அவதார்-1 ஏன் பெஸ்ட்.. 3 நச் காரணங்கள்!

இயற்கையை அழிக்காதீங்கடா, பூமா தேவி பொளந்துருவா, எல்லாரும் போய் சேர்ந்துருவீங்க” என அவதார் படத்தின் ஒன்லைன் ரொம்பவே அரதப் பழசானது. ஆனால், அதைச் சொல்லிய விதத்திலும் காட்சிபடுத்திய விதத்திலும் ஜேம்ஸ் கேமரூன் செய்தது ஒரு மேஜிக். அவதார் – 1 படத்தை ஸ்பெஷலாக்கிய சில காரணங்களைப் பார்ப்போம்.

பெரும்பாலான 90ஸ் கிட்ஸ் முதல் முதலில் பார்த்த ஹாலிவுட் படமான “ஜுராஸிக் பார்க்” படத்துக்கும் அவதார் I படத்துக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு தெரியுமா? அவதார் படத்தின் இயக்குநர் “ஜேம்ஸ் கேமரூன்” புரடியூசர்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்த பிறகு தான் படம் தயாரிக்கவே சம்மதித்திருக்கிறார்கள். அது என்ன வாக்குறுதி தெரியுமா? அவதார் முதல் பாகத்தை பெஸ்ட்டாக்கிய மூன்று காரணங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ஜேம்ஸ் கேமரூன் பொதுவாவே ஒரு கோவக்கார ஸ்ட்ரிக்ட் இயக்குநர். அவதார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கைக்கும் எட்டும் தூரத்திலேயே ஒரு கருவியை வைத்திருப்பாராம். ஸ்பாட்டில் யாருடைய செல்போனாவது ஒலித்தாலே அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துவிடுவாராம் கேமரூன். அது என்ன கருவி, என்ன செய்வார்? கடைசியா பாப்போம்.

Avatar
Avatar

ஜேம்ஸ் கேமரூன்

ஒரு பேட்டியில் ஜேம்ஸ் கேமரூன், “அவதார் படத்தின் கதையை 1995-லேயே எழுதி இருக்கிறார். ஆனால், அந்தக் கதையைப் படமாக்குவதற்கான தொழில்நுட்பம் ஹாலிவுட்டிலேயே இல்லை. ஆனால், மனம் தளராமல் கதையை செம்மைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். 2002-ம் ஆண்டு Lord Of the Rings படத்தைப் பார்த்த போது அப்படத்தின் ‘கோல்லும்’ கதாபாத்திரம் My Precious என்று கத்தியபோது திரைக்கு வெளியே கேமரூனும் மை பிரசியஸ் என கத்தியிருக்கிறார். அவதார் கதையைப் படமாக்குவதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட ஜேம்ஸ் கேமரூன், LOTR விஸ்வல் எஃபெக்ட்ஸை உருவாக்கிய Weta நிறுவனத்தை அனுகி, அந்தத் தொழில்நுட்பங்களை தன் கதைக்குத் தேவையான விதத்தில் மாற்றியமைத்தும் உருவாக்கியும் படமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். அந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக பின்னால் பார்ப்போம். கடந்த பத்து ஆண்டுகால ஹாலிவுட்டின் பிரம்மாண்ட அசுர பாய்ச்சலுக்குக் காரணமான விஸ்வல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்களுக்கான அடித்தளத்தை வலுவாக்கியவர் ஜேம்ஸ் கேமரூன் தான்.

