ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணியின் கேப்டனாகக் கடைசி போட்டியில் விளையாடியிருக்கிறார் விராட் கோலி. கோப்பையோடு விடைபெற வேண்டும் என்ற அவரது ஆசைக்கு கொல்கத்தா அணி அணை போட்டிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி கேப்டனாக விராட் கோலி டாப் 7 இன்னிங்ஸ்கள்!
113 Vs பஞ்சாப் கிங்ஸ் – 2016
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி மழை காரணமாக 15 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆர்.சி.பி, விராட் கோலியின் சதம் உதவியால் 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. 50 பந்துகளில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களோடு விராட் கோலி எடுத்த ரன் 113. முதல் விக்கெட்டுக்கு கிறிஸ் கெய்லேவோடு சேர்ந்து 147 ரன்கள் சேர்த்தார். கெய்லே, 32 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
108* Vs ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் – 2016
2016 சீசனில் கோலியின் மற்றொரு மாஸ்டர் கிளாஸ் செஞ்சுரி இது. பெங்களூரில் நடந்த போட்டியில் ரஹானேவின் அசத்தல் ஆட்டத்தால் முதலில் பேட் செய்த புனே அணி 191 ரன்கள் குவித்தது. பெரிய இலக்கைத் துரத்திய பெங்களூர் அணிக்கு கேப்டன் விராட் கோலி சதமடித்து வெற்றி தேடித்தந்தார். அந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, 58 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களோடு 108 ரன்கள் குவித்தார். இதில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் வென்றது.
100 Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 2019
2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிராக தனது ஐந்தாவது சதத்தை கோலி பதிவு செய்தார். கொல்கத்தாவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களோடு 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலி, 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். 214 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா 85 ரன்களும் ரஸல் 65 ரன்களும் எடுத்து போராடினர். ஆனால், பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
90* Vs சென்னை சூப்பர்கிங்ஸ் – 2020
சி.எஸ்.கே பிளே ஆஃப் செல்லாத ஒரே ஐபிஎல் தொடரான 2020-ல் அந்த அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலியின் இன்னிங்ஸ் மறக்கமுடியாதது. துபாயில் நடந்த போட்டியில் மற்ற வீரர்கள் ஜொலிக்கத் தவறவே, தனியாளாகப் போராடிய கோலி, 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
100* Vs குஜராத் லயன்ஸ் – 2016
விராட் கோலி, தனது முதல் ஐபிஎல் சதத்தை குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராகக் கடந்த 2016 சீசனில் பதிவு செய்தார். இந்த சீசன் கோலியின் மறக்கமுடியாத சீசனாகும். அதில், 16 போட்டிகளில் 4 சதங்களோடு 973 ரன்கள் குவித்திருந்தார். ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரோடு 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலா குஜராத் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
93* Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2013
கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் சீசனில் கோலியின் பெஸ்ட் இன்னிங்ஸ்களிலில் முக்கியமானது. பெங்களூரில் நடந்த போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது ஹைதராபாத் அணி. சேஸிங்கின்போது, 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி கோலியின் அசத்தல் பேட்டிங்கில் போட்டியை வென்றது. 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களோடு 47 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் கோலி. பெங்களூர் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
92 Vs மும்பை இந்தியன்ஸ் – 2018
2018 ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கெதிரான போட்டியில் 214 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் தனியாளாகப் போராடினார் கோலி. மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா 54 பந்துகளில் 94 ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் விராட் கோலி, 62 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காதநிலையில், பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
Also Read – ViratKohli: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் விராட் கோலி… என்ன காரணம்?