சிம்பு என்றவுடன் அவர் நடித்த படங்கள் நமக்கு நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, அவரைச் சுற்றி வலம் வரும் கான்ட்ரவர்சி செய்திகள்தான் முதலில் நம் நினைவுக்கு வரும். என்னதான் சிம்பு தற்போது உடல் இளைத்து சமர்த்துப்பிள்ளையாகி, ‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ படங்களை சொன்னபடி முடித்துக்கொடுத்தாலும் இடைபட்ட காலத்தில் அவர் செய்த அலும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல..
பொதுவாக சிம்பு வீட்டைப் பொறுத்தவரை அவரது அப்பா டி.ஆரைவிட அம்மா உஷாவுக்குத்தான் பவர் அதிகம். அவர்தான் அங்கு ஃபைனான்ஸ் மினிஸ்டரே. தன்னுடைய கணவனும் சரி, பிள்ளைகளும் சரி சம்பாதிக்கும் பணத்தை ரூபாய் குறையாமல் அப்படியே கொண்டுவந்து தன்னுடைய கையில் கொடுக்கவேண்டும் என்பது அவரது உத்தரவு. அதிலும் சிம்பு விஷயத்தில் நேரடியாகவே தயாரிப்பாளர்கள் உஷாவிடம்தான் சம்பள செக்கையே கொடுப்பார்கள். அதனைக் கொண்டு தன்னுடைய குடும்பத்தினருக்குத் தேவையானதை சிறப்பாக செய்துகொடுத்து மீதத்தை சேமித்துவைப்பது அவரது வழக்கம். இதை சிம்புவே பெருமையாக பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். தன்னுடைய அம்மாவிடமிருந்து ஒரு பைசா எக்ஸ்ட்ரா வாங்கமுடியாது என்றும் தன்னுடைய பாக்கெட் மணிக்காகத்தான் தான் மற்றவர்களின் படங்களில் அதிகம் பாடுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி எல்லாம் சரியாக நடந்தவரை வினை ஆரம்பிக்கவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது வில்லங்கம்.
ஆரம்பத்திலிருந்தே அம்மா பிள்ளையாக இருந்துவந்த சிம்பு, வாலிப முறுக்கில் சில கெட்ட நண்பர்களுடன் சகவாசம் மேற்கொள்ள ஆரம்பித்தார். இதையொட்டி ஏற்படும் ‘அதிகப்படியான’ செலவுகளுக்கு அம்மா உஷா தரும் பணமோ பாட்டு பாடுவதால் வரும் பணமோ அவருக்கு போதுமானதாக இல்லை. இன்னொரு பக்கம் அவரைச் சுற்றி எந்நேரமும் ஒரு கேங் சுற்றிவர ஆரம்பித்தது. இதனால் சிம்புவுக்கு பணத்தேவை அதிகரித்துக்கொண்டேபோனது. இதை சமாளிக்க சிம்பு கை வைத்தது தயாரிப்பாளர்கள் மடியில். திடீரென ஷூட்டிங்குக்கு மட்டம் போட ஆரம்பித்த சிம்பு, சம்பளம் இல்லாமல் மேற்கொண்டு சில லட்சங்களை எனக்குத் தனியாக தந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என வம்பு பண்ண ஆரம்பித்தார். ‘வேறு வழியில்ல! யானையை வாங்கியாச்சு அங்குசம் வாங்க யோசிக்கணுமா’ என நினைத்த தயாரிப்பாளர்கள் அவ்வபோது லட்சங்களில் அவரை தாஜா செய்து ஷூட்டிங்குக்கு வரவைத்தார்கள்.
