உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு நிறுவனங்களில் ஒன்று, நெஸ்லே. இந்த நிறுவனமானது அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அவ்வகையில், தற்போது அந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் இடையே பகிரப்பட்ட அறிக்கை ஒன்று லண்டனைச் சேர்ந்த ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் உணவுப் பொருள்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானவை ஆரோக்கியமானதல்ல என்பதை அந்நிறுவனம் ஒப்புக் கொள்கிறது. மேலும், அதன் தயாரிப்பு பொருள்களில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும் அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயாரிக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்ச்சையின் பின்னணி என்ன?
நெஸ்லே நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் இருந்து கசிந்த அறிக்கையின்படி, அந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவுப் பொருள்கள் மற்றும் பானங்கள் ஆகியவை அதன் சுகாதாரத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை. ஃபைனான்சியல் டைம்ஸின் தகவலின்படி, கசிந்த அறிக்கையானது 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரிகள் இடையே பகிரப்பட்ட இண்டர்னல் பிரசண்டேஷன் ஆகும்.
நெஸ்லே தயாரிக்கும் பொருள்களில் வெறும் 37 சதவிகிதப் பொருள்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையின் கீழ் 3.5-க்கும் மேல் மதிப்பீட்டை அடைகிறது. நெஸ்லேவின் மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம்களில் 99 சதவிகிதம் ஆரோக்கியத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட வரையறையை பூர்த்தி செய்யவில்லை. சுத்தமான காபியைத் தவிர 96 சதவிகித பானங்கள் அதன் வரையறையை பூர்த்தி செய்யவில்லை. எனினும், செல்லப்பிராணிகளின் உணவு, குழந்தைகளின் உணவு மற்றும் ஹெல்த் சயின்ஸ் பிரிவு பொருள்கள் ஆகிவரை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
நெஸ்லே நிறுவனத்தின் ரிப்ளை..
சர்க்கரை மற்றும் சோடியத்தின் அளவை கடந்த ஏழு ஆண்டுகளில் 14 முதல் 15 சதவிகிதம் குறித்துள்ளதாக அந்த நிறுவனம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து மற்றும் ஹெல்த் ஸ்ட்ரேட்டஜிக்களை புதுப்பிக்க நிறுவன அளவிலான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக நெஸ்லே நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரோக்கியமான உணவு என்பது நல்வாழ்வுக்கும் எஞ்சாய்மெண்டுக்கும் இடையில் உள்ள சமநிலையைக் கண்டறிவது என்பதை நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய நிறுவனம் பயணிக்கும் திசை மாறவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து எங்களது போர்ட்ஃபோலியோவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
பி.டி.ஐ-யில் வெளியான அறிக்கையில் நெஸ்லே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “ஊட்டச்சத்தானது அடிப்படை தேவை என்பதை நெஸ்லே இந்தியா நம்புகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. எங்கள் தயாரிப்புகளில் ஊட்டச்சத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளர்ஹு
நெஸ்லே நிறுவனத்தின் முந்தைய சர்ச்சைகள்..
நெஸ்லே நிறுவனம் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. 1970-களில் தாய்ப்பாலுக்கு மாற்றான ஒரு ஃபார்முலாவை பொருளாதாரரீதியாக பின்தங்கிய நாடுகளில் இந்த நிறுவனம் மிகத் தீவிரமாக விளம்பரப்படுத்தியது. இதனால், குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்பட்டது மட்டுமல்லாது, பல இடங்களில் இறப்பும் நிகழ்ந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் குளுட்டமேட் மற்றும் அதிகளவு லெட் இருப்பதைக் கண்டு ஆய்வுக்கு உட்படுத்தினர். இதனால், இந்தியாவில் மேகி தடை செய்யப்பட்டது. உணவு தொடர்பான சர்ச்சைகளில் மட்டுமல்லாது வணிக நடைமுறைகள் தொடர்பான விமர்சனங்களிலும் நெஸ்லே நிறுவனம் சிக்கியது.
Also Read : ஏஞ்சலினா ஜோலி பற்றிய 13 சுவாரஸ்ய தகவல்கள்!