‘கோலிவுட்டின் செல்லம்’ நம்ம பிரகாஷ் ராஜ். ஒரு படத்தில் திரிஷாவை விரட்டி விரட்டி காதலிக்கும் அவரால் அடுத்த படத்திலேயே திரிஷாவுக்கு அப்பாவாகவும் நடித்து அசத்த முடியும். அப்படிப்பட்ட அற்புத கலைஞன் பிரகாஷ் ராஜ் இதுவரை தன் கரியரில் தேர்ந்தெடுத்த ரோல்களில் சிறந்த பத்து ரோல்கள் பற்றி இங்கு பார்க்கலாம். (குறிப்பு : இது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல)
மேஜர் மாதவன் – ‘ஆசை’
பிரகாஷ் ராஜின் ஆரம்பகாலத்தில் அமைந்த மிகச் சிறப்பான ரோல்களில் ஒன்று இது. ஹீரோயினான தன் மச்சினியின்மீது கொண்ட மோகத்தால் தன் மனைவியையே கொன்று மறைத்துவிட்டு நல்லவன்போல நடித்து அவளை அடையத் துடிக்கும் ஒரு குரூரமான பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நிஜமாகவே மிரட்டியிருப்பார். உள்ளுக்குள் அவ்வளவு வன்மங்களையும் வைத்துக்கொண்டு வெளியில் ஜெண்டில்மேனாக நடிக்கும்போதும் உண்மையெல்லாம் தெரியவந்ததும் ஓரிஜினல் முகத்திற்கு மாறுவதுமென பிரகாஷ்ராஜ் செம்ம வெரைட்டி காட்டியிருப்பார். படத்தில் இடம் பெறும் அந்த பர்ஸ் சீன் ஒன்று போதும் அவர் யாரென்று சொல்ல.
டாக்டர் விஸ்வநாதன் – ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’
வில்லத்தனம் நிறைந்த ஒரு வித்தியாசமான காமெடி குணச்சித்திரப் பாத்திரம் இது. உள்ளுக்குள் எரிச்சல் அடைந்தாலும் அதை சிரித்து சிரித்துக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் இந்த காமெடி பாத்திரத்தில் அவ்வளவுப் பக்காவாகப் பொருந்தியிருப்பார். எதிரில் கமல் போன்ற ஒரு மிகப்பெரிய ஆளுமை இருந்தாலும் அவருக்கே டஃப் கொடுத்து ஆடியன்ஸை தன் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு இந்த ரோலில் அசத்தியிருப்பார் பிரகாஷ் ராஜ்.
தமிழ்ச்செல்வன் – ‘இருவர்’
பிரகாஷ் ராஜின் கரியர் பெஸ்ட் ரோல் என ‘இருவர்’ படத்தின் ‘தமிழ்ச்செல்வன்’ கதாபாத்திரத்தைச் சொல்லலாம். ஒரு நிஜ ஆளுமையை இமிடேட் செய்வதுபோலவும் இருக்கவேண்டும் அதேசமயம் அவரை அப்படியே நகலெடுத்ததுபோலவும் இருக்கக்கூடாது, வில்லத்தனமாகவும் தெரிந்துவிடக்கூடாது அதேசமயம் இவர்தான் நல்லவர் என தராசு முள் இந்த பாத்திரத்தின் பக்கமும் சாய்ந்துவிடக்கூடாது என்பதுபோன்ற கடினமான பல சவால்களை ஏற்றுக்கொண்டு பிரகாஷ்ராஜ் நடித்த பாத்திரம் இது. படத்தில்.. வெகு காலத்திற்குப் பிறகு ஒரு திருமண நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜூம் மோகன்லாலும் சந்தித்துக்கொள்ளும் காட்சியில் தன் அருகே உட்கார்ந்திருக்கும் மோகன்லாலை திரும்பி பிரகாஷ் ராஜ் ஒரு பார்வை பார்ப்பாரே.. ப்ப்பா..!
ஆதி நாராயணன் – ‘அறிந்தும் அறியாமலும்’
பிரகாஷ் ராஜ் நடிப்பில் ஒரு கியூட்டான ரோல் இது. ஊரையே தனது ரவுடித்தனத்தால் அடக்கி ஆளும் ஒரு தாதா, தனக்கு ஒரு மகன் இருக்கிறான் எனத் தெரிந்ததும் அவனுக்குள் ஏற்படும் அக மாற்றங்களை அவ்வளவு அழகாக இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் பிரகாஷ்ராஜ். ஒரு நடிகனுக்கு சரியான காலகட்டத்தில் அமைந்த மிகச்சரியான கதாப்பாத்திரம் என இதைக் குறிப்பிடலாம்.
சுப்ரமணியம் – ‘சந்தோஷ் சுப்ரமணியம்’
செம்ம வெயிட்டான டைட்டில் கேரக்டரில் பின்னியெடுத்திருப்பார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனை குழந்தையாகவே பாவித்து அவருக்கேத் தெரியாமல் அவனுக்கு வில்லனாக மாறி பின் மனம் திருந்தும் ஒரு அழகான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜைத் தவிர்த்து வேறொரு நடிகரை நினைத்தேப் பார்க்கமுடியவில்லை.
Also Read: தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ- இந்த காம்போ இருந்தா எப்படி இருக்கும்?