ராதாரவி… ஹீரோ, வில்லன், காமெடி, கேரக்டர் ஆர்டிஸ்ட்… அப்படியே கட் பண்ணா அண்ணன், தம்பி, அப்பா, மாமா… இன்னொரு கட் பண்ணா போலீஸ், அரசியல்வாதி, சாமியார்… – இப்படி எல்லா பாக்ஸ்லயும் டிக் ஆகுற மாதிரியான அட்டகாசமான நடிகர்தான் ராதா ரவி. தமிழ் சினிமா பார்த்த ரொம்ப ரேர் பீஸ்களில் முக்கியமான பீஸ். அவரோட ஃபிலிமோகிராஃபியை அனலைஸ் பண்ணும்போது, ராதா ரவி மீதான மதிப்பு நிச்சயம் பல மடங்கு கூடும். அவரோட பெஸ்ட்களில் சில சாம்பிள்களையும், கூடவே நிஜ வாழ்க்கையிலும் அரசியலிலும் அவர் பண்ண கலாட்டக்களை ஷார்ட்டாவும் இந்த வீடியோ ஸ்டோரில பார்ப்போம்.
நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். எம்.ஆர்.ராதாவின் மகன், ராதிகாவின் சகோதரர்தான் ராதா ரவி. அப்போ மாதிரியே நக்கல், நையாண்டி, கலாய்ப்புகளில் கில்லி. ஓபனா பேசுறது தொடங்கி கெத்து காட்டுறது வரைக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், ரியல் லைஃப்ல சிந்தனையும் செயலும் வேற வேற. அது வேற டிபார்ட்மென்ட்ன்றதால இப்போதைக்கு அதுக்குள்ள போக வேணாம்.
அப்பா மாதிரியே நாடகத் துறைதான் ராதா ரவிக்கு முகவரி. சின்ன வயசுல நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கார். அதோட அனுபவத்தை ரொம்ப நல்லாவே தன்னோட சினிமா கரியருக்கு பயன்படுத்திக் கொண்டார்னே சொல்லலாம்.
ராதா ரவியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர். அவரை ரெகமண்ட் செய்தது கமல்ஹாசன். 1976-ல் வெளிவந்த ‘மன்மத லீலை’தான் முதல் படம். சின்ன ரோல். ரக்கட் பாயா புல்லட்ல காதலியோட சுத்துவாரு. அந்தப் படத்துல அவருக்கு பெருசா ஸ்கோப் இல்லைன்னாலும், ‘தண்ணீர் தண்ணீர்’ல முக்கியமான போலீஸ் கேரக்டரை பாலச்சந்தர் கொடுத்திருப்பார்.
1984-ல் வெளிவந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படம்தான் தமிழ் ரசிகர்களை ‘யார்ரா இது?’ன்னு கவனிக்க வைச்சுது. அந்தப் படத்துல ‘வெள்ளிக்கிழமை ராமசாமி’ன்ற கேரக்டர் செம்ம ஹிட். அவரோட இன்ட்ரோ சீனே செம்ம மாஸா இருக்கும். மாமூல் வாங்குற ரவுடியாகவும், பாசக்கார அண்ணனாவும் நடிச்சிருப்பார். அந்தப் படத்துல இருந்துதான் ராதா ரவின்னாலே ஒவ்வொரு படத்துலயும் வேற வேற கெட்டப்களில் வரும் ஆர்ட்டிஸ்ன்ற அடையாளம் தொடங்கும்.
ராதா ரவியோட முதல் ஸ்பெஷலே இதான். அவர் மேக்கப்புக்கு ரொம்பவே மெனக்கெடுவார். இயக்குநர்கள் கண்டுக்கலைன்னா கூட தானாவே எஃபர்ட் போட்டு வித்தியாசமான தோற்றத்துல ஸ்க்ரீன்ல தோன்றுவார். உண்மை என்னன்னா, தமிழ் சினிமாவின் வில்லன் – கேரக்டர் ஆர்ட்டிஸ் டாப் லிஸ்ட்ல இருக்குறவங்கள்ல ஒவ்வொரு படத்துலயும் வெரைட்டியான தோற்றத்தைக் காட்டினவங்கள்ல ராதா ரவிதான் டாப்ல வருவாரு. ஒரு படத்துல பார்த்த ராதா ரவியை இன்னொரு படத்துல பார்க்குறது கஷ்டம்.
