ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பிய மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?
மதுரை சத்யசாய் நகரில் இருக்கும் சாய்பாபா கோயில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரை வந்திருக்கிறார். அவரது வருகையையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி மாநகராட்சி உதவி ஆணையர் மாநகராட்சி ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்த சுற்றறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களைத் தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தால், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும். அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறால் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து முண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 20-ம் தேதி அவர் அனுப்பிய இந்த சுற்றறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வருகைக்காக பிரதமர், முதலமைச்சர் வருகைக்கு இணையாக சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாநகராட்சி ஊழியர்களை உதவி ஆணையர் பணித்திருந்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், உதவி ஆணையர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், உதவி ஆணையர் சண்முகத்தைப் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அவரை நியமன அலுவலர் முன்னிலையில் ஆஜராகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – விஜய்யின் செம்ம ஸ்பெஷல் டான்ஸ்.. காரணம் இவங்கதான்!