இப்போ இருக்க 2கே கிட்ஸுக்கு 10 நிமிஷம் கரண்ட் இல்லாம இருந்தாலே அப்செட் ஆயிடுவாங்க… ஆனால், 2010ல ஒருநாளைக்கு 16 டு 18 மணி நேரம் கரண்ட் கட் ஆன நிலைமையைப் பத்தி தெரியுமா… பவர் கட்ல தமிழ்நாடே இருண்டு கிடந்த நிலைமைக்கு என்ன காரணம்… `அதை ஏன் தம்பி நியாபகப்படுத்துறீங்க.. நெஞ்சமெல்லாம் புண்ணா கிடக்கு’னு 90ஸ் கிட்ஸ் புலம்புற அளவுக்கு அப்போ மோசமான சூழல் இருந்துச்சு… அந்த ஃபிளாஷ்பேக்கைத்தான் நாம இப்போ பார்க்கப்போறோம்.
மின்வெட்டு பிரச்னை
தமிழ்நாட்டுல மின்வெட்டு பிரச்னை 2001-2010 வரை ரொம்பவே மோசமா இருந்துச்சு.. எந்த அளவுக்கு இருந்துச்சுன்னா, ஒரு கட்டத்துல தினமும் 18 மணி நேரம் மின்வெட்டு இருக்குனு எதிர்கட்சியான அ.தி.மு.க-ல இருந்து ஜெயலலிதா ராசிபுரம் கூட்டத்துல பேச, தி.மு.கவோட மின்சாரத் துறை அமைச்சரா இருந்த ஆற்காடு வீராசாமி, அப்படியெல்லாம் இல்லீங்க ஆறரை மணி நேரம்தான் மின்வெட்டுனு அபீஷியலாவே நேரக் கணக்கு சொன்னாரு. கவர்மெண்டோட கணக்கு இப்படின்னா கிராமங்கள்ல அப்போ இருந்த நிலைமை என்னானு நாம சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
2011-ல தி.மு.க ஆட்சியை இழக்க மின்வெட்டுதான் முக்கியமான காரணமா இருக்கப் போகுதுனு 2008-லயே அந்தக் கட்சியோட சீனியர் ஒருத்தர் கணிச்சு, அதை ஒரு கூட்டத்துலயே சொன்னாரு… அதை நினைச்சு எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமே வர மாட்டேங்குதுனு அவர் சொன்னதுதான், 2011ல நடக்கவும் செஞ்சது… அந்த சீனியர் யாருனு கெஸ் பண்ணிட்டே இருங்க… நான் பின்னாடி சொல்றேன்..
சரி தமிழ்நாட்டுல வரலாறு காணாத மின்வெட்டு பிரச்னை அப்போ ஏற்பட என்ன காரணம்?
இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம் 2001 தொடங்கி 2010 வரைக்குமான காலகட்டத்தில் தொடர்ச்சியா அதிகரிச்ச மின் தேவையை சரியாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப மின் உற்பத்திக்குனு புதிய திட்டங்களை எந்தவொரு அரசும் செய்யவில்லை என்பதுதான். இதப்பத்தி ஒரு சின்ன புள்ளிவிபரத்துல விவரமா தெரிஞ்சுக்கலாம். 2001ல தமிழ்நாட்டோட மொத்த மின் தேவை 6000 மெகாவாட். இதுவே, 2010ல 10,000 மெகாவாட்டா அதிகரிச்சுச்சு. யூனியன் பிளானிங் கமிஷனோட டேட்டாபடி, மத்திய தொகுப்பு, காற்றாலை மின்சாரம் தவிர்த்து 2001ல தமிழ்நாட்டுல 5,222 மெகாவாட் அளவு மின் உற்பத்தி திறன் கொண்ட அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தன. 2010 இறுதியில் இது 5,705 மெகாவாட் என்ற அளவில்தான் வளர்ச்சியடைந்திருந்தது. யோசிச்சுப் பாருங்க இந்த காலகட்டத்துல தேவைன்கிறது 4,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிச்ச நிலைமைல உற்பத்திக்குனு புதுசா எந்தவொரு திட்டமும் கொண்டுவரப்படலைன்றதுதான் கள நிலவரம். தமிழ்நாட்டோட அந்த இருண்ட காலத்துக்கு அடிப்படையான காரணமா அப்போ வல்லுநர்கள்லாம் சுட்டிக்காட்டுனது இந்தப் பிரச்னையைத் தான்.
