திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாட்டிறைச்சி விற்கக் கூடாது என கடை உரிமையாளர் ஒருவரை எச்சரித்த புகாரில் வட்டாட்சியர் சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது… என்ன நடந்தது?
அவிநாசியை அடுத்த துளுக்கமுத்தூர் பகுதியில் கானாங்குளத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், வேலுசாமி வீட்டில் அவிநாசி வட்டாட்சியர் சுப்பிரமணி இரண்டு நாட்களுக்கு முன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இனிமேல் மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வேலுசாமியை வட்டாட்சியர் சுப்பிரமணி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாட்டிறைச்சி விற்கக் கூடாது என எதுவும் சட்டம் இருக்கிறதா எனக் கேட்டு வேலுசாமி மற்றும் அவரது உறவினர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
வட்டாட்சியர் மீது நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியர் சுப்பிரமணி தரப்பில், பழங்கரை முதல் நம்பியூர் வரையிலான சாலையில் செயல்படும் மாட்டிறைச்சி கடைகள் சுகாதாரமின்றி செயல்படுகிறது. சாலைகளிலேயே மாடுகள் வதை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்தே ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், வீடியோ வைரலான நிலையில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்த அவர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். இந்தநிலையில், சுப்பிரமணி அவிநாசி வட்டாட்சியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஊத்துக்குளி பகுதி கூடுதல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாட்டிறைச்சி வெட்டப்படுவது சுகாதாரமாக இல்லை என்பதால் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆய்வின்போது சுத்தமாக இல்லாமல் இருந்ததால் எச்சரித்ததாகவும் சுப்பிரமணி தரப்பில் விசாரணையின்போது விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்றும் துறைரீதியான விசாரணைக்குப் பின்னர் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவிநாசி தாசில்தாரைக் கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் நேற்று போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read – கூகுள் மேப் உதவி; 21 ஏடிஎம்-களில் கொள்ளை – ஹரியானா கும்பலை நெருங்கும் போலீஸ்!