வைதேகி காந்திருந்தாள் ‘வெள்ளிக்கிழமை ராம்சாமி’ கேரக்டர், கூலிக்காரன் படத்துல பணக்காரனா வர்ற சக்ரவர்த்தி கேரக்டர், ‘சாது’ படத்துல வர்ற விபூதி வீரமுத்து தாதா கேரக்டர் தொடங்கி ‘ஜில் ஜங் ஜக்’ல வர்ற ரோலக்ஸ் ராவுத்தர் வரைக்கும் பல படங்கள்ல அவரோட கெட்டப்பும் மேக்கப்பும் தனியாக நம்ம அட்டேன்ஷனை ஈர்க்கும். அந்தந்த கேரக்டருக்கும் பொருத்தமான வெயிட்டேஜை ஏத்தியிருக்கும்.
அடுத்து பாடி லேங்குவேஜ்… க்ளெவரான டைரக்டர்ஸ் எல்லாம் ராதாரவியோட ரேஞ்சு தெரிஞ்சு, அவர்கிட்ட இருந்து வித்தியாசமான மேனரிசங்களை, பாடிலேங்குவேஜை யூஸ் பண்ணிப்பாங்க. ஒருவேளை டைரக்டர் கேக்கலைன்னா கூட, தன்னோட வேல்யூவாக்க குட்டி குட்டி மேனரிசங்களை ஸ்க்ரீன்ல காட்டி ஸ்கோர் பண்றதுல ராதா ரவி செம்ம ஷார்ப்பு.
‘அண்ணாமலை’ படத்துல மார்லன் பிராண்டோ ரேஞ்சுல கேஷுவலா முதுகு சொறியறது, ‘சர்கார்’ல வாய்லயே பல வித்தைகள் காட்டுறது வரைக்கும் எக்கச்சக்க ரெஃபரன்ஸ் எடுத்துப் போடலாம். நீங்க பார்க்குற ஒவ்வொரு ராதா ரவி படத்துலயுமே அவரோட வேற வேற மேனரிசங்களை கவனிச்சுப் பார்த்தா தெளிவா தெரியும்.
என்னதான் ஆரம்பத்துல க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்தாலும் கமல்ஹாசன் தன்னோட படங்கள்ல ராதா ரவியை தொடர்ந்து அவாய்ட் பண்ணதும் நடந்திருக்கு. அதுக்கு காரணம், ஸ்க்ரீன்ல தன்னோட பெர்ஃபார்மன்ஸ் மூலமா ராதா ரவி ஈஸியா டாமினேட் பண்ணிட்டு போயிடுவாருன்றதும்னும் சொல்லப்படுது. அந்த அளவுக்கு டாப் ஹீரோக்களுக்கே அச்சுறுத்தலாக இருந்தவர். ஆனா, அண்டர் ப்ளே பண்ணியே அப்ளாஸ் வாங்குற ரஜினியால, ராதா ரவியை ஈஸியா ஹேண்டில் பண்ண முடிஞ்சுது. அதனால, ரஜினியோட நிறைய படங்கள்ல ராதா ரவி நிச்சயம் இருப்பார்.
