ஆச்சு.. அஜித்துக்கும் 50 வயது. ஒரு மனிதனுக்கு அதிலும் ஒரு ஹீரோவுக்கு 50 வயது என்பது முக்கியமான ஒரு மைல்கல். அத்தகைய 50-வது வயதிலிருக்கும் இன்றைய ‘வலிமை’யான அஜித்துக்கும் அப்போதைய ‘அமராவதி’ அஜித்துக்கும் இடையேயான மிகப்பெரிய 6 வித்தியாசங்கள் பற்றி பார்க்கலமா?
1. தோற்றம்
நிச்சயம் ஒரு மனிதனுக்கு வயது ஆக ஆக, தோற்றம் மாறும்தான். ஆனால் நாம் அதைப் பற்றி பேசப்போவதில்லை. அந்த தோற்ற மாறுதலை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கும் அஜித்தின் அந்த கெத்தைப் பற்றிதான் குறிப்பிடுகிறோம். இந்த இடைபட்ட காலத்தில் அஜித் எத்தனைமுறை தன்னுடைய உடல் எடையை ஏற்றியும் இறக்கியும் மேஜிக் செய்திருப்பார். இப்போதும் அஜித், தனது அடுத்தப் படத்திலேயே ‘ஆசை’ காலத்து ஸ்லிம் தோற்றதுக்கு மாறினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அதேபோல, வயது ஆக ஆக தோற்றத்தில் முகத்தில் மாற்றம் ஏற்படுவது ஒருபுறம் என்றால், இப்போதைய அஜித்துக்கு சுத்தமாக தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள ஆர்வம் இல்லை என்பதுதான் நிஜம். இதுகுறித்து யாராவது அஜித்திடம் கேட்டால் ‘இன்னும் நான் என்ன ஆசை அஜித்தா…? இருக்குறது போதும்’ என கேஷூவலாக சொல்லிவிடுகிறாராம்.
2. ரொமான்ஸ்
அஜித் தேர்ந்தெடுக்கும் படங்களைப் பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். அப்போதைய் அஜித், நிறைய காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துவந்தார். அவரைவிட வயதில் மூத்த ரஜினியே இன்னும் காதல் காட்சிகளில் சகஜமாக நடித்துவரும் நிலையில் அஜித் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது அவர் நடித்திருக்கும் ‘வலிமை’ படத்தில்கூட மருந்துக்குக்கூட காதல் காட்சிகள் இல்லை எனக் கிசுகிசுக்கப்படுகிறது.
3. பிஸினெஸ்
`ஆசை’ படத்துக்கு அஜித்துக்கு சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அதை மாதா மாதம் 2 ஆயிரம் ரூபாயாக தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுவந்த அஜித்தின் இன்றைய பிஸினெஸ் 100 கோடிகளுக்கும் மேல். அவர் கால்ஷூட்டுக்காக ஏங்காத தயாரிப்பாளர்களே தமிழ்நாட்டில் இல்லை. அவர் கண்ணசைத்தால் பல பத்து கோடிகளை சம்பளமாக கொட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
4. மீடியா தொடர்பு
அப்போதைய அஜித்தின் பிரஸ் மீட் என்றால் நிருபர்கள் செம குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருமுறையும் நிச்சயம் ஒரு கான்டரவர்ஸியைக் கிளப்பிவிடுவார் அஜித். தன் மனதில் தோன்றுவதை வார்த்தைகளைக்கூட எடிட் செய்யாமல் அப்படியே பேசி பல சர்ச்சைகளை சந்தித்த வரலாறு அஜித்துக்கு உண்டு. தன்னுடைய இந்த பலவீனத்தை நன்கு புரிந்துகொண்ட அஜித், அதனாலேயே தற்போதெல்லாம் மீடியா நிழல் படமாலேயே இருந்துவருகிறார்.
5. சென்டிமென்ட்கள்
அப்போதைய ஆரம்பகால அஜித்துக்கு பெரிதாக சென்டிமென்ட்கள் எதுவும் கிடையாது. மெல்ல ஜோதிடத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியவர் நாளடைவில் நிறைய சென்டிமென்ட் விஷயங்களுக்கு அடிமையாகத் தொடங்கினார். அதன்விளைவாக, ‘வி’ எழுத்தில் தொடங்கும்படி படத்தின் டைட்டில் வைப்பது, வியாழக்கிழமைகளில் மட்டுமே படம் சம்பந்தமான அறிவிப்புகளை வெளியிடுவது போன்ற சென்டிமென்ட்களைத் தீவிரமாக கடைபிடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான ‘வலிமை’ கிளிம்ப்ஸஸ்கூட ஒரு வியாழக்கிழமையில்தான் வெளியாகியிருக்கிறது.
6. விஜய்யுடன் ஒப்பீடு
‘ராஜாவின் பார்வையிலே’ எனும் படத்தில் அஜித் கேமியோ ரோலில் நடிக்க, விஜய் ஹீரோவாக நடிக்கும் நிலையிலா இப்போது இருவரும் இருக்கிறார்கள். அஜித், விஜய் இருவரது கரியர் வளர்ச்சி எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறதோ அதே அளவுக்கு அவர்களது ரசிகர்களிடையே நிகழும் மோதல் போக்குகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் ‘வலிமை’ கிளிம்ப்ஸஸில்கூட பைக் சாகசம் செய்யும் அஜித்தை விஜய் ரசிகர்கள் கிண்டலடிக்க, பதிலுக்கு அஜித் ரசிகர்கள் ‘குருவி’,’அழகிய தமிழ்மகன்’ காட்சிகளை வைத்து விஜய்யை கிண்டலடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அஜித் செய்யும் எந்த ஒரு அசைவும் அது விஜய்யுடன் ஒப்பிடப்படுகிறது. இது விஜய்க்க்கும் நிச்சயம் பொருந்தும்.