பொதுவாகவே திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் சாதிக்கவே விரும்புவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக பலரையும் கூறலாம். அரிதினும் அரிதாகவே திரைத்துறை பிரபலங்களின் வாரிசுகள் அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தித்து அதற்கேற்ப செயல்படுவார்கள். இந்த வகையில், சின்னி ஜெயந்தின் மகனை சேர்க்கலாம். 1980 மற்றும் 1990-களில் தமிழில் முன்னணி நகைச்சுவை கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சின்னி ஜெயந்த். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். கடந்த ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 75-வது இடத்தை ஸ்ருதன் பிடித்தார். இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ருதனுக்கு திரைத்துறை பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய மகன் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றதை சின்னி ஜெயந்த் தனது நண்பர்கள் பலரிடமும் பகிர்ந்துகொண்டார். ரஜினிகாந்திடமும் இந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். ஸ்ருதன் ஜெய் தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதில் மிகவும் பெருமைப்படுவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான பிரச்னைகள் முடிந்த பிறகு ரஜினிகாந்தை நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் சின்னி ஜெயந்த் தெரிவித்திருந்தார். திரைத்துறையினர் மட்டுமல்லாது பிற துறையைச் சேர்ந்த பிரபலங்களு, அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேசும்போது, “நான் இந்த தேர்வில் வெற்றி பெற்றதில் என்னைவிட அப்பாவுக்குதான் அதிக மகிழ்ச்சி. ஒட்டுமொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கிறோம். சிறுவயதில் இருந்தே அப்பா மற்றும் அம்மா என இரண்டு பேருமே நான் படிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருந்தனர். நானும் நன்றாகப் படித்தேன். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரியை முடித்தேன். பின்னர், டெல்லியில் உள்ள சோகா பல்கலைக்கழகத்தில் படித்தேன். இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றினேன். அப்போதில் இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன். சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் இணைந்து படித்தேன். எல்லாவற்றையுமே மகிழ்ச்சியுடன் செய்தேன்” என்று தெரிவித்திருந்தார். பணியில் சேர்ந்த பின்னர் கல்வி, பொருளாதாரம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் கவனத்தை செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வாழ்த்துக்கள் ஸ்ருதன் ஜெய்!
Also Read : ஒலிம்பிக்கில் முதல்முறை… அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி – ஆஸ்திரேலியா வீழ்ந்தது எப்படி?