`பண்ணையாரும் பத்மினியும்’ மலர்விழி, `தர்மதுரை’ அன்புச் செல்வி, `காக்கா முட்டை’ அம்மா, ‘கனா’ கெளசல்யா என யதார்த்த தமிழ் முகங்களைத் திரையில் பிரதிபலிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில், குறுகிய காலத்திலயே ’அபார நடிப்புத் திறமை கொண்ட நடிகை’ என பெயரும் வாங்கியிருக்காங்க. இன்னைக்கு நமக்கு எல்லோருக்கும் பிடிச்ச நடிகையா இருக்குற, இவங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களும், அதனால, இவங்க பட்ட கஷ்டங்களும் ஏராளாம். சொல்லப்போனால் இவங்களோட சினிமா கெரியர் கொஞ்சம் கரடுமுரடானது. அதைத்தான் விரிவா இந்த கட்டுரைல பார்க்கப் போறோம்.
ஆரம்பக் காலக்கட்டம்!
ஆந்திரால, ‘ராம்பந்து’ங்குற தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், முழுக்க முழுக்க தமிழ் சூழலிலேயே வளர்ந்தவர். கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் நடனத் திறமையை வெளிப்படுத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராவும், தொகுப்பாளராகவும் தன் கெரியரை துவங்கினார். முதல் படமாக அவர் கதாநாயகியாக நடித்த ‘நீதானே அவன்’ அவருக்கு எந்த கவனத்தையும் வாங்கித் தரலை. இன்னும் பல படங்கள் சரியான கவனத்தை இவருக்கு வாங்கித் தரலை. கேரக்டரும் கொஞ்சம் சுமாராகவே இருந்தது.
2012-ல் வெளியான அட்டக்கத்தியில ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னோட நடிப்பால கவனம் ஈர்க்க ஆரம்பிச்சாங்க. அந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில மட்டுமே நடிச்சிருந்தாலும், ஐஸ்வர்யாவோட கதாபாத்திர வடிவமைப்பும் அதில் அவர் தன்னை அழகா வெளிப்படுத்திய விதமும், வளர்ந்துவர்ற நடிகைக்குத் தேவையான கவனத்தை வாங்கிக் கொடுத்தது. ஆரம்பத்துல உங்க நிறத்துக்கு நீங்க நாயகியாவா?, ஏங்க உங்களுக்கு இந்த வேண்டாத நடிப்பு ஆசை, வேற வேலை இருந்தா பாருங்கனு வரிசையான நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்த இயக்குநர்கள் ஏராளம். அதுக்கெல்லாம் பதிலடி கொடுக்க சரியான நேரத்துக்கு காத்திருந்தாங்க, ஐஸ்வர்யா ராஜேஷ்.
அட்டகத்திக்கு அப்புறமா ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களும் வணிக ரீதியா படம் சரியா போகலை. வழக்கம்போல கோலிவுட் வட்டாரத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நிறம் சரியில்லை, வேற வேலை இருந்தா பாருங்கன்ற வார்த்தைகளுடன், ராசியில்லாத நடிகை என முத்திரை பதித்தது, ஐஸ்வய்ராவோட சினிமா கனவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்க ஆரம்பித்திருந்தது. ஆனால், கூடமேல கூட வச்சு மாதிரியான பாடல்கள் ஓரளவு இமேஜ் டேமேஜ் ஆகாமல் இவரைக் காப்பாத்தினதுனுகூட சொல்லலாம்.
கேரெக்டர்களுக்கான மெனெக்கெடல்!
ஆரம்பத்தில் கிடைத்த கேரக்டர் வாய்ப்பை செய்து வந்தார், ஐஸ்வர்யா ராஜேஷ். தன் நடிப்புக்கு சரியான தீனி போடுற மாதிரி கதையை எதிர்பார்த்து காத்திருந்தார். சரியாக கிடைத்தது மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’. ரெண்டு பசங்களுக்கு அம்மாவா?, கதைல பெயரே இல்லாத கதாபாத்திரம் வேற, அடுத்து பட வாய்ப்புகளே வராதேனு எக்கச்சக்க நெகடிவ் கமெண்ட்ஸ்க்கு மத்தியில நான் பண்றேன்னு திடமா முடிவெடுத்தார், ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த முயற்சிகளுக்கு பலமா பல சர்வதேச அங்கீகாரங்களையும் தேசிய விருதையும் கொண்டுவந்தது, காக்காமுட்டை. கணவன் ஜெயில்ல இருக்க இரண்டு பிள்ளைகளோட தாயா குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் குடிசைப்பகுதி பெண்ணா ஐஸ்வர்யாவோட நடிப்பு மூலம் நடிகையாக அவருடைய முதல் முத்திரையைப் பதித்தார். கமர்ஷியல் படங்களில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய கட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து சினிமா கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வைத்தார். நாயகி என்கிற அந்தஸ்தைவிடவும் கேரக்டர்க்கு முன்னுரிமை கொடுக்குற அந்த அணுகுமுறை, மூலம் தமிழ் சினிமா ரசிகர்களோட கவனத்தை தன்பக்கம் கொண்டுவந்தார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
‘காக்கா முட்டை’க்குப் பிறகு, ஐஸ்வர்யா ராஜேஷின் அசாத்தியத் திறமையை வெளிக்கொணர்ந்த இன்னொரு படம் ‘கனா’. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் சாதாரண விவசாயிக்குப் பிறந்து சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி வீராங்கனையாக சாதிக்கிற பெண்ணாக நடிச்சிருந்தார், ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்துல நடிக்கிறதுக்காக கிரிக்கெட் விளையாட்டில், குறிப்பா பவுலிங்க்கு தீவிரமாகப் பயிற்சி எடுத்து நடிச்சிருந்தார். திரையில நடிப்போட சேர்ந்து ஐஸ்வர்யாவின் உழைப்பும் பயிற்சியும் வெளிப்பட்டது.
