`பிகினி கில்லர்’, `தி செர்பென்ட்’ என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்பட்ட சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், கிட்டத்தட்ட 19 வருட சிறைவாசத்துக்குப் பிறகு நேபாளத்தின் காத்மாண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. யார் இந்த சார்லஸ் சோப்ராஜ், அவருக்கு பிகினி கில்லர், தி செர்பென்ட் என்கிற பெயர்கள் ஏன் வந்ததுனுதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
1970-களின் பிற்பகுதியை சீரியல் கில்லர்களின் பொற்காலம் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். டெட் பண்டி மற்றும் ஜான் வெய்ன் கேஸி போன்ற சீரியல் கில்லர்கள் அமெரிக்காவில் ரொம்ப ஆக்டிவாக இருந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான் சார்லஸ் சோப்ராஜ். நவரத்ன வியாபாரி `Alain Gautier’ உள்ளிட்ட பல பெயர்களில், பலரின் அடையாளங்களைத் திருடியும் வாழ்ந்த சோப்ராஜ், ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தெற்காசியாவுக்கு வருகை தந்தை இளம் வயது பெண் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்துக் கொலை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். கொல்வதற்கு முன்பு அவர்களுடன் நட்பாகப் பழகி, போதை மாத்திரை கொடுத்தல் அல்லது தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்வது இவரது டிரேக் மார்க் ஸ்டைல். ஆரம்பத்தில் அப்படி இறந்தவர்கள் விபத்தில் இறந்ததாக நம்பப்பட்டாலும் விசாரணையில் அவர்கள் கொல்லப்பட்டது பின்னர் தெரியவந்தது. 1970களில் இருந்து தொடர்ச்சியாகக் கொலைகள் செய்துவந்த சார்லஸ் சோப்ராஜ் முதன்முதலில் சிக்கியது இந்தியாவில்தான்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 1944-ம் ஆண்டு ஏப்ரல் 6-ல் வியட்நாமின் Saigon பகுதியில் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். அவரது தாயார் Tran Loan Phung அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர். அவரது தந்தை ஒரு இந்தியர். சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டுவிட்டு தந்தை வெளியேறவே, அவரது தாய் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்துவந்த அதிகாரி ஒருவரை மணக்கிறார். அந்த ராணுவ அதிகாரி சார்லஸின் தங்கையைத் தத்தெடுத்துக் கொள்கிறார். ஆனால், அவரைக் குடும்பத்துக்குள் சேர்க்கவில்லை. இதனால், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியாமலேயே சார்லஸின் சிறுவயது கழிகிறது. போர்டிங் ஸ்கூலில் சக குழந்தைகளால் கடுமையாக Bullying செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பள்ளியில் இருந்து தாய் மூலம் வெளியே கொண்டுவரப்பட்ட சோப்ராஜ், தந்தையுடன் வசிப்பதற்காகக் கள்ளத்தனமாக பலமுறை கப்பலில் வியட்நாம் செல்ல முயற்சித்திருக்கிறார். இதனால், தந்தை இறந்துவிட்டார் என தாய் அவரிடம் சொல்ல நேரிடுகிறது.
தான் கொல்ல நினைப்பவர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள குறிப்பிட்ட சைக்காலஜி முறையை சார்லஸ் சோப்ராஜ் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். அது என்ன முறை என்பதைத் தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.
கொலைகளைச் செய்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்களைத் திருடி, சில நேரங்களில் அவர்களின் பெயர்களோடே அங்கிருந்து தப்பித்துவிடுவாராம். அப்படி பலமுறை எஸ்கேப்பான நிலையில், 1976-ல் இந்தியாவில் போலீஸில் சிக்கிய அவர், கிட்டத்தட்ட 1997 வரை சிறையில் இருந்தார். பின்னர் மாயமான அவர், 2003-ல் நேபாளம் திரும்பினார். அமெரிக்கரான Connie Jo Bronzich கொலை தொடர்பாக அங்குள்ள கேசினோ ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நேபாளத்தில் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், உடல்நலக் குறைபாட்டைக் காரணமாகக் கொண்டு அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
1986-ல் திகார் சிறையில் இருந்து இவர் தப்பிய சம்பவம், நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. தனது பிறந்தநாள் என்று கூறி சிறை அதிகாரிகள் கைதிகள் என சிறை வளாகத்தில் இருந்த அனைவருக்கும் மயக்க மருந்து கலந்த பழம், இனிப்புகளை விநியோகித்திருக்கிறார். அவர்கள் அனைவரும் மயக்கமடையவே சாவகாசமாகத் தப்பிச் சென்றார். பின்னர் கோவாவில் இவர் கைது செய்யப்படவே, சிறை தண்டனைக் காலமும் 10 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்யப்பட்டால், தான் தாய்லாந்துக்கு நாடு கடத்தப்படலாம். அங்கு தான் தேடப்பட்டு வந்த 5 கொலை வழக்குகளுக்காக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதால், அவரே நடத்திய நாடகம்தான் சிறையில் இருந்து தப்பிய சம்பவம் என்று சொல்லப்படுவதும் உண்டு.
