தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் பின்பு நடிகராகவும் ரசிகர்கள் மனங்களில் தடம் பதித்தவர், சிங்கம்புலி. டைரக்டர் டு நடிகர், காமெடியனாக முத்திரை பதித்த மூத்தவர்களான மணிவண்ணன், சுந்தர்ராஜன், மனோபாலா லிஸ்ட்ல நம்ம தலைவர் சிங்கம்புலிக்கு சிறப்பான இடம் நிச்சயம் இருக்கு. அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து காமெடியனாக மாறியிருக்கும் சிங்கம் புலி கடந்துவந்த பாதை கொஞ்சம் கரடு முரடானது. `டேய் பாயாசம் எங்கடா’ங்குற மீம் டெம்ப்ளேட்டை தினமும் ஒரு தடவையாவது நாம கடந்து போயிருக்க அதிக வாய்ப்பு இருக்கு. அந்தப் பால்பாயாச பிரியரைப் பத்திதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போறோம்.
சூப்பர் ஸ்டாரின் சிபாரிசு!
பெங்களூர்ல இஞ்ஜினீயரிங் முடிச்சு, சினிமா கனவுகளோட சென்னை வந்து இறங்கினார் சிங்கம்புலி. அருணாச்சலம் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த நேரம் அது. சொந்தக்காரர் ஒருவர் மூலமா ரஜினியின் சிபாரிசைப் பெற்றிருக்கிறார். இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்ய நாராயணன் ரெண்டுபேரும் சேர்ந்து சுந்தர்.சி-கிட்ட, இந்த பையன உங்ககூட வச்சுக்கங்க’ என சிங்கம்புலியை சிபாரிசு செய்திருக்கிறார்கள். அன்னைக்கு சுந்தர்.சி-கிட் இருந்த உதவி இயக்குநராக 19 பேர் இருந்திருக்கிறார்கள். இவர் 20-வது ஆளாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதுக்குப் பின்னால சுந்தர்.சி – கார்த்திக் – ரம்பா – கவுண்டமணி கூட்டணியில் உருவானஉனக்காக எல்லாம் உனக்காக’ திரைப்படத்துக்கு வசனம், சுந்தர்.சி இயக்க அஜித் நடித்த உன்னைத்தேடி படத்துக்கு கதை எழுதும் அளவுக்கு சுந்தர்.சி-யின் செல்லப் பிள்ளையாகவே மாறிப்போனார், சிங்கம்புலி.
இயக்குநர் அவதாரம்!
சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத்தேடி படத்துக்கு முழு ஸ்கிரிப்டையும் எழுதிமுடித்தார், சிங்கம்புலி. அந்த முழு கதையும் கேட்ட அஜித், “இந்த படம் ஓடுமா”னு கேட்டாராம். அதற்கு சிங்கம்புலி “சார், படம் ஓடுனா நான் உங்களை திரும்பவும் பார்ப்பேன். இல்லைனா திரும்ப உங்களைப் பார்க்க மாட்டேன்”னு சொல்லிட்டாராம். சிங்கம்புலி சொன்னது மாதிரியே அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 100 வது நாள் வெற்றிவிழாவுல அஜித், சிங்கம்புலிகிட்ட “நிக் ஆர்ட்ஸ் போங்க. ஒரு படம் பண்ணலாம்”னு சொல்லியிருக்கார். அப்படி ஆரம்பமான படம்தான் ‘ரெட்’. அஜித் ஆக்ஷனுக்கு மாறின காலகட்டமும் அதுதான்… ரெட்ல ஆக்ஷன்-சென்டிமெண்ட்னு என கலந்துகட்டி இயக்கியிருப்பார், சிங்கம்புலி. இந்த படத்துல சிங்கம்புலிங்குற தன்னோட பெயரை இயக்குநர் ராம்சத்யானு மாத்திக்கிட்டார். அந்த படத்தில் நகைச்சுவை கொஞ்சம் குறைவாகவே இருந்தது என பின்னாளில் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த சமயத்தில்தான் இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் ஒருபடம் டைரக்ட் பன்ற வாய்ப்பு சிங்கம்புலியை தேடி வந்தது. இந்தமுறை விடக் கூடாதுனு தன்னோட குருநாதரான சுந்தர்.சியின் நகைச்சுவை பாணியைக் கையிலெடுத்தார். துண்டு ஒருமுறைதான் தவறும்னு நிரூபிச்சார்… அடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மாயாவி சூப்பர்ஹிட் படம் முழுவதும் கலகலப்பாக நகைச்சுவை நிரம்பியிருந்தது. தன்னை ஒரு டைரக்டராக நிலைநிறுத்திக் கொண்டார் சிங்கம்புலி. அதற்கு சீரியஸ் கேரக்டர்களை அதிகம் பண்ணி வந்த சூர்யாவுக்குள் இயல்பாகவே இருக்கும் ஹ்யூமரை வெளிக்கொண்டு வந்த படமாக மாயாவி இருந்தது.
