அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மூன்று வெளிநாட்டு நிறுவனங்களின் கணக்குகளை செபி முடக்கியதாக வெளியான செய்தி அந்த நிறுவனப் பங்குகளை அசைத்துப் பார்த்தது. வாரத்தின் முதல் பங்குவர்த்தக நாளான ஜூன் 14-ல் அதானி நிறுவனப் பங்குகள் ரூ.1,600-லிருந்து ரூ.1,200-க்கும் கீழாகக் குறைந்தது. அதானி குழுமங்களில் முதலீடு செய்திருந்த அல்புலா இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட், கிரெஸ்டா ஃபண்ட், ஏ.பி.எம்.எஸ் இன்வஸ்ட்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் அதானி குழுமத்தில் ரூ.43,500 கோடிக்கும் அதிகமான அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவற்றின் கணக்குகளை என்.எஸ்.டி.எல் முடக்கியதான வெளியான செய்தி பங்குச் சந்தையில் கடுமையாக எதிர்வினையாற்றியது. உண்மையில், இந்த மூன்று நிறுவனங்களின் கணக்குகளை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் அதானி குழுமத்துக்கும் தொடர்பில்லை என்று அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனால், அதானி குழும பங்குகள் ஓரளவு வீழ்ச்சியிலிருந்து மீண்டன. ஆனால், மொத்தமாக அதானியின் 6 நிறுவனங்களின் பங்குகள் 5 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வீழ்ச்சியைக் கண்டன. மொத்தமாக ரூ.55,692 கோடி அளவுக்கு அதானி நிறுவன உரிமையாளர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு குறைந்தது.
ஃபாரின் இன்ஸ்வெஸ்ட்மெண்ட் ஃபோர்ட்போலியோ
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். வெளிநாட்டைச் சேர்ந்த தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ செபி மூலம் பதிவு செய்து, முதலீடு செய்யும் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 10% மட்டுமே முதலீடு செய்ய முடியும். இது ஃபாரின் இன்வெஸ்ட்மெண்ட் ஃபோர்ட்போலியோ என்றழைக்கப்படுகிறது. இந்த வரம்பைத் தாண்டும் நேரத்தில் அது அன்னிய நேரடி முதலீட்டின் கீழ் வந்துவிடும்.
என்ன சிக்கல்?
கணக்குகள் முடக்கப்பட்டதாக வெளியான 3 நிறுவனங்களுமே மொரீஷியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டவை. செபி விதிமுறைகளின் படி எந்தவொரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போதும் அந்தப் பணம் எப்படி வந்தது என்ற மூலாதாரத்தைக் குறிப்பிட வேண்டும். அதேபோல், கிடைக்கும் லாபம் யாருடைய கணக்குக்குச் செல்கிறது என்ற விவரத்தையும் கொடுத்திருக்க வேண்டும். மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வருவதில் ஏற்பட்ட சிக்கல் அல்லது இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் என்.எஸ்.டி.எல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்கிறார்கள். அதேபோல், பயனாளிகள் யார் என்ற பெனிஃபிஷியல் ஓனர்ஷிப் பற்றி அந்த நிறுவனங்கள் சரியான தகவலை அளிக்காததால் இந்த நடவடிக்கை என்று தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. அதேபோல், குறிப்பிட்ட நிறுவனங்கள் மொத்த நிதி ஆதாரத்தில் 95% அளவு நிதியை எப்படி ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும் என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் மறுத்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அதானி குழுமத்தின் முதன்மை நிர்வாகத் தலைவர் ஜூகேஷிந்தர் சிங்,
அந்த நிறுவனங்கள் 2010ம் ஆண்டு முதல் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கின்றன. அவை மற்ற நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கின்றன’ என்று விளக்கமளித்திருக்கிறார்.
யாருக்கு இழப்பு?
அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் பங்குகள் 17.5%, அதானி க்ரீன் எனர்ஜி – 5%, அதானி டோட்டல் கியாஸ் – 5%, அதானி பவர் – 4.99%, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் – 5% என்ற அளவுக்கு சரிவைச் சந்தித்தன. ஆனால், இதனால், அதானிக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம். சந்தையில் முதலீடு செய்திருக்கும் குறுகியகால முதலீட்டாளர்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு என்கிறார்கள் பங்குசந்தை வல்லுநர்கள். அதானிக்கு அவரின் சொந்த பங்குகள் இருப்பதால், பெரிதாக அவர் இழப்பைச் சந்தித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நிறுவனங்களில் பெரிய அளவுக்கு முதலீடு செய்வதை நன்கு ஆய்வு செய்தே சிறு முதலீட்டாளர்கள் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்கள்.
Also Read : விஜய் முதல் ரொனால்டோ வரை… செலிபிரிட்டிகளின் செயல்களால் நஷ்டமடைந்த பிராண்ட்கள்!