2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்சாரத் துறை அமைச்சரா இருந்தவர் ஆற்காடு வீராசாமி. அப்போ, மின்வெட்டு பிரச்னை உச்சத்துல இருந்த நேரத்துல, அவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். தே.மு.தி.க நிறுவனத் தலைவரான விஜயகாந்த், அவர் மின்வெட்டுத் துறை அமைச்சர்னே விமர்சனம் பண்ணினார். ஜெயலலிதாவும் தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சனம் பண்ணார். மின்வெட்டு பிரச்னையை முன்வைச்சே 2011ல அதிமுக ஆட்சியைப் புடிச்சுச்சு. ஆனால், அந்த அரசாலும் இந்தப் பிரச்னையை உடனடியாக சரி பண்ண முடியல. 2012ல மின்வெட்டே இருக்காதுனு அதிமுகவோட மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொன்னார். ஆனால், 2012லயும் ஒரு கட்டத்துல 10 மணி நேரத்துக்கு மேல மின்வெட்டு பிரச்னை இருந்துச்சு.. 2014ல தமிழ்நாட்டுல மின்வெட்டு அப்டிங்குற பிரச்னையே இருக்காதுனு சொல்லி இதுக்கும் பின்னாடி விளக்கம் கொடுத்தாரு நத்தம் விஸ்வநாதன்.
நான் முன்னாடி கேட்டிருந்தேன்ல யார் அந்த திமுக சீனியர்னு கண்டுபிடிச்சுட்டீங்களா… ஆமாங்க, 2008-ல வேலூர்ல நடந்த ஒரு கூட்டத்துல மின்வெட்டு பிரச்னை தி.மு.கவுக்குத் தோல்வியைக் கொடுத்துடுமோன்னு நைட் பூராம் தூக்கமே வரமாட்டேங்குதுனு ஆற்காடு வீராசாமி ஓபனாவே பேசியிருந்தாரு.
2013-லயும் நிலைமை மோசமாத்தான் இருந்துச்சுன்னே சொல்லலாம். இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். பெங்களூர்ல செட்டிலான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் கோயம்புத்தூர்ல தனியா தங்கியிருந்தார். திடீர்னு அவர் உடல் நலன் சரியில்லாம இறந்துபோயிடுறாரு. அவரோட உடல் தகனம் செய்றதுக்காக கோவையில இருக்க ஒரு மின் தகன மேடைக்குக் கொண்டுபோறாங்க. ஆனால், ஷெட்யூல்டு பவர் கட்டுக்கு மின் தகன மேடையும் தப்பிக்கல. காலைல 11 மணிக்கு கரண்ட் கட் இருக்கும்ன்றதுனால, அதுக்கு முன்னாடியே உடலைத் தகனம் பண்ண வேண்டிய நிலைமை. ஆனால், பெங்களூர்ல இருந்து குடும்பத்தினர் அந்த டைமுக்குள்ள வந்து சேர முடியாது அப்படிங்குற நிலைமைல, கனத்த மனசோட அந்த பிளானையே அவங்க கைவிட்டுட்டாங்க. இப்படியான கரண்ட் கட் சம்பவங்களால, அப்போ பப்ளிக் எக்ஸாம் எழுதுன ஸ்டூடண்ட்ஸ் தொடங்கி, சிறு,குறு தொழில் பண்ணவங்கனு எல்லா தரப்பு மக்களும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க..
“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, லட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள். மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”…. அப்போ இருந்த நிலைமையை விளக்குற மாதிரி இப்படி ஒரு விளம்பரம் 2013 பிப்ரவரி 16-ம் தேதியிட்ட பிரபல நாளிதழ்கள்ல வந்துச்சு… தமிழகத்தின் ஜவுளி, என்ஜினீயரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரம் மூலமா கோரிக்கை வைச்சிருந்தாங்க.. அந்த விளம்பரத்துக்கு யாரும் செவிசாய்க்கலை அப்டிங்குறதுதான் உண்மை.
சமீபகாலமாக தமிழ்நாட்டுல மீண்டும் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கிருக்கு… எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சிக்கு இந்த விவகாரத்துல கண்டனம் தெரிவிச்சுட்டு வர்றாங்க.. ஆளுங்கட்சியும் அதுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்காங்க.. இப்ப ஏற்பட்டிருக்க இந்த நிலைமைக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கிறீங்க.. கமெண்ட்ல சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.
Also Read – கவுண்டமணியின் ஆஃப் ஸ்கிரீன் தக் லைஃப் சம்பவங்கள்!