ஓடிடியில் நேரடியாக வெளியான க/பெ ரணசிங்கத்தில் வெளிநாட்ல இறந்த கணவனோட சடலத்தை இந்தியா கொண்டுவர போராடுற ஏழைப் பெண்ணாக ஆரியநாச்சியாக ஐஸ்வர்யா நடிச்சிருந்த நடிப்பு மக்கள எல்லோரையும் உருக வைத்தது என்றே சொல்லலாம்.
கதாபாத்திரமாக மாறும் தன்மை!
கிராமப் பெண், நகரங்கள்ல வேலை பார்க்குற ஹைகிளாஸ், லோகிளாஸ் பொண்ணு, குழந்தைகளுக்கு தாய் என எந்த வகையான கதைச் சூழலுக்கும், கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாக தன்னை மாத்திக்கிற அசாத்திய திறமைக்காரர். 21 வயசுல காக்கா முட்டைல இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, 25 வயசுல பள்ளிக்கூடம் போற கெளசல்யா பொண்ணுனு கேரெக்டருக்கு ஏத்த மாதிரி நடிச்சதை சிறந்த உதாரணமா சொல்லலாம்.
Also Read: பாரதிராஜா – வைரமுத்து – இளையராஜா கூட்டணி ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?
நோ கட்டுப்பாடு!
கதாநாயகியாகவும், தேவைப்பட்டா கதையோட நாயகியாகவும் பலவகையான கதாபாத்திரங்களில் மாறுபட்ட நடிப்பை தரக்கூடியவர். நாயகியாக மட்டும்தான் நடிப்பேன்ங்குற கட்டுப்பாடுகள் எல்லாம் அவரோட அகராதியிலயே இல்லனுகூட சொல்லலாம். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்துல சிவகார்த்திகேயனோட தங்கையாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்தார். அதுல அண்ணன் – தங்கச்சி பாசப்போராட்டம்தான் கதை. நாயகனுக்கு இணையாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார், ஐஸ்வர்யா ராஜேஷ். தான் நடிக்குற கதாபாத்திரத்தால், தனக்குக் கிடைக்கும் கமர்சியல் இமேஜை விட, திறமையை வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுப்பவர்.
பலம்
மனிதன், குற்றமே தண்டனை, தர்மதுரை ஆகிய படங்களில் இவர் நடித்தது சாதாரண ஒரு பெண் கதாபாத்திரம். ஆனால், தன் நடிப்பால் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பலம் கூட்டுவது சில அசாத்திய கலைஞர்களுக்கு மட்டுமே உண்டு. தர்மதுரையில் அரை மணிநேரம் மட்டும் வந்து போகும் அன்புச் செல்வியை அள்ளிக் கொண்டாடியதே அதற்கு சாட்சி. ஒரு படத்தில் வெளிப்படுத்தும் ஐஸ்வர்யாவின் கேரக்டர் சாயல், இன்னொரு படத்தில் அறவே இருக்காது. `தமிழ் மனம் மாறாத முகம்’தான் ஐஸ்வர்யா ராஜேஷின் பலம். ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தை மலையாளத்தில் பார்த்த எல்லோருக்குமே, தமிழ்ல ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தக் கதையில் நடித்தால் நல்லா இருக்கும்னு தோணினதுதான் ஐஸ்வர்யா ராஜேஷ்ங்குற நடிகை தமிழ் சினிமாவுல பதிச்ச தனிமுத்திரை.
பேன் இந்தியா ஸ்டார்!
துல்கர் சல்மான்கூட ’ஜோமோண்ட்டே சுவிசேஷங்கள்’, நிவின் பாலிகூட ‘சகாவு’னு மலையாளத்தில் குறிப்பிடத்தக்க படங்கள்ல நடிச்சிருக்காங்க. ‘டாடி’ங்குற இந்தி சினிமாவுல அர்ஜுன் ராம்பாலோட சேர்ந்து கலக்கியிருப்பாங்க. தெலுங்குல விஜய் தேவரகொண்டாவோட ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்தில் நடிச்சிருப்பாங்க.
ஐஷ்வர்யா ராஜேஷ், இன்னைக்கு ஒரு நடிகையாக தொட்டிருக்குற உயரம் அசாதாரணமானது. அசாத்திய திறமை, கடுமையான உழைப்பு, நல்ல கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தன்மை, தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் உயர்வு தாழ்வு பார்க்காத மனநிலை இதெல்லாம்தான் அவரோட வெற்றிக்குக் காரணம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புல உங்களுக்கு பிடிச்ச படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Hey there! Do you know if they make any plugins to help with
Search Engine Optimization? I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good results.
If you know of any please share. Kudos! I saw similar blog here: Warm blankets