பிஜூ மேனன் … ‘அய்யப்பனும் கோஷியும்’ மூலமா நம்மில் பலருக்கும் பரிச்சயமானவர். ஆனா, மலையாளத்துல அவரோட ஃபிலிமோகிராஃபியும், அவரோட கிராஃபும் மலைக்கத்தக்கது. யாரோடயும் கம்பேர் பண்ண முடியாத தனித்துவமானவர். அவர் நடிப்பில் ஐந்து அட்டகாச சினிமாக்களைதான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் தன்னோட இருப்பை கெட்டியா நிலை நிறுத்திட்டு இருக்கார் பிஜு மேனன். 150 படங்களுக்கு மேலாக நடிச்சிருக்கிற இவர் வாங்கிய விருதுகளின் பட்டியலே இவரோட கரியரை பத்தி சொல்லிடும். இரண்டு முறை சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர், ஒரு முறை சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது கிடைச்சிருக்கு.
போன வருஷம் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான தேசிய விருது, அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக கிடைச்சுது. இவர் வாங்கிய விருதுகள் பெரும்பாலானவை சப்போர்ட்டிங் ஆக்டர் பிரிவில்தான் கிடைச்சிருக்கு. யெஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஜு மேனன் சின்ன சின்ன கேரக்டர் ரோல், சப்போர்ட்டிங் ஆக்டர், வில்லன், செகண்ட் ஹீரோ… இப்படித்தான் ஸ்க்ரீன்ல நிறைய தோன்றியிருக்கார். கடந்த சில ஆண்டுகளாகத்தான் கதையின் நாயகனா அவர் அப்கிரேடு செய்யப்பட்டிருக்கிறார்.
பிஜூ மேனன் சம்பவம் 1 – அய்யப்பனும் கோஷியும்
ஏற்கெனவே பல படங்களில் தன்னோட பெர்ஃபார்மன்ஸ் மூலமாம திறமையை பதிவு செஞ்சிருந்தாலும் கூட ‘அய்யப்பனும் கோஷியும்’தான் அவரோட கரியரை புரட்டிப் போட்டுச்சுனு சொல்லலாம்.
அந்த ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துல இருந்தே ஆரம்பிப்போம். அரசியல், அதிகார ஆதிக்கம் மிகுந்த ஒருத்தனுக்கும், ஆதிவாசிப் பகுதியின் சாதாரண போலீஸுக்கும் இடையிலான ஈகோ க்ளாஷும், அதிரடி மோதலும்தான் படம். இந்தியா முழுக்க பிருத்விராஜ் ஏற்கெனவே நல்ல அறிமுகம்ன்ற சூழல்ல, பிஜூ மேனனை இந்தியா முழுக்க திரை ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட படம் இது.
காக்கிச் சட்டையில் கமுக்கம் காட்டுறது, காக்கிச் சட்டையை கழட்டினதுக்கு அப்புறம் காட்டாறா மாறி மாஸ் காட்டுறதுன்னு தெறிக்கவிட்டிருப்பார் பிஜூ மேனன். அதுவும் பஸ்ல இருந்து இறங்கி நடக்குற சீன் இருக்கே… அந்த மாதிரி ரொம்ப அசால்டா மாஸ் காட்டின சீனே இல்லைன்னு சொல்லலாம்.
அய்யப்பன் பக்கம் நியாயம் இருக்குறதால மட்டும் இல்லாம, பிருத்விராஜை ஏற்கெனவே ரொம்பவே பார்த்ததாலோ என்னவோ, அவரும் பிஜு மேனனும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் நாம பிஜு மேனன் பக்கமே இருப்போம். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு… அதுக்கு முக்கிய காரணமே பிஜு மேனனோட அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ்தான்.
பிஜூ மேனன் சம்பவம் 2 – ஒரு தெக்கன் தள்ளு கேஸ்
அடுத்து ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’… ‘அய்யப்பனும் கோஷியும்’ மாதிரியே இரண்டு ஆண்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சினைதான் இந்தப் படத்தோட மையமாக இருந்தாலும், அந்த மாதிரி பரபரன்னு எல்லாம் இருக்காது. மெலோ டிராமாவால போகும் இந்தப் படத்தோட கதைக்களமும் கதை மாந்தர்களும் ரொம்ப ரொம்ப வித்தியாசமானவை. கேரளாவில் ஒரு ப்யூட்டிஃபில் கடற்கரை கிராமம். அங்க ரெண்டு பேர் வாழ்க்கைல ஈகோவும் பிரஸ்டீஜும் ஒண்ணுக்கொண்ணு மோதி தெறிக்கும்போது பல விபரீதங்கள் ஏற்படுது. அதையெல்லாம் சீரியஸா மட்டும் இல்லாம, ரொம்ப ஜாலியா பேசின படம் இது.
