ஐபிஎல் 2022 மெகா ஏலம் சில, பல பரபரப்புகளோடு நடந்து முடிந்திருக்கிறது. 600 வீரர்கள் பட்டியலிடப்பட்டிருந்த ஏலத்தில், 204 பேரை 10 அணிகளும் ஏலம் எடுத்திருக்கின்றன. சுரேஷ் ரெய்னே, ஆரோன் பின்ச், இயான் மோர்கன் என பெரிய பிளேயர்கள் பலரை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதேநேரம், இஷான் கிஷான், தீபக் சஹார், லியாம் லிவிங்ஸ்டன் என இளம் வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் பற்றிதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
ஐபிஎல் 2022 மெகா ஏலம்
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கு முன்பாக வீரர்கள் ஏலம் கர்நாடக மாநிலம் பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெற்றது. புது வரவான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்பட 10 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்தனர். முதல் நாள் ஏலத்தின்போது ஏலம் விட்டுக்கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவே, தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரு ஷர்மா ஏலத்தைத் தொய்வில்லாமல் நடத்தினார். ஏலம் எடுக்கப்பட்டவர்களில் 67 பேர் வெளிநாட்டு வீரர்களாவர்.
தமிழக வீரர்கள்
இந்த மெகா ஏலத்தில் தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் உள்பட 30 பேர் பட்டியலிடப்பட்டிருந்தனர். இதில், கொல்கத்தா அணி வருண் சக்ரவர்த்தியை ஏலத்துக்கு முன்பாகவே தக்க வைத்துக் கொண்டது. ஏலத்தில் கலந்துகொண்டவர்களில் 13 பேர் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், 17 பேரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
தனது அதிரடியால் தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழக வீரர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இவர்தான். அதற்கடுத்தபடியாக வாஷிங்டன் சுந்தரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8. 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கை ஆர்.சி.பி ரூ.5.5 கோடிக்கும், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்திருக்கின்றன. யார்க்கர் மன்னன் டி.நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.
ரூ.50 லட்சம் அடிப்படை விலை கொண்ட விஜய் சங்கரை ரூ.1.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது. தொடக்கத்தில் அவரை ஏலம் எடுக்க சி.எஸ்.கே அக்கறை காட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுதர்சன் (ரூ.20 லட்சம்) மற்றும் சாய் கிஷோர் (ரூ.3 கோடி) ஆகியோரும் குஜராத் அணிக்காக விளையாட இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோரை சி.எஸ்.கே ஏலத்தில் எடுத்திருக்கிறது. சஞ்சய் யாதவ் (ரூ.50 லட்சம்) மும்பை அணியோடு இணைகிறார்.
யார், யார் எந்த அணியில்?
- ரவிச்சந்திரன் அஷ்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.5 கோடி
- வாஷிங்டன் சுந்தர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.8.75 கோடி
- தினேஷ் கார்த்திக் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ.5.5 கோடி
- டி.நடராஜன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.4 கோடி
- எம்.ஷாருக்கான் – பஞ்சாப் கிங்ஸ் – ரூ.9 கோடி
- ஹரி நிஷாந்த் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20 லட்சம்
- என்.ஜெகதீசன் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20 லட்சம்
- முருகன் அஷ்வின் – மும்பை இந்தியன்ஸ் – ரூ.1.6 கோடி
- சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.3 கோடி
- விஜய் சங்கர் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ.1.4 கோடி
- சஞ்சய் யாதவ் – மும்பை இந்தியன்ஸ் – ரூ.50 லட்சம்
- பாபா இந்திரஜித் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ரூ.20 லட்சம்
- சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 20 லட்சம்
- வருண் சக்கரவர்த்தி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – Retained.