ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் 2008-09 வாக்கில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பான வழக்கில் பிரபல ரவுடி முன்னா உள்ளிட்ட 12 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து பிரகாசம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
என்ன நடந்தது?
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை 16-ல் விஜயவாடா அருகில் தொடர்ச்சியாக லாரிகள் மாயமாவதும், டிரைவர்கள் – கிளீனர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்படுவதும் கடந்த 2008-09 ஆண்டு வாக்கில் வழக்கமான நிகழ்வாக மாறியது. 2009-ல் தமிழகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமசேகர் மற்றும் கிளீனர் பெருமாள் சுப்ரமணி ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்கள் லாரியில் ஏற்றி வந்த 21.7 டன் இரும்புத் தாது கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரி ஓனர் வீரப்பன் குப்புசாமி ஓங்கோல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் குக்கி மட்டிபாடு ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கில் டிரெய்னி டி.எஸ்.பி தாமோதர் கண்டுபிடித்த ஒரு சின்ன தடயம் மூலம் ஆந்திர போலீஸுக்குத் தலைவலியாக மாறியிருந்த கேஸின் முடிச்சு அப்போது அவிழ்ந்தது. இந்த வழக்கில் அப்துல் சமத் (எ) முன்னா முக்கிய குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தனர்.
முன்னா
பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமத், தனது கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு ஒரு கேங்கை ஃபார்ம் செய்திருக்கிறார். அவர் ஓங்கோல் பேருந்துநிலையம் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் கேங் மெம்பர்களைச் சந்தித்து விரைவில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகளைக் கொள்ளையடிக்க அந்த கும்பல் திட்டமிட்டது. அதன்படி, போலீஸ் யூனிஃபார்மில் லாரிகளை நிறுத்தும் கும்பல், டிரைவர், கிளீனர்களைக் கொலை செய்துவிட்டு லாரியை அதிலிருக்கும் சரக்குகளோடு கடத்தும். அந்த லாரியை அருகில் இருந்த தங்களது குடோனுக்கு எடுத்துச் சென்று சரக்குகள், லாரியை உடைத்து விற்று பெரும் தொகையை அந்தக் கும்பல் சம்பாதித்து வந்திருக்கிறது. 2008-09 ஆண்டுகளில் மட்டும் 13 லாரிகள் மாயமாகியிருக்கின்றன.
போலீஸ் நடவடிக்கை
டி.எஸ்.பி தாமோதர் விசாரணையில் இரண்டு வழக்குகள் துப்புத் துலங்கின. மாயமான லாரிகள் அனைத்தும் போடவாடா – தங்குதூர் இடைப்பட்ட பகுதியில் காணாமல் போனதை அவர் விசாரணையில் உறுதி செய்தார். அந்த இடைப்பட்ட பகுதிகளைக் குறிவைத்து அவர் விசாரணையை நகர்த்தினார். அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பின்னர் வழக்கு விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சங்கர் ரெட்டி விசாரணையில் மேலும் இரண்டு வழக்குகளில் முடிச்சு அவிழ்ந்தது. முன்னாதான் முக்கியமான குற்றவாளி என்பதை உறுதி செய்த போலீஸார், அவரைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர். கர்நாடகாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவருக்குச் சொந்தமான ஃபார்ம் ஹவுஸில் தலைமறைவாக இருந்த முன்னாவைக் கைது செய்த ஆந்திர போலீஸார், அவரை ஓங்கோல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
12 பேருக்குத் தூக்கு
வழக்கு விசாரணை 8 ஆண்டுகளாக நீடித்த நிலையில், முன்னா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர், அவரை மீண்டும் போலீஸார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 18-ம் தேதி பிரகாசம் மாவட்ட 8வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அரசு வழக்கறிஞர் சிவராமகிருஷ்ண பிரசாத், `வழக்கில் குற்றவாளிகள் 12 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமிருக்கும் 7 பேருக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் விதித்து நீதிபதி மனோகர் ரெட்டி உத்தரவிட்டார்’ என்று தெரிவித்தார். பிரகாசம் நீதிமன்ற உத்தரவை ஆந்திர உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். வழக்கொன்றில் 12 பேருக்குத் தூக்கு தண்டை விதிக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல்முறையாகும்.
Also Read – ராஜீவ் காந்தி கொலை வழக்கும் 10 தடயங்களும் #RememberingRajivGandhi