கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார், . கன்னட மக்களால் `சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் அளவுக்குப் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர், அப்பு என்கிற புனித் ராஜ்குமார்.
நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த 1975-ம் வருடம் மார்ச் 17-ம் தேதி சென்னையில் பிறந்தவர். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்- பர்வதம்மா தம்பதியரின் கடைசி மகன். இவரது அண்ணன்கள் கன்னட ஸ்டார்களான சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார். வீட்டில் கடைக்குட்டி என்பதால் ரொம்பவே சுட்டி. இவரது 6 வயதில் குடும்பம் சென்னையிலிருந்து மைசூருக்குக் குடிபெயர்ந்தது. புனித் ராஜ்குமார் அவரது குடும்பத்துக்கே ரொம்ப ஸ்பெஷல். பிறந்த ஒரு வருடத்திலேயே 6 மாத குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரது மூத்த அண்ணன் சிவராஜ்குமார் முதல் முதலாக அறிமுகமாகிய படம் `ஆனந்த்’. வெளியான வருடம் 1986. அதற்காக சினிமா எக்ஸ்பிரஸ் ஸ்டார் விருது பெறுகிறார். ஆனால் 1983-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் 2 விருதுகளையும், 1985-ம் வருடம் குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் வாங்கியவர். நடிப்புத் துறையில் அண்ணன்கள் இருவரையும் விட லேட் என்ட்ரி கொடுத்திருந்தாலும் விருதுகளை வேகமாக அள்ளியது என்னவோ புனித் ராஜ்குமார்தான். அதற்கு முன்னர் வசந்த கீதா, பாக்யவந்தா, சாலிசுவ மொதகலு, உள்ளிட்ட பல படங்களில் குழந்தையாக நடித்திருந்தாலும் எரடு நட்சத்திரகலு, பெட்டடா ஹூவு படங்கள்தான் புனித் ராஜ்குமாருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
`ஹீரோ’ புனித் ராஜ்குமார்
ஒரு வயதுக்கு முன்னரே சினிமாவில் அறிமுகமானாலும், இவரது ஹீரோ என்ட்ரி 27 வயதில்தான். பூரி ஜெகநாத் இயக்கிய `அப்பு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் தமிழில்தம்’ என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அறிமுகமான முதல் படத்திலேயே நடிப்பு, நடனம் என முத்திரை பதித்தார். நாடோடிகள், போராளி ஆகிய படங்களின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார். த்ரிஷாவுடன் நடித்த பவர் திரைப்படம் அதற்கு முன்னர் மைல்கல்லாக இருந்த பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை துவம்சம் செய்தது. அதேபோல 2017-ம் வருடம் தனது தந்தை பெயரில் இவர் நடித்த `ராஜகுமாரா’ படம் குடும்பங்களின் ஏகோபித்த வரவேற்பில் மீண்டும் பாக்ஸ் ஆபீஸை அலறவிட்டது. பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், அப்பு என்ற செல்ல பெயர்களில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். ஆனால், கன்னட சினிமாவினரால் ‘கமர்ஷியல் சினிமாக்களின் பில்லர்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு.
தொடர்ந்து அப்பு, ஜாக்கி, வம்சி, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். அறிமுகமாகிய சில வருடங்களிலேயே பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவானார். இவரது படம் ஹிட்டோ, ப்ளாப்போ ஆனால் வசூல் எப்போதுமே டாப்தான். இவரது கடைசிப் படம் ஓடிடியில் வெளியான யுவரத்னா. ஓடிடியில் வெளியாகியும் படம் பிளாக்பஸ்டர் ஹிட். அடுத்த படமான ஜேம்ஸ், நடிகை பிரியா ஆனந்துடன் நடித்து போஸ்ட்புரெடக்ஷனில் இருக்கிறது. இவரது படங்களில் டூப் போடாமல் நடிக்கக் கூடியவர். பின்னணி பாடகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சிறந்த நடனம், நடிப்பு என பல ஏரியாக்களிலும் கில்லி. 19 விருதுகள் வாங்கியிருக்கிறார். அதில் ஒரு தேசிய விருதும், 3 மாநில அரசு விருதுகளும் அடங்கும். திரையில் மட்டுமல்ல, கர்நாடக மாநில பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.
கன்னட சினிமா உலகில் ‘குடும்பங்களின் நாயகன்’ என்ற பெயரை புனித்தின் தந்தை ராஜ்குமார் பெற்றிருந்தார். அந்த பெயரைக் கடைசி வரை நிலை நிறுத்தப் போராடியவர் புனித் ராஜ்குமார். ஹீரோவாகி சரியாக 20 வருடங்கள் ஆகப் பெரும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்களைக் கொடுத்தவர். அப்பா, அண்ணன்கள் என சினிமா பின்புலம் இருந்தாலும் கூட குடும்பங்களின் மனதைக் கவர்வது என்பது எல்லோராலும் முடியாத ஒரு காரியம். மொத்தம் 29 படங்கள் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது ரசிகர்களுக்கு வயது வித்தியாசம் கிடையாது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரைக்கும் இவருக்கு ரசிகர்கள்தான். கன்னட ரசிகர்களால் நிச்சயமாக இந்த செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. 46 வயதில் ஏற்க முடியாத இழப்பு என கன்னட சினிமா உலகினரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.