பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக வடசென்னையைச் சேர்ந்த 28 வயதான பிரியா ராஜனை அறிவித்திருக்கிறது தி.மு.க தலைமை. யார் இந்த பிரியா ராஜன்.
தமிழக அரசியலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போன்றோர் அந்தப் பதவியை அலங்கரித்தவர்கள். இதில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை பெற்றவர் ஸ்டாலின். இந்தியாவின் பழமையான மாநகராட்சிகளில் முதன்மையான சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்பை வென்றெடுக்க உள்ளாட்சித் தேர்தலில் திராவிடக் கட்சிகள் கடுமையாக மோதிக்கொள்ளும்.
வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா ராஜன். 18 வயது முதலே தி.மு.க உறுப்பினராக இருக்கும் இவர் எம்.காம் படித்திருக்கிறார். ஆக்டிவ் பாலிடிக்ஸில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறார். இவரது குடும்பம் பாரம்பரிய தி.மு.க குடும்பமாகும். இவர் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். இவரது தந்தை பி.ராஜன், அந்தப் பகுதியின் தி.மு.க துணைச்செயலாளராக இருக்கிறார்.
வடசென்னை திரு.வி.க நகர் மங்களபுரம் 74-வது வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் பிரியா. இவர் , தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை 6,994 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
பிரியா ராஜன், சென்னை மாநகராட்சியின் மேயராகத் தேர்வு செய்யப்படும்பட்சத்தில், 3-வது பெண் மேயராகப் பொறுப்பேற்பார். இதற்கு முன்னர், தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகியோர் இந்தப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். அதேநேரம், சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
சென்னை மாநகராட்சி மேயர்களாக இதுவரை, தென்சென்னை, மத்திய சென்னை கவுன்சிலர்களே தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். சென்னையின் பூர்வகுடிகள் அதிகம் பேர் வசிக்கும் வடசென்னையிலிருந்து மேயராகத் தேர்வு செய்யப்படும் முதல் நபர் பிரியா ராஜன்தான்.
Also Read – `புன்னகை முதல் பெருமிதம் வரை..’ முதல்வர் மு.க.ஸ்டாலினின் `நவரசா’ மொமண்ட்ஸ்!