தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன், மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஸ்வா தீனதயாளன்
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன், தமிழகம் சார்பில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சாதித்தவர். இவர், ஜூனியர், சப்-ஜூனியர் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டவர். இவர் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கும் 83-வது சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதற்காக, அசாம் மாநிலம் கௌகாத்தி சென்ற அவர், மேலும் 3 பேரோடு அங்கிருந்து ஷில்லாங்குக்கு வாடகை காரில் பயணித்திருக்கிறார்.
அவர்கள் பயணித்த வாகனம், Shangbangla என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த 12 சக்கரங்கள் கொண்ட லாரி ஒன்று இவர்களின் காரில் மோதியிருக்கிறது. சாலையில் நடுவே இருந்த டிவைடரைத் தாண்டி அந்த லாரி மோதியதில், கார் நிலைகுலைந்திருக்கிறது. காரின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் விஸ்வா, அருகிலிருக்கும் Nongpoh சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனை கொண்டுசெல்லப்படும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடன் காரில் பயணித்த, ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னஜி சீனிவாசன் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள். இளம் வீரர் விஸ்வாவின் மரணத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read –