20th Century Fox நிறுவனத்திடம் கதையையும் தயாரிப்புத் திட்டமிடலையும் கேமரூன் விவரித்தபோது, “ஏற்கனவே டைட்டானிக் படத்தை எடுக்கும் போதே நீ சொன்ன பட்ஜெட்டை விட எக்கச்சக்கமா ஏத்தி விட்டுட்ட, படத்தை முடிக்கவே ரொம்ப லேட் ஆக்கிட்ட… இந்தக் கதைக்கு வேற இவ்வளவு Visual Effects, Technology எல்லாம் தேவைப்படுது. இந்தக் கதையை மக்கள் புரிஞ்சுக்குவாங்களா? செய்யுற செலவுக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா..? ஹிட்டாகுமா..?” என முதலில் தயங்கி இருக்கிறார்கள். ஒரு வேளை இந்தப் படம் தோல்வியடைந்தாலோ, சரியான லாபம் கிடைக்காமல் போனாலோ, என்னுடைய இயக்குநருக்கான சம்பளமே எனக்கு வேண்டாம் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவதார் வெற்றியடைந்த உடன், ஸ்டுடியோ அடுத்தடுத்த பாகங்களாக கேமரூனுடன் மொத்தம் 4 படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டன.

ஜுராஸிக் பார்க் கதையை படமாக எடுக்க ஜேம்ஸ் கேமரூன் விரும்பி இருக்கிறார், அந்த வாய்ப்பு கைகூடவில்லை. ஆனால், அவதார் படத்தின் பண்டோராவில் சில உயிரிணங்கள் எழுப்பும் சப்தத்திற்கு ஜூராஸிக் பார்க் படத்தில் TRex டைனாசர்கள் எழுப்பும் சப்தங்களை மாற்றியமைத்துப் பயன்படுத்தி இருக்கிறார். அப்படி தன் கதைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் தொடர்ந்து கவணித்து வந்திருக்கிறார். இது நம் கதைக்குத் தேவைப்படும், இந்த விஷயத்தை நாம் இப்படி மாற்றிப் பயன்படுத்தலாம் என தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார் கேமரூன்.

ஒரு கதையை எழுதி, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கியும் மாற்றியமைத்தும் சளைக்காமல் போராடிய ஜேம்ஸ் கேமரூன் தான் படத்தை ஸ்பெஷலாக்கியதற்கான முதல் காரணம்.

தொழில்நுட்பம்

படத்தை ஷூட் செய்வதற்காக 3D Fusion Camera System ஒன்றை கேமரூன், Vince Pace என்பவருடன் இணைந்து பிரத்தியேகமாக உருவாக்கினார். இதற்கு முன்பு இருந்த கேமாரா சிஸ்டம்களை விட தனித்துவமாகவும் ஸ்பெஷலாகவும் இதை உருவாக்கினார்கள். இதன் மூலமாக படத்தின் 60% காட்சிகளை CGI-களாகவும், 40% காட்சிகளை லைவ் அனிமேஷனாகவும் பதிவு செய்வதுடன் ரியல்டைமிலேயே காட்சிகளை அனிமேஷனாகவும் பார்க்க முடிந்ததுடன், அதற்கேற்ற வகையில் காட்சிகளை மாற்றியும் அமைக்க முடிந்தது. அடுத்ததாக இந்தக் கேமரா சிஸ்டத்தில் அமைக்கப்பட்ட Head rig மூலமாக நடிகர்களின் Facial Reaction-களை மிகத் துல்லியமாக கேப்சர் செய்வதும், அதை CGI பாத்திரங்களுக்கு அப்ளை செய்யவும் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. பீட்டர் ஜாக்ஸன், ராபர்ட் ஸெமிக்ஸ் போன்றவர்களால் சிறப்பாக பயனப்டுத்தப்பட்டு வந்த மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தை இன்னும் பல விதங்களில் மேம்படுத்தி ஒரு தொழில்நுட்ப புரட்சியையே கேமரூன் உருவாக்கி இருந்தார். சில சமயங்களில் பதிவு செய்த காட்சிகளில் வேறு ஒரு வசனத்தை உச்சரிக்க வைக்க வேண்டுமானால், லிப் சிங் ஆகாது, அப்பட்டமாகத் தெரிந்துவிடும், வேறு ஒரு கேமரா கோணத்தைக் காட்டி சமாளிக்க வேண்டும். ஆனால், கேமரூன் உருவாக்கிப் பயன்படுத்திய இந்தத் தொழில்நுட்பம் மூலமாக ரியாக்‌ஷன்களைப் பதிவு செய்து வைத்துவிடுவதால் லிப் சிங்கை அருமையாகப் பொருந்தும்படி கொண்டு வந்துவிடமுடியும்.

