அசீம், “நீ வேணும்னா சண்டைக்கு வாடா”னு எல்லாத்தையும் வம்புக்கு இழுத்துட்டு சுத்துறாரு, விக்ரமன், நீதிடா, நேர்மைடானு சத்தம் போட்டு கத்துறாரு, எவன் எப்படி போனா நமக்கு என்னனு ராபர்ட் மாஸ்டர் லவ் மோட்ல வைப்ல இருக்காரு, இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மோட்ல சுத்துறாங்க. ஆனால், நம்ம கதிரவன் எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனோம்னே தெரியாமா, என்ன பண்றோம்னு தெரியாமல், நமக்கு எதுக்கு வம்புனு இருக்குற இடம் தெரியாமல் இருந்துட்டு போய்டுவோம்னு தியான நிலைல இருக்காரு. கதிரவன் இப்படி இருக்குறது சரியா? தப்பா?
கதிரவன் வி.ஜேவா இருக்கும்போது எக்கச்சக்கமான பொண்ணுங்க ஃபேன்ஸ். அவருக்குனு தனியாவே ஃபேன் பேஸ் இருக்கு. பிக்பாஸ் வீட்டுக்குள்ள அவர் போறாருனு தெரிஞ்சதும், பொண்ணுங்க எல்லாம் செம ஹேப்பி. சரி, வீட்டுக்குள்ள போய் மனுஷன் எதாவது பண்ணுவாருனு பார்த்தா, பாயின்ட் வரட்டும்னு காத்துக்கிட்டே இருக்காரு. இதனால, கதிரவன் ஃபேன்ஸ் எல்லாம் செம அப்செட்னே சொல்லலாம். எந்த அளவுக்கு இறங்கி பேசுறாங்கனா, உன் பெயர் கெட்டுப்போனாலும் பரவால்ல எதாவது பண்ணுடான்ற அளவுக்கு இறங்கிட்டாங்க. பிக்பாஸ் 6 பெயரை சொன்னாலே ஃபஸ்ட் நியாபகம் வர்றது பொம்மை டாஸ்க்தான். எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் தள்ளிவிட்டு சண்டைப்போட்டு மல்லுக்கட்டிட்டு இருந்தாங்க. ஆனால், கதிரவன் அமைதியா சோஃபா ஒண்ணுல போய் உட்கார்ந்து, என்ன நடக்குதோ அதை அப்படியே பார்த்துட்டு இருந்தாரு. ஒருத்தரை ஒருத்தர் அடிச்சு, தள்ளு முள்ளுல கலந்து அந்தப் போட்டில போய் ஜெயிக்க வேணாம்னு கதிரவன் அமைதியா உட்கார்ந்துட்டாரு. ஆனால், அவரை சுத்தி இருந்தவங்கலாம் சேர்ந்து அவர் பொம்மையை உள்ள கொண்டு போய் வைக்க ட்ரை பண்ணாங்க. குறிப்பா, ராம் அவரை ஜெயிக்க வைக்கணும்னு நினைப்பாரு. கதிரவன் சுத்தமா இன்ட்ரஸ்டே இல்லாமல் இருப்பாரு. அந்த நேரத்துல கதிரவனை எல்லாருக்கும் புடிச்சுது. அதையே வழக்கம் ஆக்கிட்டதாலதான் அவர் ஃபேன்ஸ்லாம் கடுப்பானங்கனு சொல்லலாம். அவரைப் பார்க்கும்போது ஸ்ரீ நியாபகம்தான் வந்துச்சு. என்ன அவர் உடனே கிளம்பிட்டாரு, இவர் உள்ள இருக்காரு. அவ்வளவுதான்.
