தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் பொது சொத்துகளை தனியார் பங்களிப்புடன் ஏலம் விட்டு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 6 விமான நிலையங்கள் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட இருக்கிறது.
தேசிய பணமாக்கல் திட்டம்
பொதுசொத்துகளை தனியார் பங்களிப்புடன் நிதி திரட்டும் நோக்கில் தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய அரசு 2021-22 பட்ஜெட்டில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி, நாடு முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு சொந்தமான உள்கட்டமைப்பு சொத்துகள் மூலம் 2022 – 2025 நான்கு ஆண்டுகளில் நிதி திரட்டப்பட இருக்கிறது. இதற்காக ‘தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள்’ (National Monetisation Policy) உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த புதுமையான வழிகளில் நிதி திரட்டவும் இந்தத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் 6 விமான நிலையங்கள்
தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் குத்தகைக்கு விடப்படும் மத்திய அரசின் சொத்துகள் பட்டியலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அந்தப் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் (PPP) நிர்வகிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மத்திய அரசுக்கு நிதியும் கிடைக்கும். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமம் நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டபோது, அங்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. மாநில அரசே விமான நிலைய நிர்வாகத்தை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் 6 விமான நிலையங்கள் தவிர, குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் நீலகிரி மலைரயில் பாதையும் கண்டறியப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்குச் சொந்தமான சில சொத்துகள், உளுந்தூர்பேட்டை – திண்டிவனம் இடையிலான 73 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, திருச்சி – பாடலூர் சாலை, ஓசூர் – கிருஷ்ணகிரி ஆறுவழிச் சாலை, தாம்பரம் – திண்டிவனம் சாலை, திருச்சி – காரைக்குடி சாலை உள்ளிட்ட 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளையும் குத்தகைக்கு விடும் பட்டியலில் மத்திய அரசு சேர்த்திருக்கிறது.
Also Read : 2015 சென்னை வெள்ளத்துக்கு என்ன காரணம்… பேரவையில் மோதிக்கொண்ட தி.மு.க – அ.தி.மு.க!