நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருடன் சென்ற Mi-17V5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 3 பேருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது?
பிபின் ராவத்
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று காலை வந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடைபெற்ற கருந்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்ற அவர், தனது மனைவி மதுலிகா ராவத், மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேருடன் சூலூரில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான Mi-17v5 ரக ஹெலிகாப்டரில் ஊட்டி புறப்பட்டுச் சென்றார். மதியம் 12.20 மணியளவில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து விமானப்படை தரப்பில், `முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மோசமான வானிலை
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் குன்னூர் அருகே கடும் பனிமூட்டம் காரணமாக வழிதவறி விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்தபோது பெரிய அளவில் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்தவுடன் நீலகிரி ஆட்சியர் அம்ரித், ராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் குடங்கள் மூலம் தண்ணீரை நிரப்பி அதன்மூலம் தீயை அணைத்திருக்கிறார்கள். இதுவரை 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாகவும், இருவர் 80 சதவிகித தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பிபின் ராவத் நிலை என்ன?
விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்தவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடமும் அவர் விளக்க இருக்கிறார். அதேபோல், விபத்து குறித்து நாடாளுமன்றத்திலும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை விரிவாக விளக்கமளிப்பார் என்று தெரிகிறது.
விபத்து குறித்த அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக மாலை 5 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை புறப்பட்டுச் சென்றார். விபத்து குறித்து சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
பயணித்தவர்கள் யார் யார்?
டெல்லியில் இருந்து சூலூருக்கு சிறப்பு விமானத்தில் பிபின் ராவத்துடன் அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்டினன்ட் கர்னர் ஹஜிந்தர் சிங், ராணுவ அதிகாரிகளான என்.கே.குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சப்டால் உள்ளிட்ட 9 பேர் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு இவர்களுடன் மேலும் 5 பேர் ஹெலிகாப்டரில் சென்றதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read – Dam safety bill: அணை பாதுகாப்பு மசோதா என்ன சொல்கிறது… மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?