சோப்ராஜால் கொல்லப்பட்ட பலரும் அவரால் விஷம் கொடுத்து உடல் நலிவுறச் செய்யப்பட்டவர்களே… முதலில் அவர்களுக்கு விஷம் கொடுத்து உடல்நிலையை மோசமடையச் செய்து, பின்னர் அதை சரியாக்கும் விதமாக மருத்து கொடுப்பதாக அவர்களை நம்பவைத்துக் கொலை செய்வதுதான் அவரின் ஸ்டைல் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பிரான்ஸைச் சேர்ந்த Dominique Renelleau என்கிற நபருக்கு மருந்து கொடுத்து உடல்நிலையைச் சீராக்குவதாகச் சொல்லி கொலை செய்திருக்கிறார். அதேபோல், நெதர்லாந்தைச் சேர்ந்த மாணவி Henk Bintanja மற்றும் அவரது வருங்கால கணவர் Cocky Hemker ஆகியோருக்கும் விஷம் கொடுத்து உடல்நிலை நலிவுற்றபிறகு, மருந்து கொடுப்பதாகக் கூறி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோருடன் இணைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அவர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும் என்கிற காரணத்தால் அவர்களைக் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சார்லஸ் சோப்ராஜுக்குக் கூட்டாளிகளாக அவரது காதலி Quebecois Marie-Andrée Leclerc மற்றும் இந்தியரான அஜய் சௌத்ரி ஆகியோர் இவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். சார்லஸ் சோப்ராஜை Quebecois Marie-Andrée Leclerc இந்தியாவில்தான் முதல்முறையாக சந்தித்திருக்கிறார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, பின்னர் கண்மூடித்தனமாக அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் இருந்து நேபாளத்தில் இருக்கும் புத்த மடாலயத்தில் இணைவதற்காக வந்த Teresa Knowlton என்கிற இளம்பெண்தான் சார்லஸ் சோப்ராஜின் முதல் விக்டிமாகக் கருதப்படுகிறார். அவர் தாய்லாந்து கடலில் பிணமாக மீட்கப்பட்டார். முதலில் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பூக்கள் டிசைன் போடப்பட்ட பிகினி உடையில் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரைப் போலவே சார்லஸ் சோப்ராஜ் கொலை செய்த பெண்கள் பலரும் பிகினி உடையில் பிணமாகக் கிடந்ததாலேயே, அவருக்கு பிகினி கில்லர் என்கிற பெயர் ஏற்பட்டது. அதேபோல், பாம்பு போல் சத்தமில்லாமல் கொலை செய்துவிட்டு ஒரு இடத்தை விட்டு அடுத்த இடம் நகரும் தன்மை கொண்டதாலேயே, இவரை தி செர்பென்ட் என்ற அடைமொழியிலும் அழைத்திருக்கிறார். பிபிசி – நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து சார்லஸ் சோப்ராஜ் பற்றி `The Serpent’ என்கிற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றையும் தயாரித்தனர்.
டச்சுப் பெண்கள் இருவர் கொலைக்குப் பிறகு சார்லஸை விடாமல் துரத்தி, அவர் கைது செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் Herman Knippenberg என்கிற டச்சு அரசு தூதரக அதிகாரிதான். அவரும் அவருடைய மனைவி ஏஞ்சலாவும் சார்லஸ் வழக்கு விசாரணையில் முக்கியமான பங்கு வகித்தவர்கள். ஸ்டைலிஷான உடை, அதிகம் ரிஸ்க் எடுக்காத கிரிமினல் ஆக்டிவிட்டீஸ், ஆடம்பர வாழ்க்கை என உலா வந்த சார்லஸ் சோப்ராஜ், கிரிமினல் உலகில் மதிப்புமிக்கவராக வலம் வந்தவர்.
Also Read – அம்மா உணவகம் எமோஷனல் கதைகள்!… நடத்தலாமா? வேண்டாமா?
யாரைக் கொல்ல நினைக்கிறாரோ அவர்களைப் பற்றி கேரக்டரைசேஷன் எனப்படும் சைக்காலஜி முறைப்படி முழுமையாகத் தெரிந்துவைத்துக் கொண்டு, ஒவ்வொருவரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப அவர்களை அணுகுவாராம். பொதுவாக விக்டிம்களைத் தனது அபார்ட்மெண்டுக்கு விருந்தினராக அழைத்து அவர்களுக்கு மெதுவாக போதை மருந்துகளைக் கொடுப்பாராம். பாதிக்கப்பட்டவர்களின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் ஆசைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் Saviour போல நடித்து அவர்களைக் கொல்வதை வழக்கமாக வைத்திருந்தாராம். சார்லஸ் சோப்ராஜ் கிட்டத்தட்ட 24-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என்று ஒரு தகவல் இருக்கிறது. ரிலீஸாகி பிரான்ஸ் திரும்பியிருக்கும் அவர், தன் மீது பொய் வழக்குப் போட்டதாக நேபாள அரசுக்கு எதிராக வழக்குத் தொடரவும் தயாராகி வருகிறார்.