இந்த விஷயம் ஒருமாதிரி அரசல் புரசலாக இண்டஸ்டிரிக்குள் கசிந்து சிம்புவின் இந்த ‘மேற்படி’ விஷயத்தைத் தெரிந்தும் சில தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படமெடுக்க முன்வந்தார்கள். ஏனெனில் அப்போது அவருக்கு இருந்த மார்க்கெட் அப்படி. இதில் நன்கு சுகம் காண ஆரம்பித்தார் சிம்பு. ஒரு ஸ்கெட்யூலில் ஏதோ ஓரிரு நாட்கள் இப்படி செய்ய ஆரம்பித்தவர், ஒருகட்டத்தில் திட்டமிட்ட ஸ்கெட்யூலையே கேன்சல் செய்யும் அளவுக்கு மாறிப்போனார். ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்களின் கதையெல்லாம் ஊரறறிந்தது. ‘AAA’ படத்தின் ஷூட்டிங்குக்காக ஒட்டுமொத்த யூனிட்டும் பாங்காக் போய் பத்து நாட்கள்வரை சிம்புவுக்காக காத்திருந்து அவர் வராததால் ஒரு காட்சியைக்கூட எடுக்காமல் வெறுங்கையுடன் திரும்பிவந்தனர். இதுபோல சிம்பு செய்த தரமான சம்பவங்கள் நூறு சொல்லலாம்.
எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா, அப்போதைய சிம்புவின் படங்கள் அதிரிபுதிரி ஹிட்டாகவில்லை என்றாலும் பிஸினஸில் ஏதோ தப்பித்துக்கொண்டுவந்த நிலையில், ‘இது நம்ம ஆளு’ படத்திலிருந்து பிஸினஸும் அடிவாங்க ஆரம்பித்தது. சிம்புவின் தோற்றமும் ஏடாகூடமாகிக்கொண்டே போனது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்கத் தயங்க ஆரம்பித்தார்கள். அந்நிலையில் வந்தது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’. அந்தப் படத்தின் வெற்றி மீண்டும் தயாரிப்பாளர்களை சிம்புவை நோக்கி ஈர்க்கச் செய்தது. ஆனாலும் சிம்புவோ பழையபடியே தன் இஷ்டத்துக்கு இருக்க ஆரம்பித்தார். அப்போது ஆரம்பித்த ‘மாநாடு’ படத்துக்கு ஷூட்டிங் வராமல் இழுத்தடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அந்தப் படத்தை டிராப் என்றே அறிவித்தார்கள்.
இந்நிலையில் எல்லோருடைய வாழ்க்கையின் போக்கை மாற்றிவைத்த கொரோனா சிம்புவின் போக்கையும் மாற்றியது. முதலாம் அலை ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருந்தபோது சிம்பு, இப்போதைய தன்னுடைய நிலை என்ன, தான் இருக்கவேண்டிய இடம் என்ன என்பதும் குறித்தும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். விளைவு கெட்ட பழக்கங்களிலிருந்து வெளியில் வந்தார். தன்னுடைய உடல் எடையைக் குறைத்து செம்ம ஸ்லிம் ஆனார். ‘ஈஸ்வரன்’ படத்தை சொன்ன தேதியில் முடித்துக்கொடுத்தார். அந்தப் படம் தியேட்டர் ஹிட் இல்லையென்றாலும் டிஜிட்டலில் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து தற்போது ‘மாநாடு’ படத்தை சொன்னவாறு முடித்துக்கொடுத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அந்தப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திலும் ‘பத்து தல’ படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இயக்குநர் ராம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் சிம்பு.
இப்படியாக தற்போது மீண்டும் ஒரு நல்ல டேக் ஆஃபை கொடுத்திருக்கும் சிம்பு, இனி, தான் இருக்கவேண்டிய இடத்தை நோக்கி வீறுகொண்டு பயணிப்பாரா அல்லது பழையபடி ஆவாரா என்பது நிச்சயம் அவரது கைகளில் மட்டுமேதான் இருக்கிறது.
Also Read : நடித்தது 98 வினாடிகள் தான்.. எம்மி விருதுக்கு பரிந்துரை.. யார் இந்த டான் சீடில்?