புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துக்கண்ணமாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது.
பத்ம விருதுகள்

குடியரசு தினத்தை ஒட்டி தமிழகத்தைச் சேர்ந்த சௌகார் ஜானகி, சிற்பி பாலசுப்ரமணியம், சதிர் நடனக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த 84 வயதான முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது. தேவரடியார்கள் எனப்படும் மரபில் வந்தவர்களில் இன்று உயிருடன் இருக்கும் ஒரே நபராக முத்துக்கண்ணம்மாள் கருதப்படுகிறார். விராலிமலைக் கோயிலைச் சேர்ந்த 32 தேவரடியார்களில் எஞ்சியிருப்பது இவர் மட்டுமே.
யார் இந்த முத்துக்கண்ணம்மாள்?
கோயில்களில் நடனமாடி, அந்தக் கோயிலுக்கே பொட்டுகட்டிவிடப்படும் தேவரடியார்கள் நடைமுறை பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்தது. 1947-ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பலர் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக மதராஸ் மாகாணத்தில் `தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராமச்சந்திர நட்டுவனாரின் மகளாகப் பிறந்த முத்துக்கண்ணம்மாள், தனது குடும்பத்தில் ஏழாவது தலைமுறையாக சதிர் நடனக் கலைஞராக இருந்து வருகிறார். தனது 7 வயதில் சதிராட்டம் ஆடத் தொடங்கிய அவர் வயது முதிர்வு மற்றும் கொரோனா சூழலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடனம் ஆடுவதில்லை.

விராலிமலை முருகன் கோயிலுக்குப் பொட்டுகட்டிவிடப்பட்ட அவர், தினசரி காலை, மாலை என இரண்டு வேளைகள் முருகன் சந்நிதியில் சதிராட்டம் ஆடி வந்திருக்கிறார். பரத நாட்டியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் சதிராட்டத்தில், நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டே பாட வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விராலிமலை முருகன் கோயிலின் 32 தேவரடியார்களாக அறிவிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். தேவரடியார்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், தங்களின் மனதுக்குப் பிடித்தவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு வாழலாம். அந்தவகையில், முத்துக்கண்ணம்மாளின் நடனத்துக்கு ரசிகரான ஒருவரை துணைவராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவரும் இவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நடனக் கலையை இவரது மகள் கற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், நாட்டின் கடைசி சதிராட்டக் கலைஞராகவும் முத்துக்கண்ணம்மாள் கருதப்படுகிறார். தக்ஷிண சித்ரா விருது, நடனக் கலைக்கான கலாம்ஷூ கலை விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம், இவரது தந்தையிடம்தான் விராலிமலை குறவஞ்சியைக் கற்றுக்கொண்டிருக்கிறார். நடிகை சொர்ணமால்யாவுக்கு சதிராட்டக் கலையைக் கற்றுக்கொடுத்ததாகச் சொல்கிறார் முத்துக்கண்ணம்மாள். பத்மஸ்ரீ விருது பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், சதிராட்டக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வகையில் பள்ளி ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அதற்கு உதவும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.