கலகலப்பான வசனகர்த்தா!
சூர்யா-ஜோதிகா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்த ‘பேரழகன்’ படத்துக்கு வசனம் எழுதினார், சிங்கம்புலி. பேரழகனுக்கு நீங்க எழுதுங்க’ என சிங்கம்புலிடம் சூர்யாவே கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றரேனிகுண்டா’ திரைப்படத்துக்கும் சிங்கம்புலி வசனம் எழுதினார். “எப்பா நீ செத்தா செருப்பு எனக்குத்தான”, “ஏன்டா ஐஸ்க்காடா இவ்ளோ சண்டை போடுறீங்க”னு தான் கமிட்டாகும் படங்களின் வசனத்தில் எப்போதுமே காமெடி தூக்கலாகவே சேர்த்தார். இதுக்கு காரணம், சுந்தர்.சிதான் என பல மேடைகளில் குருநாதரை நினைவுகூர்ந்திருக்கிறார். எந்த சீரியஸ் கதையையும் காமெடி கலந்து ட்ரீட் கொடுக்கும் சுந்தர்.சி-யின் 8 படங்களுக்கு வசனகர்த்தா நம்ம சிங்கம்புலி அண்ணன்தான்.
Innocense comedian!
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘நான் கடவுள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார் சிங்கம்புலி. அதன் பிறகு அதே ஆண்டில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான `மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் வயதுக்கேற்ற மனவளர்ச்சி இல்லாத அப்பாவி மனிதராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் சிங்கம்புலி. இந்த படத்துக்காக சிங்கம்புலி 2 நாட்கள்தான் ஷூட்டிங்குக்கு நேரம் ஒதுங்கியிருந்தார். ஆனால், அவரது கேரக்டர் படம் நெடுக வரும்படி மாற்றியமைக்கப்பட்டு, மொத்தமாக 56 நாட்கள் நடித்துக் கொடுத்தாராம். இரண்டு சீன்களில் முடியும் கேரக்டராக இருந்த மாயாண்டி கதாபாத்திரத்தை தனது நடிப்பால், கிளைமேக்ஸ் வரை கொண்டு வந்தார், சிங்கம்புலி. ஒருதடவை மாயாண்டி குடும்பத்தார் இயக்குநர் ராசுமதுரவனும், சிங்கம்புலியும் ஒண்ணா கார்ல போய்டிருக்கும்போது, ராசுமதுரவனோட பையன், “எப்பா நீ செத்துப்போயிட்டா கார் எனக்குத்தான”னு அப்பாவியாய் கேட்கவே, சிங்கம்புலி அதை சினிமாவுல வச்சுட்டார். ரியலா நடக்குறதை காமெடி ட்ராக்குக்கு ஏற்றபடி மாத்துறதுல உண்மையிலயே நம்ம ஆளு புலிதான்..
