல்ல ஜான் டி மோலுக்கு ஒரு ஸ்பார்க் அடித்தது. இதையே ஒரு டிவி ஷோ ஆக்கலாமே என்று முடிவு செய்தார். ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்களை சில நாட்களுக்கு அடைத்து வைத்து சுற்றிலும் கேமரா வைத்து அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணிக்கலாம் என்று ஒரு ஐடியா சொன்னார். அந்த ஷோவுக்கு ‘கோல்டன் கேஜ்’ அதாவது தங்கக் கூண்டு என்று பெயரிட்டார். அதுவரை எந்த டிவி ஷோவிலும் பயன்படுத்தாத அளவுக்கு கேமராக்கள் தேவைப்பட்டது. எப்படி இதை செயலுக்குக் கொண்டு வரலாம் என்ற திட்டமிடல்கள் போய்க்கொண்டிருந்தது. அப்போது இவருடைய டீமில் இருந்த வேறொருவர் இன்னொரு விஷயம் சொன்னார்.

ரியாலிட்டி ஷோ

ஜார்ஜ் ஓர்வெல் என்கிற எழுத்தாளர் எழுதிய 1984 என்ற நாவலை அவர் படித்திருந்தார். அதிலும் சர்வைலன்ஸ் கேமராவை வைத்து மக்களை ஒரு கண் போன்ற அடையாளம் கண்காணிக்கும். அதன் பெயர் பிக் பிரதர். இது கிட்டத்தட்ட நம்முடைய ஷோவைப் போல இருப்பதாக அவர் சொல்ல இதுவும் ஜானுக்கு பிடித்திருந்தது. உடனே இந்த ஷோவின் பெயரை பிக் பிரதர் என்று மாற்றினார். லோகோவிலும் கண் சிம்பல் இடம்பிடித்தது. 1999 ஆம் ஆண்டு ஆரம்பமானது பிக் பிரதர் நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே இதெல்லாம் கலாசாரத்திற்கு எதிரானது என்றும் ஒளிபரப்பான பிறகு இதெல்லாம் ஸ்கிரிப்டுப்பா என்றும் மக்கள் மல்லுக்கட்டினார்கள். ஆனால் சில நாட்களிலேயே இந்த ஷோ போரடிக்க ஆரம்பித்து ஆளே இல்லாத டீக்கடையில யாருக்குடா ஷோ பண்றீங்க என்று கேட்கும் நிலைமைக்கு போனது. அதற்கு காரணமும் ஜான்தான்.

வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் ஒரே நாளில் கேமரா இருப்பதை மறந்து கன்னாபின்னா என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எதெற்கெடுத்தாலும் பஞ்சாயத்து, ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, காரசாரமாக சண்டை போடுவது என்று நாளுக்குநாள் போட்டியாளர்களுக்குள் பிரச்னை கூடிக்கொண்டே போனது. இதெல்லாம் டிவியில் காட்டினால் போட்டியாளர்களுக்கு அவமானமாக இருக்கும். பாவம் யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது என்று கருதிய பிக் பிரதர் குழு சர்ச்சையான மேட்டரையெல்லாம் எடிட்டிங்கில் வெட்டித் தூக்கிவிட்டது. அடுத்த வேளைக்கு என்ன சமைக்கலாம், காஃபி போடுவது எப்படி, நடுநடுவே நடக்கும் போட்டிகள் என்று படு திராபையான கண்டண்டுகளை மட்டும் ஷோவில் வைத்தார்கள். மக்களுக்கு போரடித்துப் போனது. ஒருநாள் எதேச்சையாக ஒரு சண்டையை ஒளிபரப்ப டி.ஆர்.பி பிச்சுக்கொண்டு போனது. அதற்கு பிறகுதான் இவர்களுக்குப் புரிந்தது இவர்கள் அடித்துக்கொள்வதுதான் கண்டண்ட் என்று. அதற்கு பிறகு வேற லெவலில் ஹிட் ஆன பிக்பிரதர் உலகம் முழுவதும் பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. 2006 ஆம் பிக் பிரதர் நிகழ்ச்சி பிக் பாஸ் என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு தமிழுக்கு வந்தது.

பிக்பாஸ் மட்டுமல்ல தமிழில் ஹிட் அடித்த பல ரியாலிட்டி ஷோக்கள் ஜான் டி மோலின் எண்டமால் நிறுவனம் உருவாக்கியதுதான். இவர்களின் The Voice ஷோதான் தமிழில் சூப்பர் சிங்கரானது. மாஸ்டர் செஃப், சர்வைவர் எல்லாம் இவர்கள் தயாரிப்புதான். The Bachelor என்ற இவர்களின் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’யாக தமிழுக்கு வந்தது.

Also Read : நடராஜ் பென்சிலுக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் என்ன சம்பந்தம்?

எப்படி உங்க ரியாலிட்டி ஷோலாம் இப்படி ஹிட் ஆகுது? என்று ஜானிடம் கேட்டால் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார். ஒரு சிங்கிங் ஷோவில் ஒரு குழந்தை பாட்டுப் பாடுவதுதான் கண்டண்ட் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை பாடும்போது அவர்களுடைய பெற்றோர்கள் ரியாக்‌ஷன் என்ன? ஜட்ஜஸ் எப்படி ரசிக்கிறார்கள்? ரிசல்ட் சொல்லும்போது குழந்தையின் ரியாக்‌ஷன் என்ன? இதெல்லாம்தான் கண்டண்ட் என்று நான் நம்பினேன். மக்களும் அதைத்தான் ரசித்தார்கள் என்கிறார்.

இந்த ரகசியம்தான் ஜான் டி மோல் உருவாக்கும் நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அவரை கோடீஸ்வரன் ஆக்கியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top