படம் பார்க்குற ஆரம்பத்துல அய்யப்பன் சாயல்லே இருக்காரேன்னு யோசிக்கத் தொடங்கும்போதே, ‘நான் வேற ஒருத்தண்டா’னு காட்ற மாதிரி பிஜூ மேனன் பெர்ஃபராமன்ஸ் ஆரம்பிச்சிடும். பத்ம ப்ரியாவுடன் இவரோட கெமிஸ்ட்ரி செமயா ஒர்க் அவுட் ஆகியிருக்கும். சீரியஸான சினிமா ரசிகர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாத்தாது.
சம்பவம் 3 – வெள்ளிமூங்கா
நாற்பது வயதாகி மிடில் ஏஜில் சிங்கிளாக இருக்கும் ஒருத்தரின் வாழ்க்கையில் காதலும் அரசியலும் கலந்துகட்டி கலாட்டா பண்ணும் கதைதான் ‘வெள்ளிமூங்கா’. 2014-ல் வெளிவந்த இந்தப் படத்துக்காக, ஏசியா நெட்டின் பெஸ்ட் பாப்புலர் ஆக்டர் விருது பிஜுக்கு கிடைச்சுது.
எத்தனையோ படங்கள்ல ஆக்ரோஷம், எமோஷன்னு தன்னோட பெர்ஃபார்மன்ஸ்ல பேரு வாங்கின பிஜு, இந்தப் படத்துல அட்டகாசமான நகைச்சுவை நாயகனாக பொளந்து கட்டியிருப்பாரு. இந்தப் படம் கேரளால செம்ம ஹிட்டு. இதே படம் சுந்தர் சி நடிப்புல இங்கே ‘முத்தின கத்திரிக்கா’ன்ற பேர்ல வந்து போனது வேற வரலாறு. ஒரு முழு நீள ரகளையான டீசன்ட் காமெடி படம் பாக்கணும்னா, பிஜூ மேனனோட இந்த ‘வெள்ளிமூங்கா’ (Vellimoonga) நல்ல சாய்ஸ்.
சம்பவம் 4 – லீலா
தீவிர சினிமா ஆர்வலர்கள், உலக சினிமா ஆர்வலர்கள் பார்த்தே ஆக வேண்டிய பிஜூ மேனன் படம் தான் ‘லீலா’. அது ஒரு கிராமம். பரம்பரை சொத்து நிறைய. அனுபவிக்க ஒரே ஆள். திருமணம் ஆகவில்லை. ஆனால், ஏறக்குறைய பல இரவுகள் தனியாகக் கழிவதில்லை. தனி மனித வாழ்க்கையில் கமிட்மென்ட்ஸ் ஏதுமில்லை. சுகானுபவம் மட்டுமே கமிட்மென்ட்ஸ். அந்தக் கதாபாத்திரத்தில் பிஜு மேனன் பிரித்து மேய்ந்திருந்தார். தான் கண்ட ‘வேற லெவல்’ கனவு ஒன்றை நிஜமாக்க பயணிக்கும் ப்ரொட்டாகனிஸ்ட். அந்தப் பயணம் – முயற்சிகளுடன் தொடர்புடைய கதாபாத்திரங்கள், பின்னணிகளை மையமாகக் கொண்ட அந்தக் கனவு போல் நம்மால் எளிதில் கணிக்க முடியாத நிறைவை உள்ளடக்கிய படம் தான் ‘லீலா’.