மீம் மெட்டீரியல்!
‘தேசிங்கு ராஜா’ படத்தில் தனக்கு ஏற்படப்போகும் ஆபத்தை சற்றும் உணராமல் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு ‘பாயாசம் எங்கடா’ என்று அப்பாவித்தனமாகக் கேட்கும் காட்சி சிங்கம்புலியின் ‘டிரேட் மார்க்காகிப் போனது. அந்த சீனைத் தனது வெகுளித்தனமான தனித்துவ நடிப்பால் வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போயிருந்தார். சிங்கம்புலியின் பாயாசம் எங்கடா டெம்ப்ளேட் மிகப் பிரபலமான மீம் மெட்டீரியலா மாறுனதுலாம் ஹிஸ்டரி. எந்தவொரு கேரெக்டருக்கும் பொருத்தமான உடல்மொழி, முகபாவங்கள், வசன உச்சரிப்பு, டைமிங்கில் ரைமிங்கா பேசுறதை எல்லாம் சிங்கம்புலி `ஜஸ்ட் லைக் தட்’னு லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றவர்.
குரல்தான் கெத்தே..!
சிங்கம்புலியின் காமெடி சீன்கள் தனித்துவமாகத் தெரிய அவரின் குரலும் ஒரு முக்கியமான காரணம். சந்திரபாபுவின் தனித்துவக் குரலைப் போலவே, இவரின் குரலுக்கும் தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. மதுரை வட்டார மொழி வழக்கைத் தனது தனித்துவமான டயலாக் டெலிவரி ஸ்டைலோடு இவர் பேசும் வசனங்களுக்குத் தியேட்டர்களே குலுங்கும். சாப்பாடு பந்திக்கும் இவருக்கும் அப்படியொரு பாந்தம். கிராமத்துப் பந்திகளில் இன்றும் சோறு சோறு குழம்பு குழம்பு என சிங்கம்புலி ரெஃபரென்ஸை அதிகம் பயன்படுத்துவதுண்டு.
கேரக்டரின் பெயர்கள்
ஒவ்வொரு படத்திலும் சிங்கம்புலி கேரக்டருக்கு வைக்கப்படும் பெயர்களே தனிக்கதைகள் சொல்லும். உதாரணத்துக்குச் சொல்லணும்னா, மனம் கொத்திப் பறவை மோடுமுட்டி’, தேசிங்கு ராஜா
கௌசிக்’, ஜன்னலோரம் `தியாகி தில்லை’, மிளகா ‘பருத்தி’ போன்றவற்றைச் சொல்லலாம். குறிப்பாக, கோரிப்பாளையம் படத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக சின்னச்சாமி கேரக்டரில் இவர் அடிக்கும் லூட்டிகள் எல்லாம் வேற ரகம். தன்னை கோரிப்பாளையம் எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டு வாழ்பவர் என்ற வாய்ஸ் ஓவருடன் அந்தப் படத்தில் இவரது அறிமுகக் காட்சி இடம்பெற்றிருக்கும். மனுஷன் தன்னோட முகபாவனைகளால தெறிக்கவிட்டிருப்பார்.
சீரியஸ் கேரெக்டர்!
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் வேறொரு சிங்கம்புலியை தமிழ் சினிமா ரசிகனுக்கு அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஹீரோவின் உதவியாளராக மட்டுமல்லாமல் உடன்பிறவா சகோதரனைப்போல் இருந்து கடைசியில் பரிதாபமாக உயிரை விடுபவராக நடித்திருப்பார். இதன்மூலம், எனக்கு காமெடி மட்டுமல்ல, சீரியஸாவும் நடிக்கத் தெரியும்னு புது அவதாரத்தைக் காட்டியிருப்பார்.
Also Read: Comedy Villains: `இப்படியும் வில்லத்தனம் பண்ணலாம்’ – தமிழ் சினிமாவைக் கலக்கிய காமெடி வில்லன்கள்!