‘குரு சிஷ்யன்’ படத்துல ரஜினியும் பிரபுவும் சேர்ந்து ரவுசு பண்ண… சில சீன்களில் நம்ம ராதாரவி செம்ம ரகளை பண்ணியிருப்பார். ‘அண்ணாமலை’ படத்துல ராதா ரவி சொல்ற அந்த ‘கூட்டிக் கழிச்சிப் பாரு… கணக்கு சரியா இருக்கும்’ன்ற பஞ்ச்தான் இன்னிக்கு வரைக்கும் ஹிட். ரீசன்ட்டா பார்த்தோம்னா ‘மனிதன்’ படத்துல வாதாடுறதுல உதயநிதியும் பிரகாஷ் ராஜும் போட்டி போட்டுட்டு இருக்கும்போது, அதே கோர்ட் ரூம்ல வாய்ஸ் மாடுலேஷன், இயல்பான சின்ன சின்ன மேனரிசங்கள், பாடி லேங்குவேஜுனு அசால்டா ஷோவை ஸ்டீல் பண்ண ட்ரை பண்ணியிருப்பார். இப்படி பல உதாரணங்களைச்சொல்லலாம்.
வெர்சட்டைல் ஆக்டரான ராதாரவிக்கு சீரியஸான அப்பியரன்ஸை வெச்சுகிட்டே செம்மயா வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற மேஜிக்கும் ரொம்பவே நல்லா தெரியும். இந்த ஏரியாவுல அவர் செம்ம மாஸ்டர்னே சொல்லலாம். ‘லக்கி மேன்’ல தங்கச்சிக்கு கண்ணாலம் கவிதை சொல்ற ரவுடி ரோல் அதகளமா இருக்கும். கொஞ்சம் வருஷமாவே ஒரு க்ளிப் செம்ம வைரலா இருந்ததை கவனிச்சிருக்கலாம். சாமியார் வேஷத்துல… “க்யூலா வாடா”னு சொல்ற சீன் இருக்கே… ப்பா… செம்ம ஸ்பான்டேனியஸ் அது. 2018-ல் வந்த ‘வீரா’ன்ற படம் அது. ‘ஸ்கெட்ச் சேகர்’ன்ற கேரக்டர் பண்ணியிருப்பார்… சாமியாரா திருந்தி வாழுற ரவுடியா ராதா ரவி வந்திருப்பார். சாமியாரா இருந்தாலும் பழைய வாழ்க்கை அனிச்சையா தனக்குள்ள ஊறிக்கிடக்குன்றதை காட்டுற அந்த ‘க்யூல வாடா’ சீன்…. ஒரு நிமிஷத்துல நம்மளை மீண்டும் மீண்டும் நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்கிற அட்டகாசமான சீன்.
இதெல்லாம் ஓகே… ரொமான்ஸ் வருமான்னு கேட்டா, அதுவும் இருக்கே நம்மாளுகிட்ட. ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்துல வர்ற ‘பூவே செம்பூவே’ பாட்டை போய் யூடியூப்ல பாருங்க. ராதா ரவி முகத்துல காதல் ரசம் சொட்டுவதை கவனிக்கலாம். என்ன, ரொமான்ஸ் ஏரியால பெருசா அவரை தமிழ் சினிமா யூஸ் பண்ணிக்கலைன்றது வருத்தம்தான்.
என்னதான் விதவிதமான ரோல்களில் வில்லத்தனமும் காமெடியும் பண்ணாலும் ராதா ரவியின் பெஸ்டுகளை லிஸ்ட் பண்ணினா, அதுல அவரோட எமோஷனல் பெர்ஃபார்மன்ஸ்தான் கண்ணு முன்னாடி வந்து நிக்கும்.