படத்தில், நவிக்கள், மரங்கள், பண்டோராவின் மற்ற உயிரிணங்கள் என மொத்தமாக 800 கதாபாத்திரங்களை CGI (Computer Generated Imagery) ஆக உருவாக்கப்பட்டன. Weta Digital நிறுவனத்தில் 900க்கும் மேற்பட்ட நபர்கள் படத்தின் விஸ்வல் எஃபெக்ட்ஸுக்காக வேலை பார்த்தார்கள். 4000 சர்வர்கள் இவற்றை பிராசஸ் செய்யவும், அப்போதுதான் வளர்ந்து வந்த கிளவுட் கம்ப்யூட்டிங், Digital Asset Management போன்றவற்றைப் பயன்படுத்தியும் விஸ்வல் எஃபெக்ட்ஸ் வேலைகள் ஒரு பக்கம் நடந்தன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பீட்டர் ஜாக்ஸன் போன்ற விஸ்வல் எஃபெக்ட்ஸில் புகுந்து விளையாடிய இயக்குநர்களே அவதார் படப்பிடிப்பின் போதே படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று குழந்தைகளைப் போல கேமரூனின் இந்த டெக்னாலஜிகளைப் பார்த்து பிரம்மித்திருக்கிறார்கள்.

Avatar
Avatar

தொழில்நுட்பத்தை மட்டுமல்ல மொழியையும் உருவாக்க வைத்திருக்கிறார் கேமரூன். படத்தில் ‘நவி’ மக்கள் பேசும் மொழியையும் சிறப்பாக உருவாக்க வேண்டும், அவர்களும் ஆங்கிலமே பேசிவிடக்கூடாது என விரும்பிய கேமரூன், மொழியியல் அறிஞர் Dr. Paul R. Frommer என்பவரிடம் ஒரு புதிய மொழியை உருவாக்கக் கேட்டிருக்கிறார். உலகத்தில் மனிதர்கள் பேசும் எந்த மொழியின் சாயலும் இல்லாமலும் அதே சமயம் உச்சரிக்க எளிதாகவும் இருக்கும் வகையில் அம்மொழியை உருவாக்க நிபந்தனை விதித்திருக்கிறார் கேமரூன். அது போலவே 1000 வார்த்தைகள் வரை உருவாக்கி அம்மொழியை உருவாக்கி இருக்கிறார் ஃப்ரோம்மர். ஆஸ்திரேலியரான படத்தின் கதாநாயகன் சேம் வொர்த்திங்டன், அமெரிக்க உச்சரிப்பைக் கற்பதைவிட நவி மொழியைத் தான் சுலபமாக கற்றுக்கொண்டதாக ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார்.

படம் வெளியாவதற்கு முன்பு நவிக்களையும், அந்த உலகத்தையும், அளவுக்கதிகமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உலகத்தையும் பார்த்த பல விமர்சகர்கள் இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாது என கணித்தார்கள். ஆனால், கேமரூன் உருவாக்கிய தொழில்நுட்பங்களும் புத்தம் புதிய விஸ்வல் எஃபெக்ட்ஸ் முறைகளும், கேமரூனின் கதையும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்து பாக்ஸ் ஆஃபிஸிலும் பயங்கர ஹிட்டடித்தது.