பிக்பாஸ் வீட்டுக்குள்ள நடக்குற சின்ன விஷயத்துக்கும் டென்ஷனாகி கத்துற ஆள், அசீம். அப்படிப் பார்த்தா கதிரவன் மேல எல்லாருக்கும் நல்ல எண்ணம்தான் வரும். ஏன்னா, எல்லா சிச்சுவேஷனையும் கூலாகவே ஹேண்டில் பண்றாரு. ஆனால், இப்படி இருக்குறது சரியான்ற கேள்வி நியாயமானது. வீட்டுல எந்தவிதமான பிரச்னை வந்தாலும் கருத்து சொல்லாமல், பாதிக்கப்பட்டவங்க பக்கம் பேசாமல் அமைதியா இருக்குறதை என்னனு எடுத்துக்கிறது? டாஸ்க்ல ஜெயிக்கணும். அப்போதான் எலிமினேஷன் நாமினேஷன்ல இருந்து தப்பிக்கலாம். பாதிக்கப்பட்டவங்க பக்கம் நின்னு நியாயத்தை பேசணும், அப்போதான், நாமினேஷன் ஆனா கூட மக்கள் ஓட்டு போட்டு காப்பாத்துவாங்க. ஆனால் இவர் எந்த வகைனே இன்னும் யாராலயும் புரிஞ்சுக்க முடியலை. எலிமினேட் ஆகாமலையும் ஈஸியா தப்பிக்கிறாரு. யாரு வீட்டுல அதிகமா மிக்சர் சாப்பிடுறதுனு மிக்சரை வைச்சு கமல் முன்னாடி ஒரு டாஸ்க் நடக்கும். அப்போ, கமலே சொல்லுவாரு. நான் கதிரவன் தட்டு தான் நிறையும்னு நினைச்சேன்னு. ஏன்னா, மனுஷன் உண்மையாவே அப்படித்தான். ஏன்டா, இங்க இவ்ளோ பிரச்னை நடக்குது, ஒருத்தன் உட்கார்ந்து அமைதியா மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்கான் பாருனு கவுண்டமணி டயலாக் வரும்ல. கதிரவன் எக்ஸாக்ட்லி அப்படிதான் நடந்துக்குறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் அவர் அமைதியா இருந்து அடுத்தவங்கள தொந்தரவும் பண்ண மாட்டாரு. சண்டை போட்டு என்ன நடக்கும்?, எதுக்கு பேசிக்கிட்டு?, இருக்குற இடம் தெரியாமல் இருந்துட்டு போடணும்னானு கொள்கையோட இருக்காரு.
காதல் மன்னன்னு கதிரவனுக்கு டைட்டில் கொடுத்தரலாம். அவரு யாரையும் காதலிக்கல. அமைதியாகவே இருந்து வீட்டுக்குள்ளயே பலரோட மனசை கொள்ளையடிச்சது கதிரவன்தான். முதல்ல ஷெரினா, கதிரவன் மேல செம கிரஷ்ல இருந்தாங்கனு பேச்சுலாம் அடிபட்டுச்சு. ஷெரினாவும் கதிரவனும் இந்த பிக்பாஸ் சீசன் காதல் ஜோடிகளாகவே கிட்டத்தட்ட வலம் வந்தாங்க. ஆனால், அசல் கோளாறு பண்ண அலப்பறைகள், ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா காதல் பரிதாபங்கள், அசீம் – விக்ரமன் பண்ண அட்டகாசங்கள் இதுலயெல்லாம் கதிரவன் காதல் மறைஞ்சிடுச்சுனு சொல்லலாம். ஷெரினா வெளிய போற வரைக்கும் கதிரவன் பின்னாடி சுத்திட்டு இருந்தாங்க. அப்புறம் அவங்க போய்ட்டாங்க. ஒருதடவை மகேஷ்வரிம் எனக்கு கதிரவன் மேல கிரஷ் இருக்குனு சொல்லுவாங்க. இப்படி, பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்தவர் கதிரவன். கடைசில அந்த லிஸ்ட்ல ஜாயின் பண்ணியிருக்குறது, ஷெரின். இந்த பிக்பாஸ் சீசனோட ஸ்ட்ராங்கான போட்டியாளர், ஷெரின். எல்லா டாஸ்க்லயும் நல்லா விளையாடுறாங்ஜ. அவங்களும் கதிரவன் மேல இருக்குற கிரஷை சமீபத்துல வெளிப்படுத்துனாங்க. ஆனால், அவங்க சொல்றதை புரியாத மாதிரியே கதிரவன் உட்கார்ந்து கேட்டுட்டு இருந்தாரு. கதிரவன் பாத்திரம் கழுவும்போது ஹெல்ப் பண்றேன்னு போய் நிப்பாங்க. அப்பவும் கதிரவன் வேணாம்னு தவிர்த்திருவாரு. அமைதியா இருக்குற பசங்களைத்தான் பொண்ணுங்க தேடி தேடி காதலிக்கிறாங்க.