‘அண்ணாமலை’ல மகன் அசோக் கிட்ட புலம்புர சீன், அதே படத்தோட எண்டுல மனோரமா கால்ல விழுந்து கதறுற சீன் எல்லாம் அவ்ளோ ஆத்மார்த்தமானதா இருக்கும். அதே மாதிரி ‘சின்னத் தம்பி’ல இருந்து ‘காதலுக்கு மரியாதை’ வரைக்கும் பல பாசக்கார அண்ணன் கதாபாத்துல ஆக்ரோஷமாவும் எமோஷனலாவும் பொளந்துகட்டியிருப்பார்.‘அரண்மனை 2’-ல மகள் ஹன்சிகாவுக்கு தன் கையாலயே விஷமும் கொடுத்துட்டு, தன் மடிலயே கிடத்தி புலம்புற சீன் செம்ம இன்ட்டன்ஸா இருக்கும். எல்லாத்துக்கும் உச்சம்னா, ‘பிசாசு’ படத்துல வர்ற அந்த அப்பா கேரக்டர். ஒரு டைரக்டர் என்ன கேட்கிறாரோ, அதை அப்படியே கொஞ்சம் கூட பிசிறு இல்லாம தரக் கூடிய பெஸ்ட் ஆக்டர்களில் தானும் ஒருவர்னு அந்தப் படத்துல ராதா ரவி நிரூபிச்சிருப்பார். அவர் ஒரு ‘க்ளாஸ் ஆக்டர்’ அப்டீன்றதுக்கு ‘பிசாசு’ ஒரு படமே போதும்.
ஆனா, ரியல் லைஃப்ல தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற விதம்தான் ராதா ரவி எனும் திரை ஆளுமையை அப்படியே மறைச்சுடுதுன்னு சொல்லலாம். ஒரு நடிகர், நடிகை, இயக்குநர் தொடர்பாக யூடியூப்ல தேடும்போது, அவங்க சம்பந்தப்பட்ட பெஸ்ட் படங்கள், பாப்புலர் படங்கள் தொடர்பானதுதானே யூடியூப்ல வரும்… ஆனா, ராதா ரவின்னு யூடியூப்ல தேடினா அவரோட ஸ்பீச் தான் லட்சக்கணக்கான வியூஸோட வரிசை கட்டி நிக்குது. ராதா ரவின்னாலே சர்ச்சையா பேசுவாரு, இன்ட்ரஸ்டிங்கா பேசுவாரு, அது மக்களுக்கு ஒருவித க்யூரியாசிட்டிய கொடுக்கும்ன்றதை பேஸ் பண்ணி பல வீடியோக்கள் க்ளிக் பைட்ஸோட வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
சினிமா வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் பல நேரங்களில் தன்னோட பேச்சுகளால தனக்கு பெரும் பின்னடைவுகள் நேருதுன்றது தெரிஞ்சும், முடிஞ்ச வரைக்கும் தான் யோசிக்கிறதை எல்லாத்தையும் எந்த சென்சாரும் பண்ணாமே அப்படியே பேசுறது எல்லாம் ராதா ரவி மாதிரியான ரேர் பீஸ்களுக்குதான் சாத்தியம்ன்றதையும் சொல்லியே ஆகணும்.
அரசியிலும் எப்பவும் சூடான இடத்துலதான் ராதா ரவி இருந்துட்டு இருக்கார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அதிமுக – திமுகன்னு மாறி மாறி இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.
Also Read – ரோஜா அளவுக்கு குஷ்பு-வால் அரசியலில் சாதிக்க முடியாமல் போனது ஏன்?
ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டவர், பின்பு பல காரணங்களால் 2000-ம் ஆண்டு அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2002-ம் ஆண்டு, சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ராதாரவி வெற்றி பெற்றார். ஆனா, அடுத்ததாக 2006 தேர்தலில் ராதாரவி போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. அப்புறம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவிலேயே இணைந்தார்.
அதன்பின் 2019-ல் ‘கொலையுதிர் காலம்’ ஆடியோ லான்ச் ஃபங்ஷன்ல நயன்தாரா குறித்து ராதா ரவி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரையுலகம், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள்னு எல்லா தரப்பு கொந்தளிக்கிற அளவுக்கான சர்ச்சை பேச்சு அது. இதன் எதிரொலியாக திமுகவில் இருந்து நீக்கியதோடு, அவரை கண்டிக்கவும் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்புறம் கொஞ்ச காலம் அரசியலுக்கு ரெஸ்ட் கொடுத்த ராதாரவி பாஜகவில் இணைந்து இப்போ அங்கே பிஸியாக இருப்பது சமகால வரலாறு.