ஒன்லைன் பழசுதான், ஆனா ட்ரீட்மெண்ட் புதுசு

“இயற்கையை அழிக்காதீங்கடா, பூமா தேவி பொளந்துருவாடா, எல்லாரும் போய் சேர்ந்துருவீங்க”. அவதார் படத்தின் ஒன்லைன் ரொம்பவே அரதப் பழசானது. ஒருவரிக் கதை வேண்டுமானால் மிக எளியதாக இருக்கலாம். ஆனால், அந்த ஒரு வரி கதையை வைத்து கேமரூன் படைத்தது ஒரு புதிய உலகத்தை. அந்த உலகத்தில் கேமரூன் செய்து காட்டியது அத்தனையுமே ஸ்பெஷல் தான். புராணக் கடவுளைப் போல, பண்டோரா துணைக்கோளில் வாழும் நவிக்களின் உலகத்தில் ஒவ்வொரு செடியையும், மரத்தையும், உயிரிணத்தையும், நவிக்களையும், மலையையும், கடலையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் கேமரூன்.

‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தின் கடைசியில் ஒரு வசனம் வரும்ல, “கவரடிச்சு கிடக்குன்னு கண்டோடு…” கடற்கரைக்கு ஓடினால் அங்க கடல் மிண்ணும். அதுதான் Bioluminescence. கடலின் அடியாழத்தில் வாழும் கடல்வாழ் உயிரிணங்கள் சில தங்களின் உடலை ஒளிரும் தண்மை கொண்டதாக மாற்றிக்கொள்ளும் இயல்பு கொண்டவை. பண்டோராவின் இரவு நேரக் காட்சிகள் அனைத்திலும், மலர்களும் மரங்களும் கூட அப்போடி Bioluminescence தன்மை கொண்டவையாகப் படைத்திருப்பார் கேமரூன். பண்டோராவில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றோடு ஒன்றாக உணர்வு ரீதியாக ஒன்றாகக் கலந்திருப்பது என அந்த உலகத்தை அவ்வளவு உணர்வுபூர்வமாய் உருவாக்கியிருப்பார்.

Avatar
Avatar

இந்த மாய உலகப்படைப்புக்கு அடுத்தபடியாக, காலணியாதிக்கத்துக்கு எதிராகவும், இயற்கை வளங்களைச் சுரண்டுவதையும், மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிரான அட்டூழியங்களையும், மனிதர்களின் பேராசையையும் அத்தனை தெளிவாகச் சாடி இருப்பார். அதுவும் மக்கள் இதுவரை பார்த்திராத ஒரு கதைக்களத்தில், புதிய அனுபவத்தில் அந்த விஷயங்களைச் சொல்லியதெல்லாம் மக்களுக்குப் பிடித்துப்போனது.

ஜேம்ஸ் கேமரூன் எப்போதுமே பெர்பக்‌ஷனை எதிர்பார்க்கக்கூடிய ஆள். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே கறாராகத் தான் இருப்பாராம். ஷீட்டிங் சமயத்தில் அவர் கைகளுக்கு அருகிலேயே ஒரு ஆணி அடிக்கும் கருவியான Nail Gun இருக்குமாம். ஷீட்டிங் சமயத்தில் யாருடைய செல்போனாவது ஒலித்தால், அந்த நெய்ல் கண்ணை எடுத்து சுவற்றில் செல்போன்களை வைத்து ஆணி அறைந்து வைப்பாராம். அது பற்றிப் பேசும் போது ஒரு முறை கேமரூன், “செட்டில் ஒரு ஒழுங்கைக் கொண்டு வர நிறைய பேர் திரும்ப திரும்ப அமைதியா இருன்னு சொல்லிட்டு இருக்க முடியாது. இப்படி டிராமாட்டிகலா ஒரு முறை சம்பவம் பண்ணிட்டா, அதுவே செட் முழுக்க பேச்சாயிடும். அதுக்கப்புறம் நாம திரும்ப திரும்ப சொல்லத் தேவையில்லை.” இப்படி சொல்லியிருக்கார். அவதார் படத்தில் உங்களுக்குப் புடிச்ச ஒரு விஷயம் என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top