Also Read – வெள்ளை சட்டை போட்ட டான்.. விக்ரமனின் தரமான சம்பவங்கள்!
ஷிவின் மாதிரியே பாடி லேங்குவேஜ் பண்ணி கிண்டல் பண்ணது, அவங்களுக்கு மொட்டையடிக்கணும்னு சொன்னதுனு ஏகப்பட்ட கம்ப்ளெயின்ட் அசீம் மேல இருக்கு. ஷிவின் நல்ல ஃப்ரெண்டா கதிரவன் இருக்காரு. அசீம் சொல்லும்போதுலாம் பக்கத்துலயே இருக்காரு. அப்பவும் அதை எதிர்த்து பேசாமல் அமைதியாகவே இருப்பதுதான் கதிரவன்கிட்ட இருக்குற பிரச்னையே. நான எல்லாரும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளிய இருந்து தான் ஷோவை பார்த்துட்டு இருக்கோம். ஆனால், வீட்டுக்குள்ள உட்கார்ந்து லைவா ஷோ பார்க்குறது நம்ம கதிரவன்தான். இதுக்கு முன்னாடி ஜித்தன் ரமேஷ் பண்ண வேலையை இப்போ கதிரவன் பண்றாருனு கம்பேர் பண்ணியும் போட்ருந்தாங்க. வருஷா வருஷம் ஒரு கிறுக்கன்கிட்ட சிக்கிடுறேன்னு வடிவேல் சொல்ற மாதிரிதான், பிக்பாஸ்லயும் இப்படியொரு ஆள் சிக்கிடுறாரு. பிக்பாஸ் போட்டியாளர்கள்ல இந்த சீசன்ல மிக்சர் கேங்க்னு ஒண்ணு இருக்கு. ராம்லாம் அந்த டீம்தான். ஒரு தடவை ராம்கிட்ட, ஏ.டி.கே கத்தி கேட்ருவாரு, ஏன்டா இவ்ளோ சண்டை போய்ட்டு இருக்கு. என்னடா சும்மா இருக்கனு. எல்லாதடவையும் கதிர் கொடுக்குற ரியாக்ஷன் சிரிப்பு மட்டும்தான், எல்லா இடத்துலயும் இப்படி சிரிக்காதீங்கனு கமல், கதிர்கிட்ட சொல்லுவாரு. அப்புறம், கதிர் – ஏ.டி.கே சேர்ந்து பாட்டு பாடுனதுலாம் வேறலெவல். அந்த எபிசோடுக்கு அப்புறம் கதிரவனுக்கு இன்னும் ஃபேன்ஸ் கூடியிருப்பாங்க. கடைசியா ராஜா – ராணி டாஸ்கலயெல்லாம் கதிர் வழக்கத்துக்கு மாறா நல்லாவே விளையாட ஆரம்பிச்சிட்டாரு. இப்படியே விளையாடி வெளிப்படையா நிறைய விஷயங்களை பேசுனா, அவர் மேல இன்னும் மரியாதைகள் பிக்பாஸ் ஃபேன்ஸுக்கு அதிகமாகும்.
பொதுவா நம்மள மாதிரி மிடில் கிளாஸ் மக்களோட மனநிலை நமக்கு எதுக்குடா வம்பு, நல்லவனா பார்த்தா சிரிச்சிக்க, கெட்டவனா பார்த்தா ஒதுங்கிக்க, இருக்குற இடம் தெரியாமல் இருந்துட்டு போய்டணும்ன்றது தான். அந்த மனநிலை நமக்கு சேஃபானதுதான். ஆனால், நம்மள சுத்தி இருக்குறவங்களை நம்மளோட அமைதி எப்படி பாதிக்கும்ன்றதுக்கு சின்ன எக்ஸாம்பிளா கதிரவனை எடுத்துக்கலாம். கதிரவன் செயல்கள் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க.