நயன்தாரா பத்தி சர்ச்சைகுரிய வகையில் பேசியது, மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வது போன்ற தொனியில் பேசி எதிர்ப்புக்குப் பிறகு மன்னிப்புக் கோரியது மாதிரியான சில சம்பவங்களுக்குப் பிறகு, கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சதையும் கவனிக்க முடிஞ்சுது.
இந்த மாதிரியான சர்ச்சைகளும், பேச்சுகளும் ராதா ரவியின் சினிமா கரியர் சாதனைகளை மட்டுமல்ல… அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு செய்த சர்வீஸ்களையும் மறைச்சிடுச்சின்னே சொல்லலாம். நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகியா இருந்து திரைத்துறையினருக்கு பல ஆண்டுகளாக பல நல்ல விஷயங்களை செய்திருக்கார்.
இதையெல்லாம் தாண்டி, திரைத்துறைக்கு வருகின்ற 2கே கிட்ஸ் ஜெனரேஷனுக்கு கூட ராதா ரவியை தங்கள் படத்துல பயன்படுத்திக்கணும்ன்ற விருப்பம் நீடிக்குதுன்னா, அதுக்கு அவரோட ஆக்டிங்ல அவர் காட்டுற அர்ப்பணிப்பும் திறமையும்தான் காரணம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி கெட்டப்களில் வித்தியாசம், மேனரிசம் – பாடி லேங்குவேஜில் நேர்த்தி, மாஸ் – க்ளாஸ் பின்னிப் பிணைஞ்ச பெர்ஃபார்மன்ஸ்னு எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதில் தன்னை நிலைநிறுத்துபவர் ராதா ரவி.
இதுக்கு கடைசியா ரெண்டு எக்ஸாம்பிள் மட்டும் சொல்லிடுறேன்… யூடியூப்ல போய் radha ravi advice-னு டைப் பண்ணுங்க. மாயக்கண்ணாடி படத்துல சேரனுக்கு ராதாரவி அட்வைஸ் பண்ற சீன் வரும். மூன்றரை நிமிஷ சிங்கிள் ஷாட்ல மூணு ஜெனரேஷன் நடுத்தர மக்களின் வாழ்க்கையையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் அவ்ளோ இயல்பா சொல்வாரு. அப்புறம், எத்தனையோ படங்களில் அரசியல்வாதியா நடிச்சிருக்கிற ராதா ரவி, ‘சூது கவ்வும்’ படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் சில சீன்கள்தான் வருவார். ஆனா, எக்ஸாக்டா ஒரு சிஎம்மை ஸ்க்ரீன்ல பார்க்குற ஃபீல் நமக்கு வரும். இந்த ரெண்டு படத்துலயுமே நான் குறிப்பிட்ட ராதா ரவியோட எல்லா அம்சங்களும் அடங்கியிருக்கும்!
வைதேகி காத்திருந்தாள்
குரு சிஷ்யன்
அமரன்
புலன் விசாரணை
வெற்றி விழா
ராஜாதி ராஜா
செம்பருத்தி
சோலைக்குயில்
சின்னத்தம்பி
சாது
சின்ன மாப்பிளே
அண்ணாமலை
உழைப்பாளி
பூவேலி
படையப்பா
முத்து
ஒரு முறை சொல்லிவிடு
ஃப்ரெண்ட்ஸ்
இறைவி
சர்கார்
இப்படி ராதா ரவி வெரைட்டில வியக்க வைச்ச லிஸ்ட் ரொம்ப பெருசு. உங்களோட லிஸ்ட கமெண்ட் பண்ணுங்க. அப்புறம், ராதா ரவி எந்த விதத்துல முக்கியமான ஒருத்தரா இருக்கார்னு கமெண்ட் பண்ணுங்க.