வசூலில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது ‘டாக்டர்’. என்னதான் இதுவொரு சிவகார்த்திகேயன் படமாக இருந்தாலும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இயக்குநர் நெல்சன்தான். ஒரு சீரியஸான விஷயத்தை டார்க் காமெடி ஃபிளேவரில் நெல்சன் தந்த விதம் அனைவரையுமே கவர்ந்து விட்டது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ எனத் தொடர்ந்து டார்க் காமெடி ஃபிளேவரில் கலக்கிவரும் நெல்சன் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு வேறு எந்தெந்த ஹீரோக்களுடன் இணைந்தால் களை கட்டும் என ஒரு சின்ன பார்வை.
நெல்சன் – விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிக்கு இயல்பாகவே காமெடி நன்றாக வரும். அதிலும் சீரியஸான நேரங்களில் காமெடி செய்வதெல்லாம் அவருக்கு கைமேல் வரும் கலை. மாடர்ன் தமிழ் சினிமாவின் வழிகாட்டிகளில் ஒன்றாக இருக்கும் ‘சூது கவ்வும்’ படத்திலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் டார்க் காமெடியில் அசத்தியிருக்கும் விஜய் சேதுபதியின் தற்போதைய இமேஜூக்கு ஏற்றவாறு நெல்சன் ஒரு கதை செய்து இணைந்தால் பட்டாசுதான்.
நெல்சன் – தனுஷ்
தனுஷ் இயல்பிலேயே காமெடியில் பட்டையைக் கிளப்புவார். ‘திருவிளையாடல் ஆரம்பம்’ தொடங்கி ‘மாரி’ வரைக்கும் அவர் காமெடியில் பட்டையைக் கிளப்பிய படங்கள் ஏராளம். அப்படிப்பட்ட தனுஷ் இதுவரைக்கும் டார்க் ஹியூமரில் நடிக்கவில்லை. நெல்சனுடன் அவர் இணைந்து நடித்தால் அந்த குறை நிச்சயம் போய்விடும். தமிழ் சினிமாவுக்கும் ஒரு அட்டகாசமான காமெடி படமும் கிடைக்கும்.
நெல்சன் – அஜித்
அஜித், காமெடி படங்களில் நடித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக நடித்த காமெடி படம் என்றால் ‘ஏகன்’ படத்தைக் குறிப்பிடலாம். அஜித்தின் இறுக்கமான நடிப்பு டார்க் காமெடிக்கு ரொம்பவே கை கொடுக்கும். தற்போதுள்ள அவரது இமேஜூக்கு ஏற்ப ‘மங்காத்தா’ பாணியில் ஒரு ஹீஸ்ட் பேக்டிராப் கதையில் நெல்சனின் டார்க் ஹியூமரும் கலந்தால் அந்தத் தீபாவளி ‘தல’ தீபாவளிதான்.
நெல்சன் – கமல்
தமிழ் சினிமா டார்க் காமெடி ஜானரின் மன்னன் கமல். கமலின் எழுத்தில் உருவான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம்தான் ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட தற்போது வரும் ஏராளமான டார்க் காமெடி படங்களுக்கு தாய் பத்திரம். அப்படிப்பட்ட கமலுடன் நெல்சனும் இணைந்து ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ பாணியில் கமல் ஒரு டானாக யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி போன்ற இன்றைய தலைமுறை நடிகர்கள் அவரது சகாக்களாகவும் நடித்தால் ஹைய்ய்ய்யோ.
நெல்சன் – ரஜினி
இது கொஞ்சம் பேராசைதான். ஆனால் நடந்தால் என்ன என்றுதான் தோன்றுகிறது. ‘தில்லுமுல்லு’ மாதிரியான ஒரு முழுநீள காமெடி படமொன்றில் ரஜினி நடித்து சில தலைமுறைகளேக் கடந்துவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் இன்றைய வயதுக்கும் இமேஜுக்குமேற்ப ஒரு முழுநீள காமெடி படம் ஒன்றை அதிலும் டார்க் காமெடி ஜானர் கலந்து கொடுத்தால் நிச்சயம் அது ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்குமா இருக்காதா..?
இதில் எந்த காம்போ உங்கள் மனதைக் கவர்ந்திருக்கிறது. இன்னும் வேறு யாருடனெல்லாம் நெல்சன் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.
Also Read – `ராஜாவின் பார்வையிலே முதல் இங்கிலீஷ் விங்கிலீஷ் வரை’ – அஜித்தின் 5 கேமியோ ரோல்கள்!