தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மகளிர் பயன்பெறும் `கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கும் உரிமைத் தொகை சென்று சேர்ந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் எதெல்லாம் வதந்தி… குறிப்பிட்ட விவகாரத்தில் உண்மை என்னனு பார்க்கலாம் வாங்க!

1.கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் கணக்கு இருந்தால் மட்டும்தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?
கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் திட்டத்துக்கான தொகை வந்து சேரும் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் பரவியது. இதுகுறித்து அரசு தரப்பில், `அஞ்சலகங்கள், கூட்டுறவு வங்கிகள் என்றில்லை, தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தாலே போதும்’ என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

2.மகளிர் உரிமைத் தொகைக்காக ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஒட்டிகளிடம் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்க மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா?
மகளிர் உரிமைத் திட்டத்துக்கு நிதி திரட்டும் வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் சார்பிலும் வாகன ஓட்டிகளிடம் ஒரு லட்ச ரூபாய் வரையில் வசூலித்துத் தர வேண்டும் என்று கட்டாய இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்நாடு காவல்துறை சார்பிலேயே விளக்கம் அளிக்கப்பட்டது. காவல்துறை அளித்திருந்த விளக்கத்தில், `மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு நிதி திரட்ட ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசோ, காவல்துறையோ எந்த உத்தரவையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை. இதுபோன்று பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
3.ஒரு கோடி பெண்களுக்கு 7,000 கோடி ரூபாய் நிதியில் எப்படி ஒரு வருடத்துக்கு மாதம் தோறும் ரூ.1,000 கொடுக்க முடியும்?
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானபோதே சிலர், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். `ரூ.7,000 கோடியை வைத்துக் கொண்டு 58 லட்சம் பெண்களுக்குத் தான் மாதம் ரூ.1,000-த்தை ஒரு வருடத்துக்குக் கொடுக்க முடியும்’ என்ற கருத்தை முன்வைத்திருந்தனர். உண்மையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக அரசு ஒதுக்கியிருக்கும் ரூ.7,000 கோடியை வைத்து 2024 மார்ச் வரையில் 7 மாதங்களுக்குக் கொடுக்க முடியும். அடுத்தகட்டமாக ரூ.12,000 கோடியை அரசு ஒதுக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் மாதம்தோறும் உரிமைத் தொகை கொடுக்க முடியுமா என்ற கேள்வியே அடிப்படை இல்லாதது.

4.கட்சில இருக்கவங்களுக்கு மட்டும்தான் இந்தத் திட்டமா?
குறிப்பிட்ட கட்சியினரின் குடும்பத்தார்கள் மட்டும்தான் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள். இதில் துளியளவும் உண்மையில்லை. `கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே, யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்பது பற்றிய தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. அத்தோடு திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ச்சியாக எடுத்தது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்க சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த முகாம்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 34,350 தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய உதவுவதற்கென பிரத்யேகமாக உதவி மையங்களும் செயல்பட்டன. பயனாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் மொபைலுக்கு அந்தத் தகவல் எஸ்.எம்.எஸ் மூலமாக உறுதி செய்யப்பட்டது. தகுதியுடையவர்கள், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக நினைத்தால் மேல்முறையீடு செய்யவும் அரசு வழிவகை செய்துள்ளது. மேல்முறையீடு குறித்து குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார். ஆய்வு முடிவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இத்தனை படிநிலைகள் இருக்கையில், அந்தத் திட்டம் ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு மட்டுமே என்று பரப்பப்படும் தகவல் வதந்தியே. அதில் உண்மையில்லை.
Also Read – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஏன் அவசியம்… 3 முக்கிய காரணங்கள்! #TNEmpowersWomen
Your article helped me a lot, is there any more related content? Thanks!