படத்தோட ஓப்பனிங் சீன்லயே பிஜூ மிரட்டியிருப்பார். அது ஓர் இரவு. ஒரு பாலியல் தொழிலாளியை வீட்டுக்கு அழைத்திருப்பார். அந்தப் பெண், புதியவள். இளம்பெண். ‘வெயில்’ படத்தின் ஹீரோயின் பிரியங்காதான் அவர். அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுக்கும் பிஜு, தன்னை ஒரு பிணம் போல் ஒப்பனை செய்துகொண்டு படுப்பார். ‘இந்த பாரும்மா… நான் தான் உன் அப்பா. செத்துட்டேன். நீ நல்லா அழு’ என்பார். அந்தப் பெண்ணுக்கு ஒண்ணும் புரியாது. முழித்துக்கொண்டிருப்பார். ‘என்னை அப்பாவா நினைச்சு அழும்மா’ன்னு மீண்டும் பிணம் போல் படுத்துக்கொள்வார். அந்தப் பெண் உண்மையிலேயே தேம்பித் தேம்பி அழுவார். பிஜு ஆறுதலாக அணைப்பார். அப்போது அந்தப் பெண் சொல்வார்… “என் அப்பா ரீசண்டா இறந்துட்டாரு. பிழைக்க வேறு வழியில்லாம இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்”னு சொல்லும்போது பிஜுவோட ரியாக்ஷன் இருக்கே… ப்ப்பா… செம்மயா இருக்கும்.
இந்தப் படம் பொழுதுபோக்கு ரசிகர்களுக்கானது அல்ல. இது வேற மாதிரியான படம்னு மட்டும் மனசுல வெச்சுக்கோங்க.
சம்பவம் 5 – தங்கம்
இந்த ஆண்டு ஜனவரியில் தியேட்டர்களில் ரீலீஸ் ஆகி, இப்போ அமேசான் ப்ரைம் ஓடிடில கிடைக்கிற ‘தங்கம்’ படத்துல மனுஷன் தன்னோட அப்பாவித்தனமான, அதே நேரத்துல ரொம்ப துடிப்பான கேரக்டர்ல படம் முழுக்க ஸ்கோர் பண்ணியிருப்பார்.
தங்கம் நகை சார்ந்த தொழில் பின்னணியில், தங்கத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் டேஞ்சரான வேலை பண்ற கேரளாவைச் சேர்ந்த வினீத் ஸ்ரீனிவாசன் மர்மமான முறையில மகாராஷ்டிரால மரணம் அடைகிறார். அந்த மாநில போலீஸ், அதுதொடர்பா தமிழ்நாட்ல விசாரணை நடத்துறார். இந்தப் புலன் விசாரணையும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய உணர்வுபூர்வ பின்புலங்களும்தான் இந்தப் படத்தோட லைன். இந்தப் படம் பேசும் சமூகப் பொருளாதார அரசியல் ரொம்ப அழுத்தமான ஒண்ணு.
இதுல, வினீத் மீது அளவில்லா பாசம் கொண்டவராக பிஜூ மேனன் வருவார். அவரது அந்த முத்து கதாபாத்திரம்தான் மற்ற எல்லாரையும் விட ஆடியன்ஸை உள்ளே இழுத்திருக்கும். அதுக்கு, அந்தக் கதாபாத்திர வடிவமைப்பு மட்டுமல்ல, அதை கச்சிதமான பண்ணின பிஜு மேனனும்தான் காரணம். அவர் ஒரு காட்சியில கூட கண்கலங்க மாட்டார். ஆனா, அவரோட ரியாக்ஷன்ஸ் எல்லாம் நம்மளை ஒரு மாதிரி ஆக்கிடும்.
இவ்ளோ வெள்ளந்தியான மனுஷனான்னு யோசிச்சுட்டு இருக்குறப்ப, படத்துல கலையரசனை பிடிக்கிற ஆக்ஷன் ப்ளாக்ல அவர் என்ட்ரியா ஆகுற சீன்… ப்ப்பா… மெய் சிலிரிக்க வைக்கும். படத்தோட இறுதிக் காட்சிகளில் மராட்டிய போலீஸை அலட்சியமாக அணுகுற விதமாகட்டும், கார்ல போகும்போது அபர்ணாவோட பேசுற சீன் ஆகட்டும்… எல்லாமே க்ளாஸ் ரகம்!
Also Read – லியோவுடன் மோதத் தயாரான ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதை!
இந்த அஞ்சு படமும் ஜஸ்ட் சாம்பிள்தான். நீங்கள் தவிர்க்க கூடாத… பிஜு மேனனுக்காகவே பார்க்க வேண்டிய பத்து படங்கள் சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க.
Mulla
Mannar Mathai Speaking
Meghamalhar
Snehaveedu
Marykkundoru Kunjaadu
Ordinary
Run Baby Run
Anarkali
Anuraga Karikkin Vellam
Aarkkariyam
பிஜு மேனன் பத்தின உங்க பார்வை, அவரோட படங்கள்ல உங்களுக்கு பிடிச்சது பத்தி மறக்காம கமெண்ட் பண்ணுங்க.