பத்து வயதில் கோர விபத்தில் சிக்கி முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அவனி லெகாரா, 19 வயதில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார். இந்த ஒன்பதாண்டு காலத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எதிர்க்கொண்ட சவால்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார் இந்த தங்க மகள். யார் இந்த அவனி லெகாரா?
அவனி லெகாரா
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லெகாரா, 10 வயது வரை எல்லாக் குழந்தைகளையும் போல துள்ளித்திரிந்து கொண்டிருந்தவர். ஆனால், 2012-ல் அவனி 10 வயதாக இருக்கும்போது எதிர்கொண்ட கார் விபத்து அவரது வாழ்வையே புரட்டிப் போட்டது. அந்த விபத்தில் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படவே, நடக்க முடியாமல் சக்கர நாற்காலியே முடங்க வேண்டிய சூழல். அதன்பிறகு சில பள்ளிகள் அவரைச் சேர்த்துக்கொள்ள மறுக்கவே, உடைந்து போயிருக்கிறார்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் அவர், `என்னுடைய நிலையை எண்ணி கடுமையான மன உளைச்சலும், கோபமும் எனக்கு ஏற்பட்டது. அப்பாவின் துணையால் அதிலிருந்து மீண்டு வந்தேன்’ என்று நினைவுகூர்ந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே படித்த அவருக்கு, ஜெய்ப்பூரில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அட்மிஷன் கிடைத்திருக்கிறது. பள்ளிப் படிப்பை நிறைவு செய்து தற்போது ஜெய்ப்பூரில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டம் பயின்று வருகிறார்.
என்றாவது ஒருநாள் காலையில் எழும்போது, எல்லாம் பழையபடி இயல்பானதாக மாறிவிடாதா என்ற ஏக்கத்துடன் நாட்களைக் கழித்திருக்கிறார். ஆனால், உண்மையை ஏற்றுக்கொள்வதுதான் இதிலிருந்து மீள்வதற்கான வழி என்பதைப் புரிந்துகொண்டு தனது நிலையை ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்கியது நம்பிக்கை அளித்ததாகச் சொல்கிறார் அவனி. கடினமான காலங்களில் தந்தையுடன் ஒருநாள் ஷூட்டிங் ரேஞ்ச் எனப்படும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்துக்கு சென்ற நாள், அவனியின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அம்பு எய்தல் பயிற்சி கொஞ்சம் இருந்ததால், இலக்கைக் குறிபார்த்து சுடும் துப்பாக்கி சுடுதல் விளையாட்டும் அவரின் மனதுக்கு நெருக்கமானதாக மாறியிருக்கிறது.
அபினவ் பிந்த்ரா
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கை வரலாற்று நூலான `A Shot at History’ புத்தகம் அவனியின் வாழ்வில் முக்கியமான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த அவனி, அவரைத் தனது ரோல் மாடலாக உருவகித்து தீவிரமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மேற்கொண்டார். அவனியின் ஒவ்வொரு முயற்சிக்கும் நம்பிக்கையோடு தூணாக நின்று அவரது தந்தை உதவி செய்திருக்கிறார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்சி மேற்கொண்டு அதில், மிகச்சிறந்த வீராங்கனையாக முன்னேறினார். 2016ம் ஆண்டு நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் தங்கம், அதன்பின்னர் தேசிய சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் என வெற்றியைத் தொடங்கியிருக்கிறார். 2017-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவுக்காக அல் அனீலில் நடந்த பாரா ஷூட்டிங் வேர்ல்டு கப் போட்டிகளில் பங்கேற்ற அவர், வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவரது கரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவிலான போட்டியில் பல்வேறு தடைகளைக் கடந்து முதல் பதக்கத்தை உறுதி செய்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற அவர், பாராலிம்பிக்கில் ஐந்தாம் நிலை வீராங்கனையாகக் கலந்துகொண்டு தங்கம் வென்றிருக்கிறார்.
பாராலிம்பிக் சாதனை
பாராலிம்பிக்கின் R-2 பெண்கள் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் 249.6 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றிருக்கிறார். பாராலிம்பிக்கில் உலகச் சாதனையை இதன் மூலம் அவர் சமன் செய்திருக்கிறார். அதேபோல், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாறு படைத்திருக்கிறார். மேலும், நீச்சல் வீரர் முரளிகந்த் பேட்கர் (1972), ஈட்டி எறிதல் வீரர் (2004, 2016), மாரியப்பன் தங்கவேலு (2016) ஆகியோருக்குப் பிறகு பாராலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்கிறார் பவனி. இதன்பிறகு, R8 – 50மீ ரைபிள் SH1, மிக்ஸ்டு R3 – 10மீ ஏர் ரைபிள் SH1 மற்றும் மிக்ஸ்டு R6 – 50மீ ரைபிள் SH1 ஆகிய 3 பிரிவின் கீழ் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார் அவர்.