கமலுக்கும் அவரது ரசிகர்களுக்கும் நீண்டகால ஏக்கமாக இருந்துவரும் படம் ‘மருதநாயகம்’. இன்னும் திரையைத் தொடாத ‘மருதநாயகம்’ படத்தின் பூஜை நடந்து 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தப் படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் முன்பு கமல் செய்த ஒரு தரமான சம்பவம் பற்றி தெரியுமா உங்களுக்கு..?
கமல் நடித்து, தயாரித்து அவரே இயக்குவதாகவும் இருந்தப் படம்தான் ‘மருதநாயகம்’. 1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு சுற்றுலா வரத் திட்டமிட்டிருந்தார். இதை முன்கூட்டியேத் தெரிந்துகொண்ட கமல், ராணியின் அலுவலகத்தை முறைப்படி தொடர்புகொண்டு தனது ‘மருதநாயகம்’ படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொள்ள முடியுமா என வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று அந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணியும் கலந்துகொண்டார். அந்த வருடம் அக்டோபர் 16-ஆம் தேதி எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த அந்த நிகழ்வில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிவாஜி, ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
‘மருதநாயகம்’ படத்தின் கதைப்படி, நாயகனான ‘முகமது யூசுப்கான்’ (எ) மருதநாயகம் 18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்த்தெழுந்து மிகப்பெரும் படையுடன் போராடியவர். பின்னர் பிரிட்டிஷாரின் நயவஞ்சகத்தால் சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகம் பின்னர் தூக்கிலிடப்பட்டார். இவ்வாறு மருதநாயகம் வரலாறு முழுக்கவே பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றிருக்கும்.
இப்படியான பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு படத்தில் இங்கிலாந்து ராணியை கலந்துகொள்ள செய்ததே ஒரு மாஸான சம்பவம். ஆனால் கமல் அதனினும் ஒரு படி மேலே போய், இங்கிலாந்து ராணி முன்பே, மருதநாயகம் பிரிட்டிஷாரை தாக்கி பேசும் வசனம் ஒன்றை பேசி நடித்திருக்கிறார். அதுவும் அந்த வசனத்தை ஃப்ரெஞ்சு மொழியிலேயே பேசி நடித்திருக்கிறார் கமல்.
ஆனால் இதை எதையும் மனதில் வைத்துக்கொள்ளாத இங்கிலாந்து ராணி, கமலின் நடிப்பை பாராட்டியதுடன் படத்துக்கான ஏற்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பூஜைக்கு வந்திருந்த பிரபலங்கள் பலரும் இங்கிலாந்து ராணி முன்பே பிரிட்டிஷ் அரசாங்கத்தைத் தாக்கும் விதமாக பேசி நடித்த கமலின் தைரியத்தையும் சாதுர்யத்தையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். கமல் அப்படி என்ன பேசி நடித்திருப்பார் என்பதை ‘மருதநாயகம்’ படம் முழுமையாக எடுக்கப்பட்டு வெளிவந்தால்தான் நமக்கும் தெரியும்போல. அப்போதைய பட்ஜெட்படி ‘மருதநாயகம்’ படத்துக்கு ஐம்பது கோடி பட்ஜெட் திட்டமிட்டிருந்தார் கமல். இப்போதைய காலகட்டத்துக்கென்றால் கேட்க வேண்டுமா.. எங்கேயோ போய் நிற்கிறது பட்ஜெட்.
Also Read : `1991 நெருக்கடி காலத்தை விட ஆபத்தில் இருக்கிறோம்’ – மன்மோகன் சிங் சொல்வது என்ன?
Very interesting topic, thank you for posting.Raise blog range