ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 110 இடங்களில் வெற்றிபெற்று தடம் பதித்திருக்கிறார்கள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. தி.மு.க பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க பெரும்பாலான இடங்களில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதேபோல், அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் வெற்றிபெற இயலவில்லை.
விஜய் மக்கள் இயக்கம்

இந்தத் தேர்தலில் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாத விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய்யின் ஒப்புதல் பெற்றே அவர்கள் போட்டியிட்டதாகக் கூறப்படுகிறது. மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் உள்பட 110 பேர் வெற்றிபெற்றிருப்பதாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் தொடர்வதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் – மக்கள் நீதிமய்யம்
சீமானின் நாம் தமிழர், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளைச் சார்ந்தோர் போட்டியிட்ட இடங்களில் வெற்றிபெற முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் அந்தக் கட்சிகளைச் சார்ந்தோர் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 இடங்களில் போட்டியிட்டு 110 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாமலேயே விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்தல் தொடர்பாக விஜய் வாய்ஸ் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read – விஜய் Vs எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதா… பின்னணி என்ன?